தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
ஒரு காலத்தில் ஓங்கிய தெய்வம்
வருங்கா லத்தில் வழிவழி அடிமை.
தாய்த் தெய்வமென வாழ்ந்த காலத்தில்,
வாய்த்த கடமை மக்கள் பெருக்கம்.
காலத்தால் தெய்வங்கள் தோற்றுப் போயின.
தோற்றவை யெல்லாம் தொண்டு புரிந்தன.
தந்தையர் தெய்வங் களான பின்னர்,
சிந்தையில் திணிப்பு மக்கட் பேறு.
சமயங்கள் உருவாகிச் சரியும் காலத்தில்,
சமணமும் சடுதியில் ஏற்க வில்லை.
நீண்ட மௌனம் நிலவிய பின்னர்,
பௌத்தக் கதவு பிக்குணிக்குத் திறந்தது.
ஆசீவகமும் அறுவகைச் சமயமும்
அன்னையர் பக்கம் திரும்பிய தில்லை.
எழுபிறப் பென்பது ஆணுக்கு மட்டும்;
இருபிறப் பென்பது அவனுக்கும் மேலே.
வாழும் வகையினில் வக்கிரம் ஏற்றிப்
பாழும் வைதிகம் பாவ யோனி என்றது.
விவிலியமும், ஏற்பாடுகளும் ஆணின்
விலாவெ லும்பின் விரிவம் என்றன.
இருப்பும், உருவமும் இல்லை என்றே
இரண்டையும் மறைத்தது இசுலாம் மார்க்கம்.
யூத மதத்தின் புனிதச் சுவர்களில்
பூதமும் உண்டு; பூவையர் இல்லை.
வகாபியம் கண்களை மட்டும் விட்டது.
பெண்ணைத் தொட்ட தத்துவ ஜென்களைக்
கன்பூ சியசும் கதைக்க வில்லை.
ஷிண்டோ, பகாய், சீக்கியம், எல்லாம்
சேடியர் முறையைச் சேவகமாய்க் கொண்டன.
தாவோ என்பதில் தாய்மை இல்லை.
ஜோரோ அதுபற்றிச் சொல்லவு மில்லை.
உறுகொள் உணர்ச்சி உழலும் உறுப்பினை
அறுப்பதும், தைப்பதும் ஆப்பிரிக்கப் புனிதங்கள்.
மோனா, பாலி, மிருகவியம் என்று
நாலா யிரத்து முன்னூறு மதங்களும்,
தீண்டிய பெண்டிரைத் தீண்டாமை என்றன.
அனைத்துமே உலகில் ஆதிக்கம் வென்றவை.
வல்லமை வாழும் தத்துவம் சொல்பவை.
ஆதிக்க வெறியில் ஆண்களும் அடிமையே.
அவனுக்கும் அடிமை அவன்கைப் பெண்டிர்.
வளர்ப்பு மிருகமும் வளரும் அடிமை.
யாரும் காணா யவனம் எவளோ,
யாரும் கேட்டே அறியாதவள் எவளோ
அவளே பெண்ணென அருமறை போதனை.
சூரியனும், சந்திரனும் காணா தவள்தான்
சூரிய வம்சமாய்ச் சோதியில் எரிவாள்.
சோதியில் எத்தனைச் சொலித்து நின்றாலும்,
ஆதி முதலாய் அழுது புரண்டோர்க்கு,
மாதொரு பாகன் கதையைத் தவிர்த்துப்
பாதியும் இல்லை; பகிர்ந்ததும் இல்லை.
இருப்பையும், இருக்கும் உடலையும் சேர்த்து
மறைப்பது ஒன்றே மானுட தர்மம்.
தனித்த அடையாளம், தனித்த பெயரின்றி
இவனின் மனைவி, இவனின் மகள்,
இவனின் தாயார், இவனவள் என்றே
பெயருடன், அடையாளம் பெறாமல் இயங்கி,
ஆணின் கௌரவமாய் அடங்கி நிற்பவளே
அருமைப் பத்தினி; அவளே தெய்வம்.
தெய்வங்கள் எல்லாம் போகும் தோற்றே!
முனைவர் சிவ இளங்கோ
புதுச்சேரி
கருத்துகள்