குமரகுருபரரும் பாவேந்தரும்
குமரகுருபரரும் பாவேந்தரும்
-முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி
பாவேந்தர் என்று போற்றப்படும் பாரதிதாசன் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையே கற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதியும் சமயம் சார்ந்தவையே. பாரதிதாசன் பகுத்தறிவு இயக்கக் கவிஞர் ஆனதால் சமய இலக்கியங்களிலும், புராணங்களிலும் பெரிதும் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும் கூட, அவ்விலக்கியங்களின் தமிழ் அமுதினைத் தாவிப் பருகத் தயக்கம் கொண்டாரில்லை. கம்பனின் தமிழில் அவர் முற்றும் தோய்ந்தவர். தன் மகனுக்குத் தமிழ்ப் பாடம் கற்றுத் தரத் தொடங்கிய தமிழ் ஆசிரியரிடம் திருவிளையாடல் புராணத்தை முதலில் கற்றுத்தரச் சொன்னவர். பக்தி மறுப்புப் பாதையில் அவர் பயணித்தாலும் பக்தியும், தமிழும் இணைந்திருந்த பாத்திரத்தில் தமிழை மட்டும் தனித்துப் பருகும் அற்புதம் அறிந்தவர். அவரது சமய இலக்கிய ஈடுபாட்டில் அவருடைய ஆசிரியர்கள் பங்காரு பத்தர், திருப்புளிசாமி அய்யா ஆகியோருக்கும் நிறைந்த பங்குண்டு.
சங்க இலக்கியத்தின் தமிழையும் தாண்டி, சமயவாதி ஒருவரிடம் பாரதிதாசன் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் என்றால், அவர் மாபெரும் தமிழ்க் கவிஞரான குமரகுருபரர் ஒருவரிடம்தான். 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநல்லூர் அருகே, தாமிரபரணி ஆற்றங்கரையில், ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர் குமரகுருபரர் (1625-1688). மதுரைத் திருமலை நாயக்கர் மன்னரால் ஆதரிக்கப்பட்டவர். தில்லை நடராசரைத் தரிசித்துப் பண்டார மும்மணிக்கோவை பாடிய பின்னர் குமரகுருபர சுவாமிகள் என்று அழைக்கப் பெற்றார். தொடர்ந்து புகழ்பெற்ற கோயில் தலங்களுக்குச் சென்று பக்தியுடன் பாடல் இயற்றி வந்தார். கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசித் துண்டி விநாயகர் பதிகம் உள்ளிட்ட 16 நூல்களை இயற்றி இருக்கிறார். தொடர்ந்து சைவத் தொண்டில் ஈடுபட்டு, காசி வரை சென்று, சைவ மடம் நிறுவி இறுதியில் வாரணாசியில் 1688 ஆம் ஆண்டில் காலமானார் குமரகுருபரர்.
குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை,
சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர், வே. செ. சொக்கலிங்கனார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் பாடி உள்ளனர்.
பாரதிதாசன் நெஞ்சில் இளமை முதலே ஆட்சி செலுத்தி வந்தவர் தான் குமரகுருபரர். "குமரகுருபரர் ஒரு மகாகவி" என்று கூறும் பாரதிதாசன், "பழைய நூல்களில் குமரகுருபரர் வாழ்க்கை வரலாறாகக் கற்பனை செய்திருப்பது கூட ரசமாக இருக்கிறது" என்று 'எதிர்பாராத முத்தம்' நூலின் முன்னுரையில் கூறி இருப்பதிலிருந்து, குமரகுருபரரின் படைப்புகளில் மட்டுமல்ல அவரது வாழ்க்கைச் செய்திகளிலும் பாரதிதாசனுக்கு இருந்த ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. குமரகுருபரரின் சமயத் தொண்டு, சைவப் பரப்பல் ஆகியவற்றை விடவும் அவருடைய தமிழே தம்மை ஈர்த்தது என்பதைப் பாரதிதாசன், "அத்தமிழ்க் கவிஞர் அளித்த நறுங்கவிதைகளையும், அத்தமிழரின் வாழ்க்கை வரலாறையும் இச்சிறுநூல் தமிழ்நாட்டார்க்கு நினைவுறுத்துவதாக இருக்கட்டும்" என்று தமது 'எதிர்பாராத முத்தம்' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மூலம் நன்கு தெளியலாம்.
பாரதிதாசன் இயற்றிய குறுங்காவியம் ஆன 'எதிர்பாராத முத்தம்' என்னும் நூல் 1941 ஆம் ஆண்டு சின்னக் காஞ்சிபுரம் (ஜைனக் காஞ்சிபுரம்) வானம்பாடி நூற்பதிப்புக் கழக வெளியீடாக, அறிஞர் அண்ணா அவர்களின் மைத்துனர் டி. பி. எஸ். பொன்னம்மா அவர்களால் வெளியிடப்பட்டது. பொன்முடி - பூங்கோதை காதலில் தொடங்கி, வணிக நிமித்தம் பொன்முடி வடநாடு செல்ல, அங்கு ஆரியர்களால் யாகத்தை இகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பொன்முடி கொல்லப்பட, அவனைத் தேடிச் சென்ற பூங்கோதை தானும் சாகிறாள் என்ற துன்பியல் முடிவோடு எதிர்பாராத முத்தம் என்னும் காவியம் நிறைவடைவது போல் தோன்றினாலும், அதன் இரண்டாம் பாகமாகக் குமரகுருபரரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அந்நூலிலேயே இணைத்திருக்கிறார் பாரதிதாசன். எதிர்பாராத முத்தம் போன்ற காதலும், சீர்திருத்தமும் கூறும் இலக்கியத்திற்குக் குமரகுருபரரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய இரண்டாம் பகுதி வலிந்து புனையப்பட்டது என்ற ஒரு கருத்து எதிர்பாராத முத்தம் நூல் வெளிவந்த காலத்திலேயே (1941) பலராலும் கருத்துரைக்கப்பட்டது.
இரண்டாம் பகுதி திணிக்கப் பெற்றதுதான் என்ற கருத்தை எதிர்பாராத முத்தம் முதற்பதிப்பு நூலின் சிறப்புரையில் தன் கருத்தாகக் கூறும் சாமி சிதம்பரனார், "பிற்பகுதி பழைய புராணம் போன்ற தொடர்புடையதாக இருக்கும் படி இந்நூலை அமைத்த தோழரின் கருத்தை நம்மால் உணர முடியவில்லை" என்று கூறிவிட்டுக் கூடவே "ஆரியர்களின் உயிர்க்கொலை வேள்வியை எதிர்ப்பது தென்னாட்டுச் சைவ சமயத்தின் கொள்கை என்ற கருத்தில் அக்கதை இணைக்கப்பட்டு இருக்குமாயின் அதை நாம் பாராட்டுகிறோம்" என்று தமிழுக்காகச் சமயத்துடன் சமரசம் செய்து கொள்வதைக் கண்டும் காணாமல் விட்டுப் போய் விடுகிறார். தான் குமரகுருபரரின் வரலாற்றைச் சேர்ப்பதனால் எழப்போகும் விவாதங்களைப் பற்றித் தெரிந்தும் பாரதிதாசன் துணிச்சலாக அதைச் சேர்த்திருக்கிறார் என்பதுதான் இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகும். இதன் மூலம் குமரகுருபரரிடம் பாரதிதாசனுக்கு இருந்த ஈடுபாட்டைத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும்.
குமரகுருபரரின் வரலாற்றில் பாரதிதாசன் ஈடுபாடு கொண்டதற்கு மற்றுமொரு காரணம் உண்டு. குமரகுருபரருடைய வரலாற்றில் அவர் வடநாடு சென்றதற்கான காரணம் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது அவர் கருத்து. முருகக் கடவுளின் ஆணைப்படி குமரகுருபரர் ஒருசமயம் வடதிசை சென்றார் என்றும், தமது ஆசானான மாசிலாமணி தேசிகரின் ஆணைப்படி சைவ சமயத் தொண்டிற்காகக் காசிக்குப் போய்ச் சேவை செய்து முடிவில் அவ்விடத்திலேயே இயற்கை எய்தினார் என்றும் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படிக் கிடைக்கின்ற இந்த வரலாற்று நிகழ்வுகளிலிருந்து குமரகுருபரர் எதற்காக வடதிசை சென்றார் என்று ஆய்ந்து, குமரகுருபரரின் வரலாறைத் தன் யூகத்தின் அடிப்படையில் பாரதிதாசன் படைத்து, எதிர்பாராத முத்தம் நூலின் இரண்டாம் பகுதியாக ஆக்கி இருக்கிறார் என்று கொள்ளலாம்.
இந்தக் கருத்துக்கு அடிப்படையாகவும், மேலும் குமரகுருபரரின் வடதிசைச் செலவு பற்றிய பல வினாக்களுக்கு விடையாகவும் 'எதிர்பாராத முத்தம்' முதற்பதிப்பு நூலின் சிறப்புரை அமைகிறது. இந்தச் சிறப்புரையை அளித்தவர் தமிழாசிரியர் கவிஞர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். பாரதிதாசனின் நெருங்கிய தோழரும், தலை மாணாக்கருமான அவர் தனது சிறப்புரையில், "குமரகுருபரர் முருகன் அருளால் ஊமைநிலை நீங்கப் பெற்றதாகவும், அவர் அநேக துதி நூல்களை இயற்றிப் பின் ஞானகுருவாகிய தருமபுரம் பண்டார சந்நிதியை அடைந்து ஞான உபதேசம் செய்யும்படி வேண்டப், பண்டார சந்நிதி சிதம்பரம் போய்வரக் கட்டளையிட, அதன்படிக் குமரகுருபரர் சிதம்பரம் சென்று சிறப்புடன் திரும்பினார் என்றும், பிறகும் சன்னிதி வடக்கே போய்க் கடவுள் பணி செய்து வரக் கட்டளையிட்டார் என்றும் பழைய வரலாறு விரிவாகக் கூறும். ஆயினும் அவ்வரலாற்றில், பண்டார சந்நிதி, குருபரரை ஏன் வட நாட்டிற்கு அனுப்பினார் என்பதற்குக் காரணம் ஒன்றுமே கூறப்பட்டில்லை. ஆசிரியர் பாரதிதாசன் அவர்கள் எழுதியுள்ள இந்த 'எதிர்பாராத முத்தம்' அதற்குத் தகுந்த காரணத்தைக் கூறுவதாக இருக்கிறது" என்று கூறி இருப்பதிலிருந்து குமரகுருபரரின் வடதிசைப் பயணம் பற்றிய ஆய்வு காரணமாகத்தான் அவரது வரலாறை பாரதிதாசன் 'எதிர்பாராத முத்தம்' நூலில் இரண்டாம் பகுதியாகச் சேர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.
குமரகுருபரரின் (1625-1688) வடதிசைப் பயணம் தொடர்பான மிக அரிய செய்தி ஒன்று உண்டு. அது இசுலாமிய அரசப் பரம்பரையினரும், கலை, தத்துவம், வரலாறு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவரும், 'மஜ்மா-உல்-பஹ்ரைன்' என்ற சமயங்கள் குறித்த ஆய்வு நூல் எழுதிய அறிஞருமான தாரா சிகோஹ் (1615-1659) என்பவரைக் குமரகுருபரர் சந்தித்த நிகழ்வுதான். இந்தச் சந்திப்பின்போது, குமரகுருபரரின் சமயக் கருத்துக்களை இந்துஸ்தானி மொழியில் கேட்டு மகிழ்ந்த தாரா சிகோஹ், வாரணாசியில் உள்ள கேதார்நாத் கோயில் வளாகத்தில் சைவ மடம் நிறுவிக் கொள்ள இடமும், பொருளும் அளித்திருக்கிறார். இசுலாமியப் பேரரசரான 'ஷாஜகான் - மும்தாஜ் மெஹல்' ஆகியோரின் வாரிசுதான் தாரா சிகோஹ். இசுலாமிய ஞானமரபு வழியைக் கடைப்பிடித்தாலும், பிற சமயங்களின் தத்துவங்களிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்கும் உதவியவரான தாரா சிகோஹ், புதுடெல்லியில் உள்ள உமாயூன் கல்லறையில் அடக்கம் ஆனவர். ஆனால் இந்த வரலாற்று நிகழ்வுகளையும் வழக்கம்போல் புராணக்கதைகளாகத் திரிக்கத் தவறவில்லை நம் தமிழ்ப் புலவர்கள். தன்னை மதியாது ஆசனம் தர மறுத்த சுல்தானின் முன்பாகச் சிங்கத்தின் மேல் அமர்ந்து குமரகுருபரர் உரையாடிய தாகவும், அதுவும் இந்துஸ்தானி மொழி மட்டுமே அறிந்த சுல்தானிடம், இறைவன் அருள் பெற்று, உடனேயே இந்துஸ்தானி மொழியில் சுல்தானுடன் உரையாடியதாகவும் புராணமாகத் திரிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியதுதான் குமரகுருபரரின் வாழ்க்கை நிகழ்வுகள். மேலும், இளவயதில் அவர் ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் சன்னதியில் அருள் பெற்று உடனே பாடியதாகவும், இளமையிலிருந்தே கற்பனையாகத் திரிக்கப்பட்டிருந்த குமரகுருபரரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்துப் பாரதிதாசன் குறிப்பிடும்போது, "பழைய நூல்களில் குமரகுருபரர் வாழ்க்கை வரலாறாகக் கற்பனை செய்திருப்பது கூட ரசமாக இருக்கிறது" என்று கூறி, பழைய நூல்கள் செய்த புலவர்களின் கற்பனைத் திறத்தை 'ரசனை'யாகக் கண்டமைகிறார். அதனாலேயே குமரகுருபரர் வாழ்க்கை வரலாறைக் கவிதையாகவும், வசனமாகவும் சித்தரித்த பாரதிதாசன், இது போன்ற புராணக் குப்பைகளைத் தவிர்த்து வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே தன் பதிவாகப் படைத்து, எதிர்பாராத முத்தம் நூலின் இரண்டாம் பகுதியாக இணைத்து வைத்துள்ளார்.
இந்த எதிர்பாராத முத்தம் நூலின் இரண்டாம் பகுதியைக் குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறாக அமைத்ததோடு, பாரதிதாசனின் குமரகுருபரர் ஈடுபாடு நின்று போய் விட்டதா என்றால் அதுதான் இல்லை. 1941ஆம் ஆண்டு 'எதிர்பாராத முத்தம்' நூலாக உருப்பெற்றது. 1944 ஆம் ஆண்டில் எதிர்பாராத முத்தம் நூலைத் திரைப்படமாக்கும் முயற்சி நடைபெற்ற போது அதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பைப் பாரதிதாசனிடமே ஒப்படைத்தனர் சேலம் மாடர்ன் தியேட்டர் குழுவினர். பாரதிதாசன் எழுதிய அந்தக் கதை வசனம் 'குமரகுருபரர்' என்று தலைப்பிடப்பட்டது. அதன் இரண்டாம் பகுதியாகப் பாரதிதாசனால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியில் 'பொன்முடி - பூங்கோதை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. எதிர்பாராத முத்தம் நூலின் கதாநாயகன் பொன்முடி, இருபத்தொரு அத்தியாயங்களில் வருகிறான். ஆனால் குமரகுருபரர் என்ற படத்தின் கதாநாயகன் குமரகுருபரர்தான். இதில் பொன்முடி - பூங்கோதை காட்சிகள் பதினைந்தாக இருக்க, குமரகுருபரருக்குப் பதினாறு காட்சிகள் அமைகின்றன. எதிர்பாராத முத்தத்தில் குமரகுருபரர் பகுதியை விட்டு விட்டாலும் கதை முழுமையாக இருக்கும். ஆனால் குமரகுருபரர் கதை வசனத்தில் குமரகுருபரரை நீக்கிவிட முடியாது. காரணம் கதையின் மையமாகக் குமரகுருபரரை வைத்துத்தான் கதை மாந்தர்களைச் சுழல விட்டிருக்கிறார் பாரதிதாசன். இந்தக் குமரகுருபரர் கதை வசனம் நூல் வடிவம் பெறவில்லை. 'பொன்முடி' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.
'எதிர்பாராத முத்தம்' கவிதை நூல், 'குமரகுருபரர்' கதை வசனம் ஆகிய இரு காவியங்களிலும் குமரகுருபரர் இடம்பெறுகின்ற காட்சி அமைப்புகள், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயர்ந்த இடம் இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனித்தால் பாரதிதாசனின் நெஞ்சில் குமரகுருபரருக்கு ஒரு தனி இடம் இருப்பது விளங்கும். சற்று ஆழமாகக் கவனித்தால் பொன்முடி பாத்திரத்தில் கூட குமரகுருபரரின் சாயல் சற்றே ஊடுருவி இருப்பது தெரியவரும். உயிர்க்கொலை வேள்விக்கு எதிர்ப்பு, தமிழின் பெருமை பரப்பல் ஆகியவை எல்லாம் பொன்முடியின் கொள்கையாகவும் செயல்பாடுகளாகவும் இருப்பது இரு பாத்திரப் படைப்புகளின் உயர்வு நோக்கியே எனலாம்.
இந்த ஈடுபாட்டின் இயைபு இத்தோடு நின்றுவிடவில்லை. பன்வகைப் பா மரபுகளில் தோய்ந்து, பாவேந்தராகப் பரிணமித்த பாரதிதாசன், முழுமையாகப் பன்னிரு சீர் விருத்தத்தில் ஒரு சிறு நூல் இயற்றியுள்ளார். இந்தப் பன்னிரு சீர் விருத்தப் பா நூலுக்கு அவருக்கு முன்னோடி குமரகுருபரர்தான். 1925 ஆம் ஆண்டில் பாரதிதாசனால் இயற்றி வெளியிடப்பட்ட "மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்" என்னும் குறுநூலில் அனைத்துப் பாடல்களும் பன்னிரு சீர் விருத்தத்தினால் ஆனவையே. எதிர்பாராத முத்தத்தில் இடம்பெறும் "தொடுக்கும் கடவுள்" என்ற குமரகுருபரரின் பாடல் பன்னிரு சீர் விருத்தமே. அதைப் பாரதிதாசனே அந்நூலின் முன்னுரையில், "இந்நூலில் காணப்படும் தொடுக்கும் கடவுள் என்ற இனிய பாடல் குமரகுருபரர் அருள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதிதாசன் தமிழுக்கு அளித்திருக்கும் சிறப்புதான் இந்தப் புதிய செய்திகள் எல்லாம் நமக்குத் தெரிவிக்கும் பழைய செய்திகள். எந்த மலர் என்றாலும் தேனைச் சுவைத்து, சேகரித்துப் பின் மற்றவர்களுக்குக் கிடைக்கக் கொடுக்கும் தேனியைப் போன்று பல தமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழை மாந்தி, அதில் தேவையானவற்றை, அது தேன் போல் வாழ்நாளெல்லாம் வல்லமை செய்யும் மருந்தாக வடித்துக் கொடுத்த பாவேந்தரின் பாங்கு பெரிதும் வியத்தற்குரியது. தமிழ் இலக்கியங்கள் படைத்த தமிழ்ப் புலவர்களில் பெரும்பாலோர் சமண, பௌத்தச் சமயத்தவர்களாக இருப்பதைப் பகுத்தறிவு மார்க்கம் சுட்டிக்காட்டிய போது, திகைத்துப்போன சைவ-வைணவ பக்தி மார்க்கங்கள், பக்தி இலக்கிய காலத்தில் பாடல்களை உயர்த்திப் பிடித்த போது, சைவ மரபினில் தோன்றிய பாரதிதாசன், பகுத்தறிவுக் கவிஞராகப் பரிணமித்த காலத்தில், எத்தகைய தமிழ் இலக்கியம் ஆயினும் அதில் உள்ள சமய அரசியலை மனம் கொள்ளாமல், தமிழ் மொழியின் இனிமை, சிறப்பு ஆகியவற்றை மட்டுமே மனங்கொண்டு இறுதிவரை பயணித்தார் என்பதால்தான் பாரதிதாசன், பாவேந்தர் ஆனார். புரட்சிக்கவிஞரரும் ஆனார்.
துணை நின்றவை:
'எதிர்பாராத முத்தம்', 1941, முதற்பதிப்பு நூல் முன்னுரை.
குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு - 'மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்' நூலில் இணைப்பு.
தமிழ்மணி, தினமணி இணைப்பு, 19.1.1991.
சிவ இளங்கோ, பாவேந்தரும் புதுவைச் சிவமும், ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி, 1989.
Google, Wikipedia.
கருத்துகள்