"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"
"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"
-முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
இந்திய வரலாறில் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த காலகட்டத்தில் (1920 களில்) 1924 ஆம் ஆண்டில் பிறந்தவர் விஜயரங்கம். பிரெஞ்சிந்தியா என்று அறியப்பட்ட புதுச்சேரியில் தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பயின்றார். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் நெஞ்சைப் பறிகொடுத்த விஜயரங்கம், தானும் அதுபோலவே கவிதைகள் எழுதிப் பழகினார். கவிதைப் படைப்புகளுக்காகத் தன்னை தமிழ் ஒளியாக்கிக் கொண்டார் விஜயரங்கம்.
1940 களின் பிற்பாதியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், கவிஞர் தமிழ் ஒளிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதற்கு முன்பே பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த தமிழ் ஒளி, தொடர்ந்து திராவிட இயக்கத்தின் அரசியலோடு இணைகிறார். திராவிட நாடு, தமிழ்நாடு என்று தன் பயணத்தில் பாவேந்தரின் குயில் இதழிலும், அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு இதழிலும் பல கவிதைகளைப் படைக்கிறார். திராவிட மாணவர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, குடந்தையிலும், பண்ணுருட்டியிலும் நடந்த திராவிடர் மாணவர் கழக மாநாடுகளிலும் தமிழ் ஒளி கலந்து கொண்டார். போர்வாள் இதழில் வெளியான கவிதையில் "வட்டிக் கடைக்காரன் வாழ்கிறான் எனில் வந்த விடுதலை யாருக்குடா?" என்று அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் நூலைப் பிரதிபலிக்கிறார் (தமிழ் ஒளி கவிதைகள் 2018:39).
பொதுவுடமை இயக்க அறிமுகமும் அவருக்கு திராவிட இயக்கத்திலேயே கிடைத்து விடுகிறது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மீதிருந்த ஈடுபாட்டினால் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பெரியார் தமிழாக்கம் செய்து 1931 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற பெரியார், சோவியத் ரஷ்யாவுக்கும் சென்று, நவம்பர் 1932 ஆம் ஆண்டில் தமிழ்நாடு திரும்பிய பிறகு, முன்னரே முற்போக்கும், பகுத்தறிவும், சீர்திருத்தமும் இணைந்த லட்சியங்களைக் கொண்ட சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை, சமதர்மச் சித்தாந்தங்களை தன் கொள்கைகளோடு இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. பொதுவுடைமைவாதியாக இருந்த ம. சிங்காரவேலர் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சியிலும் பங்கு கொண்டார்.
பெரியாரின் ஐரோப்பியப் பயணத்திற்குப் பின்னர் சுயமரியாதை இயக்கத்தின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. யாவரையும் தோழர் என்று அழைக்கும், எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டது. பொதுவுடைமை குறித்து விளக்கக் கட்டுரைகளைப் பெரியார் குடியரசில் எழுதினார். 'மே தினம் கொண்டாடுக' என்று தமிழ் மக்கள் அனைவருக்கும் குடியரசு இதழ் வழியாகக் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் திராவிட இயக்கக் கவிஞர்களாக இருந்த பாரதிதாசனும், புதுவைச் சிவமும் பொதுவுடைமைக் கருத்துகள் தாங்கிய ஏராளமான கவிதைகளை இயற்றினார்கள். அவற்றைத் திராவிட இயக்க இதழ்கள் வெளியிட்டன (முனைவர் சிவ இளங்கோ, 2008:72-83).
1942 இல் புதுச்சேரி வந்த பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்திற்கு இவ்விருவரோடும் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய பொதுவுடைமைப் பாடல்களுக்கும் தொடக்க காலத் தொட்டிலாக இருந்தது புதுச்சேரியின் சுயமரியாதை இயக்கமே. "நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்" என்று பட்டுக்கோட்டையார் பாடியது, பிரெஞ்சுப் புரட்சியின் போது 'பாஸ்டீல்' சிறைக் கதவுகளைத் தகர்த்த நிகழ்வினைக் குறிப்பதாகும். அந்த அனுபவம் அவருக்கு புதுச்சேரியில், பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரெஞ்சுப் புரட்சி வெற்றி விழாக் கொண்டாட்டத்தினால் ஏற்பட்டது. அது போலவே தமிழ் ஒளிக்கும் பாரதிதாசன், புதுவைச்சிவம், பட்டுக்கோட்டையார் ஆகிய கவிஞர்களின் தொடர்பினால் பொதுவுடைமைக் கருத்துக்கள் பொங்கும் பாடல்கள் நிறைய உருவாக்கம் பெற்றதைக் காண முடிகிறது. 1940 களின் இறுதியில் தமிழ் ஒளி முழுமையான பொதுவுடைமை இயக்கவாதியாகவே மாறிவிடுகிறார்.
தொடக்கத்தில் பாரதிதாசன் கவிதைகளாலும், அவரது தொடர்பினாலும் திராவிட இயக்க இதழ்களில் கவிதைகள் எழுதி, திராவிட இயக்கக் கவிஞராக வளர்ந்து வந்த தமிழ் ஒளி விரைவிலேயே பொதுவுடைமை வாதியாக வெளிப்படுகிறார். இளமையிலிருந்தே உழைப்பாளிகளின் உயர்வு நோக்கிய அவரது பார்வை உலக நோக்கில் விரிவடைந்த போது, உலகத் தொழிலாளர்களின் வியர்வையை எழுத்தில் வடிக்கும் கலைப் படைப்பாளராகத் தன்னை அடையாளம் காண்கிறார். அப்படிப்பட்ட இலக்கியம் படைக்காதவர்களை நிலப் பிரபுத்துவப் போக்குக்கு உடுக்கை அடிப்பவர்களாகக் காண்கிறார். அதே நேரம் மொழி வளர்ச்சியில் மரபைப் புரிந்து கொள்வதும், அதைக் காப்பதும் நமது கடமை என்கிறார்.
மரபு தவிர்த்த புதுக்கவிதைகளை எழுதியதற்காகப் புதுமைப்பித்தனையும், அதைத் தொகுத்துப் பதிப்பித்ததற்காக தொ.மு.சி. ரகுநாதனையும் கடுமையாகச் சாடுகிறார். இக்கவிதைகளால் "தமிழ் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை" என்ற அளவுக்கும் சென்று விமர்சிக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகச் செயல்பட்டு வந்த மார்க்சியவாதியான தமிழ் ஒளி, சோவியத் இலக்கியம், சீன இலக்கியம் என்று தன் பரவலான வாசிப்பினால், சமூக அமைப்பினை மாற்றும் பணியில் இருந்து விலகிச் செல்லும் இலக்கியங்களையும், அதன் படைப்பாளிகளையும் புறந்தள்ளுகிறார். இக்கண்ணோட்டம் கொண்டு மேலும் துருவி ஆராய்ந்தால் "மாறுதல் அறியா உலகில் வாசம் செய்யும் எண்ணற்ற பழைய கருப்பன்களாகவே இலக்கியப் படைப்புகள் உருப்பெற்றுள்ளன என்பதை உணரலாம்" என்று கூறும் அவர், அப்படிப்பட்ட இலக்கியவாதிகள் யாராக இருப்பினும், இயக்கம் சார்ந்த இதழாக இருப்பினும் விடவில்லை. "கொள்கை, கொள்கை என்று வாய் கிழியக் கத்திக்கொண்டு குருட்டுத்தனத்தின் உறுதிமிக்க கால்களில் உருண்டு புரளும் அக்கும்பல் எதுவாயினும், அக்கும்பலால் சிறந்த இலக்கியம் படைக்கப் பெறுதல் இல்லை என்பது வரலாறு உணர்த்தும் உண்மை" என்பதும் அவரது பார்வையாக உள்ளது (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:124).
"நேற்று வரை தலை குனிந்து நின்றவன் இன்று தலை நிமிர்ந்தால் வீறு பிறக்காதா?" என்று கேள்வி எழுப்பி, "இத்தகைய உணர்ச்சியைப் பாடக் கவிஞர்கள் எங்கே? எழுத்தாளர்கள் எங்கே? இலக்கியம் எங்கே?" என்று கேட்கும் ஒரு கட்டுரை, அவர் காலத்துப் படைப்புகள் இலக்கியமாக இல்லை என்பதற்குத் தமிழ் ஒளி தரும் சான்றிதழ் (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:127).
மார்க்சியம் அறிந்தவர்கள் எதையுமே அந்த அளவு கோளிலேயே அடக்கி மதிப்பிடுவார்கள் என்பது பொதுவான கருத்து. தமிழக இலக்கியங்கள் குறித்த தமிழ் ஒளியின் மதிப்பீடுகளும் அவ்வகையிலேயே அமைந்துள்ளதைக் காண முடிகிறது. உலக இலக்கியவாதிகளை வழி நடத்தும் விக்டர் ஹ்யூகோ, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி பாணியில் எழுத முயன்றவர்கள் பலர். அதில் வெற்றி பெற்றவர் தமிழ் ஒளி. "இந்திய யூனியனில் (1948 களில்) தடை செய்யப்பட்ட கட்சியின் கலைக் குரலாக தமிழ் ஒளியின் குரல் ஒலித்தது" என்று உயிரோவியங்கள் (சிறுகதை) நூல் முன்னுரையில் இன்குலாப் மதிப்பிடுகிறார் (உயிரோவியம் 1989:5-8). அது 'கலக'க் குரலாகவும் ஒலித்தது என்பதையும் அச்சிறுகதைத் தொகுப்பு உணர்த்துகிறது. பொதுவுடமைக் கட்சியின் தீவிர உறுப்பினராக (1947) இருந்தவர், அது தடை செய்யப்பட்ட சூழ்நிலையில் இயக்க ஆதரவு ஏடான முன்னணி இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் (1948) (தமிழ் ஒளி கவிதைகள் 2018:303). தமிழ் ஒளி காலத்து இலக்கியவாதிகளைப் பற்றிய தமிழ் ஒளியின் மதிப்பீடும் அவரது இலக்கியத் தரத்தை உணர்த்தும். "இன்றைய இலக்கியம் இத்தகு சமூகக் கொள்கையினின்றும் விலகி, வியாபாரம் என்கின்ற மூக்கணாங்கயிற்றை மாட்டிக் கொண்டு, அக் கயிறு சுண்டுகிற பக்கமெல்லாம் துள்ளி ஓடுவதைக் காண்கிறோம். இவ்வாறு சந்தையை நோக்கி ஓடும் குருட்டு இலக்கியங்களிடையே டால்ஸ்டாய்கள் தோன்றுவதோ, விக்டர் ஹ்யூகோக்கள் எழுதுவதோ, செகாவ்கள் பிறப்பதோ இல்லை" என்று இலக்கிய நயத்துடன் விமர்சிக்கிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:131).
திராவிடர் இயக்கம், பொதுவுடமை இயக்கம் என்று தொடர்ந்திருந்த கவிஞர் தமிழ் ஒளியின் அரசியல் பயணத்தில், அவரது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இயக்கப் பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கட்சி அரசியலும் அவரது மன, உடல் நிலைகளைப் பாதித்தது. குடியரசு, திராவிட நாடு, போர்வாள், குயில் என்று தொடங்கிய தமிழ் ஒளியின் இதழ்ப் பங்களிப்புகள் பொதுவுடைமைக் கருத்தியல் தாக்கத்தால் முன்னணி, மனிதன், ஜனசக்தி, அலை ஓசை, சோசலிஸ்ட், சுதந்திரம் என்று பயணித்து, கலைமகள், சுதேசமித்திரன், காந்தி வழி, பாரதம் என்று மாறுதல் அடைகிறது. ஆனாலும் சமூகப் பிரச்சனைகள் குறித்து அவரது படைப்புகள் தொடர்ந்து இதழ்களில் வெளிவந்து கொண்டு தான் இருந்தன. சோவியத் நாடு இதழ், செஞ்சீன இதழ்கள் அவரை தேசியப் பார்வையில் கொண்டு நிலைக்கச் செய்தன. நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்களையும், காங்கிரஸ் அரசாங்கத்தின் நில உச்சவரம்புத் திட்டத்தையும், சோவியத் நாட்டின் கூட்டுப் பண்ணைத் திட்டங்களையும் அவர் சமூக மாற்றத்திற்கான காரணிகளாகக் கண்டார். ஆகையால் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரித்துத் தீருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், இவ்வகையிலேயே படைப்புகள் இயற்றப்பட வேண்டும்; இலக்கியங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் எழுதினார். "சமூக மாற்றம் என்ற அறிவியல் கண்ணோட்டம் இல்லாத தற்கால இலக்கியம், உப்பு, சப்பற்ற வறட்டுத் தன்மையைக் கொண்டது" என்றார். "எழுத்தாளன் என்பவன் சமூகத்தைச் செப்பனிடும் சிற்பி அல்லவா?" என்றும், 1960 ஆம் ஆண்டு 'பாரதம்' என்ற இதழில், 'இலக்கியம் எங்கே?' என்ற தொடர் கட்டுரையில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:121-138).
காலம் காலமாக நிலப் பிரபுத்துவம் தொடுத்த தாக்குதல்கள் தான் பொருளாதாரச் சமத்துவமற்ற நிலைக்குக் காரணம். நிலப் பிரபுத்துவ சமூகம் அறியாமையை விதைத்து விட்டதன் காரணமாய்த் தாய்மொழிப் பயிற்சி குன்றி இருத்தல் இயற்கையே; அம் மொழி உணர்ச்சியைத் தூண்டுவதும் ஜனநாயகக் கடமையாகும் என்று அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் மொழி உணர்ச்சிக்கு எதிராகவும், கல்வியை மறுக்கவும் நிலப்பிரபுத்துவம் தொடுத்த தாக்குதலே ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் என்கிறார். நிலப் பிரபுத்துவ அமைப்பு முறையைக் குத்திக் கிழித்தெறியும் நையாண்டிப் படைப்புகளே இன்றைய இலக்கியத்தில் பங்கு பெறுதல் வேண்டும்; அந்த வகையில் விந்தன் எழுதிய 'பசி கோவிந்தம்' என்ற நையாண்டி இலக்கியம் ராஜாஜியின் 'பஜகோவிந்தம்' என்பதன் மேல் விழுந்த அடி என்று கூறி, அது போன்ற எழுத்தாற்றல் படைத்த, சமூக மேம்பாட்டுக்காக இலக்கியக் கட்டமைப்பைக் கொண்ட படைப்புகளைத் தர வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த வழியில் நாட்டின் ஐந்தாண்டுத் திட்டத்தால் சமூக அமைப்பில் ஏற்படும் மாறுதலைச் சித்தரிக்க முயன்று வெற்றியும் அடைந்ததாகக் 'கங்கை' இதழில் தன்னால் எழுதப்பட்ட 'குருவிப்பட்டி' என்னும் சிறுகதையைக் குறிப்பிடுகிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:123-137).
ஒரு கட்டத்தில் திராவிட நாடு வேண்டிப் பாடிய கவிஞர் தமிழ் ஒளி, பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் இருந்த போதிலும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முகிழ்த்த காலங்களில் (1947, 1960) தமிழ்நாட்டு விடுதலை வேண்டிப் பாடுகிறார். "தெக்காணம் எங்கும் எதிர்ப்பொலி கேள்" என்றும், "அணு ஒவ்வொன்றும் தமிழ் என்று தான் ஒலிக்கும்" என்றும், அண்ணாவின் குரலுக்குப் படை நடத்தும் தம்பியாய் இந்தி எதிர்ப்புப் பரணியே பாடுகிறார். (தமிழ் ஒளி கவிதைகள் 2018:221-225).
"தங்கத்துப் புனல் நமது;
தமிழ்நாடு நமது;
வெம்பகைவர் கூடி
அங்கத்தைப் பிளந்தாலும்
அணையாத சுடர் நமதே!"
(தமிழ் ஒளி கவிதைகள் 2018:228).
என்று பாவேந்தரை விஞ்சும் போர்ப்பரணி அவரது தமிழ் உணர்வை வெளிப்படுத்துகிறது.
கவிஞர் தமிழ் ஒளியின் ஆய்வுகள் மிகச் சிறப்பானவை. அவர் பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெறவில்லையாயினும் அவர் நிகழ்த்தியிருக்கும் ஆய்வுகள் முனைவர் தகுதிக்கும் மேற்செல்பவை. இந்தியச் சமயங்கள் குறித்து அவர் ஆழமாக அறிந்திருந்தார். அது, திருக்குறள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்ய இணக்கமாக அமைந்தது. திருவள்ளுவரைச் சமணராக, பௌத்தராக ஆசீவகத்தவராகக் கூறும் பல்வேறு ஆய்வுகள் காலங்காலமாக நடந்து வருகின்றன. திருவள்ளுவரைச் சமண சமயத்தவராகக் காணும் தமிழ் ஒளி, அதைவிட முக்கியமாக, வள்ளுவரை வைதீகப் பார்வையிலிருந்து மீட்டெடுப்பதையே தன் முதல் பணியாகக் கொண்டிருந்தார் என்று கூறலாம். குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், குறட் பாயிரத்தின் குரல்வளையைப் பிடித்து நெறித்து விட்டதாக மதிப்பிடுகிறார் தமிழ் ஒளி. பரிமேலழகர் தன் சைவ ஆகமத்தை விரித்துக் காட்டி, வாசகர்களை வழி மாற்றி அழைத்துச் சென்று விடுகிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார் (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018: கவிஞர் கருத்து,1.6.1959).
திருவள்ளுவரின் பாயிரம் என்பது அது எழுதப்பட்ட காலத்தில் மிகவும் புதுமையானது. கோட்பாட்டின் தலைவரை நேரடியாகச் சுட்டாமல், கோட்பாடுகள் கூறும் வழிமுறைகளைக் குறியீடுகளாக உணர்த்தும் உத்தி அது. ஆகவே, வள்ளுவரின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் ஒளி. அப்படி முதல் குறளில், முதல் குறியீடான 'ஆதி பகவன்' என்னும் சொல் பயன்பாட்டில் மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்யும் தமிழ் ஒளி, "ஆதி பகவன் என்பவர் காணப்படாத கடவுளர் அல்லர்; இயற்கையை ஆராய்ந்து மக்களின் வாழ்க்கையை வகுத்த அருகரான இடபதேவரே ஆதி பகவன்" என்கிறார். உழவை முதலில் கண்டவர் என்பது கருதியே அவருக்குக் காளைச் சின்னமும், இடபதேவர் என்ற பெயரும் அமைந்தது. 'உழந்தும் உழவே தலை' என்ற வள்ளுவரின் குறள் இது பற்றியதே. வேட்டைச் சமூகமாக இருந்தவர்களைக் கொல்லாமை, உயிர் செகுத்து உண்ணாமை என்னும் அறத்தில் நிலைபெறச் செய்வதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். அதேநேரம் மாற்று வழியாக அச்சமூகத்தை வேளாண்மைச் சமூகமாக மாற்றுவதே சரியான வழி என்று மண்ணில் உழுது பயிரிடுவதையும், பண்டமாற்று அறிவையும், கல்வியையும் கண்டு மக்களுக்கு வழங்கி வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கியவர் இடபதேவர் என்கிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:19-20).
அருக சமயத்தின் இருபத்தி நான்கு அறிவர்களில் இடபதேவரே முதன்மையானவர். உலக வாழ்க்கையை வகுத்தவருள்ளும் அவரே முதல்வர். இவ்விரு பொருளும் பொருந்தவே அவரை 'ஆதி பகவன்' என்று அழைப்பது நூல் மரபும், வழக்காறும் ஆகும் என்கிறார். வள்ளுவர் கூறும் எண் குணங்களை அடைதல் மனித ஆற்றலுக்கு உட்பட்டதே. உலகிற்கும் மாந்தர்க்கும் ஆதியாய் நின்றவர் என்று "குணத்தை உணர்த்தாமல், உலகிற்கும் மாந்தர்க்கும் முதற்கண் அறிவு உணர்த்தியவர்" என்று 'எண்' வரிசை பெற்றமையை எடுத்துக் காட்டி, எனவே இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமையே ஆகும் என்று தன் ஆய்வுக்குச் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்கிறார் தமிழ் ஒளி.
பரிமேலழகர் சுட்டும் மூவரும் (சிவன், பிரம்மா, விஷ்ணு) புராணக் கடவுளர்கள். ஆனால் அறிவரின் குணங்கள் மூன்று கடவுள்களுக்கும் பொருந்தாமை அறிக என்பதும் தமிழ் ஒளியின் வாதம். தவப் பேற்றாற் பெருமை எய்தி மக்களால் மலர் தூவி வரவேற்கப்பட்ட இடபதேவர், அம்மலர் மேல் நடந்த செய்தி வரலாறாய் இருக்க, அவ் வரலாற்றினையே 'மலர்மிசை ஏகினான்' என இறந்த காலத்தாற் சுட்டினார் வள்ளுவர். எனவே, "மலர்மிசை ஏகிய வரலாற்றை மறைக்கப் பரிமேலழகர் செய்த கற்பனை, தருக்கவியலுக்கு முரண்பட்டதாகிப் பொருந்தாது ஒழிகின்றமை காண்க" என்கிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:23).
எழுத்துக்களுக்கு அகரம் முதல் காரணம் ஆகாமல், எண் வரிசையில் முதன்மை பெறுகிறது. அகரம் எவ்வாறு எழுத்துக்களின் முதல் காரணம் ஆகாதோ அவ்வாறே ஆதி பகவனும் உலகத் தோற்றத்திற்கு முதல் காரணம் ஆகார் என்பது தெளிவு. அதற்கு மாறாக அகரத்தைக் கூறி அறிவிற்குத் தலைமை பூண்ட ஆதிபகவன் என்னும் இடபதேவரையே அக் குறள் குறிக்கின்றது. ஆதி பகவனே உலகிற்குத் தலைவர் என்பதனை முதல் குறள் கூற மற்ற ஒன்பது பாக்களும் அந்தப் பகவனின் பண்பை விளக்குகின்றன. எனவே, குறட்பாயிரத்தின் மதம் "பிறிதொடு படாஅன் தன் மதங் கொளல்" எனும் மதமாம். இதற்கு, பிறர் மதத்தோடு கலவாதவனாய்த் தன் மதத்தையே தான் கொள்ளுதல் என்று பொருள். எனவே, அகரம் முதல் காரணமாகும் பண்பு பெறாது தலைமை பெறும் 'எண்' பெறுகின்றது என்பது தமிழ் ஒளியின் வாதம் (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:29).
திருக்குறள் வைதீகத்திற்கு எதிரானது என்னும் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டுமானால் படைத்தல், உருவாக்கம் ஆகியவற்றை இல்லாத ஒன்றின் மேல் ஏற்றிக் கூறாமல், இயற்கையின் இயல்பை ஏற்கும் கோட்பாட்டில் தான் கூற முடியும். அவ்வகையில் "ஆராய்ச்சிக் கண்களால் குறளைக் கண்ட யான், ஆதிபகவனைக் கண்டேன். அருளறத்தைக் கண்டேன். துறைதோறும் குறள் உணர்த்தும் கொள்கைகள் எவையென்றும் கண்டேன்" என்றும், அதனால் "அருக சமயத்தினின்றும் முகிழ்த்த ஒரு தத்துவச் செம்மலரே திருக்குறள்" என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் தமிழ் ஒளி (தமிழ் ஒளி கட்டுரைகள் 2018:16-17).
புத்தரிடமும் தனக்கு இருந்த ஈடுபாட்டைத் தமிழ் ஒளி தனது படைப்புகள் வழிப் பதிவிட்டு உள்ளார். "எல்லா உயிர்களுக்கும் நீதிபலிக்கும் மகானாக விளங்கப் போகும் நீதிக்கு உரியவர்" என்றும், "பொய்ச்சுமை நீக்கிய புண்ணியராகப்" புத்தர் வரலாற்று நிகழ்வைக் கூறும் கதைகளைத் தாமரை இதழ் 1960 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது (வனமலர்கள் 2007:139-144). தமிழ் ஒளி இயற்றிய மாதவி காவியத்தின் சந்தம் படிப்பவரை மயக்கி, சிந்தையைக் கவர்ந்து, வியப்பில் ஆழ்த்தி, விந்தை புரிவதாகத் தமிழ்ப் பேராசிரியர்களும், "எப்புறத்தோர்க்கும் ஏந்திய ஒளியாய், எடுத்தணி வித்த எழில்மணிக் கிரீடமாய்த் தொடுத்த பாவியம் மாதவி காவியம்!" என்று தமிழ்ப் புலவர்களும் மாதவி காவிய மகத்துவத்தைப் போற்றுகின்றனர் (மாதவி காவியம் 1995: அணிந்துரை, பாயிரம்) இக்காவியத்தில் வரும் அறவணடிகள் அறங்கூறு காதையில் பௌத்த அறத்தை விளக்கும் குறட்பாக்கள், "புத்தர் அருள்நெறி புவியில் உயர் நெறி" (மாதவி காவியம் 1995:167) என்று போற்றுகின்றன. இறுதியில் இடம் பெறும் துறவுக் காதையில் மாதவி, "கொடும் வாழ்வை விட்டுயர் மாதவர் அடி சேர்குவேன்" என்றும், "காவியாம் உடை கட்டியே அவர் கால்களில் மனம் ஒட்டியே" என்று கூறும் மாதவியின் உரை, திருக்குறள் பாயிரத்தின் 'தாளை வணங்காத் தலை' என்னும் தொடக்க காலப் பாத வணக்கத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். கவிஞரின் இறுதிக் காலத்தில் 'புத்தர் பிறந்தார்' எனும் காவியம் எழுதத் தொடங்கி அதை முடிக்கும் முன்பே அவர் காலமாகிவிட்டார். "அக்காவியம் நிறைவு பெறாதது தமிழின் குறையாக ஆகிவிட்டது" என்று டாக்டர் மு. வரதராசனார் கவலையுடன் குறிப்பிடுகிறார் (தமிழ் ஒளியின் சிறந்த கவிதைகள் 2010:10).
தமிழ் ஒளியின் கவிதைகள் அவரை நுண்மான் நுழைபுலம் கொண்டவராகக் கருத வைக்கின்றன. கவிதை மரபினில் அவர் வழுவாதது மட்டுமல்ல, அப்படி யாரும் வழுவி இருந்தால் யாராகினும் கண்டிக்கும் போக்குக் கொண்டவர். தன் கவிதையைத் திருத்தி வெளியிட்டதால் மரபு சிதைந்து விட்டது என்று அதை வெளியிட்ட இதழுக்குக் கண்டனமும் செய்துள்ளார். தமிழ் மொழியின் தொல் பழம் இலக்கணம், இலக்கியங்களில் அவர் ஆழ்ந்து தோய்ந்திருப்பதை அவரது படைப்புகள் சுட்டுகின்றன. தமிழில் இன்றியமையாத இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றுள் துறை போகியவராகக் கருதப்படும் தமிழ் ஒளி, அவற்றுள் ஆழ்ந்து மிகச் சிறப்பான உரைகளையும், ஆய்வுகளையும், வழிநூல் காவியத்தையும் (மாதவி காவியம்) படைத்து அளித்திருக்கிறார். அவருடைய படைப்புகள் அவருடைய கவிதை ஆளுமையை மட்டுமல்ல, உரைநடை ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் அவரை மிகச் சிறந்த ஆய்வாளராகக் காட்டுகின்றன. முற்போக்குச் சிந்தனை கொண்ட உலக எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்களைத் தமிழ் உலகிற்கு தமிழ் ஒளி எடுத்துக்காட்டும் முறையும் அவரது சிந்தனை வளத்தை மெய்ப்பிக்கின்றன.
தொகுப்புரை
தமிழ் ஒளி இளைஞரான காலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைச் சந்திக்கிறார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராகத் திராவிடத்தைப் பாடுகிறார். திராவிட இயக்கப் பாவலர்களான பாரதிதாசன், புதுவைச்சிவம் ஆகியோரின் பொதுவுடைமை எழுச்சி மிகுந்த பாடல்களும், அவர்களின் நேரடி அறிமுகமும் உருவாக்கி விட்ட இடதுசாரிச் சிந்தனைப் பாவலரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் போலவே, தமிழ் ஒளியும் அப் பட்டறையில் பட்டை தீட்டப் பட்டவர். இயல்பாகவே தன்மதிப்புப் பாவலரான தமிழ் ஒளி, வெகுவிரைவில் திராவிடத்தையும், பொதுவுடைமையையும் கடந்து செல்கிறார். வறுமை ஒழிப்பின் விடையை இந்திய வரலாற்றிலும், இந்தியச் சமயங்களிலும் தேடி அலுத்த பின்னர், உலக நாடுகளின் உழைப்பாளர் இயக்கங்களின் மாற்றங்கள் அவரை வசீகரித்தன. அதே நேரம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தையும் தாண்டிச் சென்ற அவரது இலக்கற்ற வேகம், அவரை இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களையெல்லாம் விஞ்ச வைக்கிறது. "வறுமையற்ற புதிய உலகம்" என்னும் கனவை நனவாக்கும் முயற்சிக்கு அவரது படைப்புகள் துணை நிற்கக்கூடும். எப்படியானாலும் அதுவும் கனவாகவே போய்விடும் என்று விரக்தியும் தமிழ் ஒளிக்கு இருந்தது. அதுவே அவரை வீழ்த்தி இருக்கவும் கூடும்.
நூற்பட்டியல்
கவிஞர் தமிழ் ஒளி, தமிழ் ஒளி கட்டுரைகள், புகழ்ப் புத்தகாலயம், சென்னை, 2018.
கவிஞர் தமிழ் ஒளி, கவிஞர் தமிழ் ஒளி கவிதைகள், புகழ்ப் புத்தகாலயம், சென்னை, 2018.
கவிஞர் தமிழ் ஒளி, தமிழ் ஒளியின் சிறந்த கவிதைகள், சாகித்ய அகாடமி, புதுடெல்லி, 2010.
கவிஞர் தமிழ் ஒளி, கவிஞர் தமிழ் ஒளியின் மாதவி காவியம், புகழ்ப் புத்தகாலயம், சென்னை, 2003.
கவிஞர் தமிழ் ஒளி, உயரோவியங்கள், புகழ்ப் புத்தகாலயம், சென்னை, 1989.
கவிஞர் தமிழ் ஒளி, வன மலர்கள், புகழ்ப் புத்தகாலயம், சென்னை, 2007.
முனைவர் சிவ இளங்கோ, புதுவைச்சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
கருத்துகள்