மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்
மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள் இறைக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள் அனைவருமே மனிதர்கள்தான். ஆனால் அப்படிச் சொன்னால் இறைவனை உருவாக்கியவன் மனிதனே என்ற உண்மை எளிதில் விளங்கிவிடும் என்பதனாலேயே இறைக் கோட்பாட்டைச் சொன்னவர்கள் தேவர்களுக்கு இணையான ஞானிகள் (ரிஷிகள்) என்றும், அவர்கள் மொழிந்த கோட்பாடுகள் வேதங்கள் என்றும், இவற்றிற்குக் காலங்கள் இல்லை என்றும், இதன் மொழி தேவனால் மொழியப்பட்டது என்றும் கட்டமைக்கப்பட்டு, அதைக் காலங்காலமாய் யாரும் அறியாமல் காத்து நின்று, இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவில், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டும், பரப்பியும் வந்தார்கள், அதில் நன்மையும், அதிகாரமும் பெற்றவர்கள். அதாவது பொருளை (இயற்கையை) மறை (வேதம்) ஆக்கி, அதை மறைபொருளாக ஆக்கி வைத்து விட்டார்கள். இம்மறை பொருளின் உண்மையைத் தேடுவதே மெய்ஞானம் என்றும், அதைத் தேடுவோரே ஞானிகள் என்றும், அது தேடுவோர் அனைவருக்கும் அகப்படாது என்றும், பிறப்பினால் உயர்ந்தோரே அதை அடைய முடியும் என்றும், தேவநெறி, வேதம், சாத்திரம், மனுதர்மம் இவை அனைத்தும் பிரம்மம் என்ற ஒன்றே என்றும், அதற்குத் தாங்கள் மட்டுமே உரியவர்கள் என்றும், தங்களை...