குமரகுருபரரும் பாவேந்தரும்
குமரகுருபரரும் பாவேந்தரும் -முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி பாவேந்தர் என்று போற்றப்படும் பாரதிதாசன் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையே கற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதியும் சமயம் சார்ந்தவையே. பாரதிதாசன் பகுத்தறிவு இயக்கக் கவிஞர் ஆனதால் சமய இலக்கியங்களிலும், புராணங்களிலும் பெரிதும் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும் கூட, அவ்விலக்கியங்களின் தமிழ் அமுதினைத் தாவிப் பருகத் தயக்கம் கொண்டாரில்லை. கம்பனின் தமிழில் அவர் முற்றும் தோய்ந்தவர். தன் மகனுக்குத் தமிழ்ப் பாடம் கற்றுத் தரத் தொடங்கிய தமிழ் ஆசிரியரிடம் திருவிளையாடல் புராணத்தை முதலில் கற்றுத்தரச் சொன்னவர். பக்தி மறுப்புப் பாதையில் அவர் பயணித்தாலும் பக்தியும், தமிழும் இணைந்திருந்த பாத்திரத்தில் தமிழை மட்டும் தனித்துப் பருகும் அற்புதம் அறிந்தவர். அவரது சமய இலக்கிய ஈடுபாட்டில் அவருடைய ஆசிரியர்கள் பங்காரு பத்தர், திருப்புளிசாமி அய்யா ஆகியோருக்கும் நிறைந்த பங்குண்டு. சங்க இலக்கியத்தின் தமிழையும் தாண்டி, சமயவாதி ஒருவரிடம் பாரதிதாசன் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் என்றால், அவர் மாபெரும் த...