ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்
ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம் -- முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி. மிஸ் காதரீன் மேயோ (American historian - Katherine Mayo, 1867-1940) என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்தார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் இந்திய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில், கப்பலில், அன்றைய பம்பாய்த் துறைமுகம் வந்து இறங்கிய அவர், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். மகாத்மா காந்தி உட்படப் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்துப் பேட்டி கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், பிரிட்டிஷ் இந்தியாவில் தான் கண்டவற்றை, கேட்டவற்றைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார். அதற்கு "மதர் இந்தியா" என்று பெயரிட்டார் (இது பின்னர் இந்திய மொழிகளிலும் வெளியானது. தமிழில் அன்னை இந்தியா, இந்திய மாதா, இந்தியத்தாய்). 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நூல் வெளியாகி இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் அதன் பிரதிகள் வந்தடைந்தன. அந்நூல் இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காரர்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்திலும...