புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்

 புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்


 புதுச்சேரி 280 ஆண்டுக் காலமாக பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் வசம் இருந்து வந்தது. 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு, புதுச்சேரியிலும் உந்தப்பட்ட விடுதலை உணர்வினால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள், புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதற்காகப் பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம் ஒன்று இந்திய அரசுக்கும், பிரான்சு அரசுக்கும் இடையில் கையெழுத்தான பிறகு, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறினர். இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் காரர்கள் வெளியேறிய நாளை இந்திய சுதந்திர தினம் என்று குறிப்பிடுவதைப் போல் புதுச்சேரியை விட்டுப் பிரெஞ்சுக் காரர்கள் வெளியேறிய அந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் புதுச்சேரியின் சுதந்திர நாள். 


புதுச்சேரி சுதந்திரத்தின் போது கையெழுத்திடப்பட்ட அந்தப் பிரெஞ்சிந்திய ஒப்பந்தம், இந்தியப் பாராளுமன்றத்திலும், பிரான்சின் பாராளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்ற பிறகுப் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்னும் நான்கு புதுச்சேரிப் பகுதிகளும் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டன. அந்த நாள் தான் 1962, ஆகஸ்ட் 16. புதுச்சேரியில் அதுவரையிலும் நவம்பர் ஒன்றாம் தேதியைப் புதுச்சேரியின் சுதந்திர நாளாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அரசாங்கத்தினர், சட்ட பூர்வ இணைப்புக்குப் பிறகு, ஆகஸ்ட் 16 ஆம் தேதியையே புதுச்சேரியின் சுதந்திர நாளாகக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இது பிரெஞ்சும், தமிழும் தெரியாத இந்திய அதிகாரிகளால் ஏற்பட்டு விட்ட குழப்பம். இது நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும், புதுச்சேரி சுதந்திரம் பெற்ற 50 ஆம் ஆண்டுப் பொன் விழா, 2004 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாளில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமையில், புதுச்சேரி சட்டமன்றத்தில், பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதற்குப் புதுச்சேரியின் பூர்வகுடி மக்கள் இயக்கத்தினரின் வேண்டுகோள் காரணமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகும் அந்த நாளை அரசாங்கம் மறந்து போய்விட்டது. 


இதற்குப் பிறகு பிரெஞ்சிந்திய விடுதலைக் கால மக்கள் இயக்கம் என்ற இயக்கம் தொடர்ந்து இதற்காகப் போராடி வந்தது. பதினைந்து ஆண்டுக் கால நீண்ட போராட்டத்தின் விளைவாகப் புதுச்சேரியின் சுதந்திர நாள், நவம்பர் முதல் நாள்தான் என்று முன்னாள் முதல்வர் திரு ரங்கசாமியால் அறிவிக்கப்பட்டு, அந்நாள் விடுதலை நாள் எனப் பெயரிடப்பட்டு, அரசு விழாவாகவும் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளான ஆகஸ்ட் 16 ஆம் நாளைப் பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப் பரிமாற்ற நாள் என்று குறிப்பிட்டு, அன்றைய தினமும் புதுச்சேரி அரசாங்கத்தால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அளவில் இது ஒரு வெற்றிதான். அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளைப் புதுச்சேரி விடுதலை நாள் என்று குறிப்பிடுவதில் தவறில்லைதான். நல்ல தமிழ்ச் சொல்லும் கூட. ஆனால், புதுச்சேரிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்த நாளைச் சட்டபூர்வ ஒப்பந்தப் பரிமாற்ற நாள் என்று குறிப்பிட்டு விட்டுப் பிற ஆவணங்களில் (அரசு நாள் காட்டியிலும், டைரியிலும்) புதுச்சேரி சுதந்திர தினம் என்று குறிப்பிடப் படுகிறது. அதாவது புதுச்சேரிக்கு விடுதலையும், சுதந்திரமும் தனித்தனியே கிடைத்ததைப் போல, புதுச்சேரியின் விடுதலை நாள் நவம்பர் 1 என்றும்,  புதுச்சேரியின் சுதந்திர நாள் ஆகஸ்ட் 16 என்றும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப் படுகிறது. இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டிப் பிரெஞ்சு இந்திய விடுதலை இயக்கம் மீண்டும் போராடி வந்தது. அதன் விளைவாக இனி  நவம்பர் 1, புதுச்சேரி சுதந்திர நாள் என்றும், ஆகஸ்ட் 16, ஒப்பந்தப் பரிமாற்ற நாள் என்றும், புதுச்சேரி அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் அப்படியே குறிப்பிடப்படும் என்றும் இன்று முதலமைச்சர் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்தின் பிதாமகனான எதுவார் குபேர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நேரத்தில், புதுச்சேரி முதலமைச்சருடன் பிரெஞ்சிந்திய விடுதலைக்கால மக்கள் இயக்கத் தலைவர் டி. சிவராஜ், கவிஞர் புதுவைச் சிவம் அறக்கட்டளை நிறுவுநர் முனைவர் சிவ இளங்கோ ஆகியோர், இன்று (14.8.2020), நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தச் செய்தியைப் புதுவை முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் தெரிவித்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 


உலகம் முழுவதும் உள்ள பூர்வகுடி மக்கள் வந்தேறிகளால் அழிக்கப்பட்ட வரலாறுதான் அதிகம். எஞ்சியிருக்கும் ஒரு சிலர், இன்னமும் தங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் அந்தப் போராட்டங்கள் வெற்றி அடைவது இன்றைய நிலையிலும் எளிதானதல்ல.  பூர்வகுடி மக்களின் போராட்டங்களும், எப்போதாவது சில நேரம் வெற்றியும் பெறுவது உண்டு என்பது புதுச்சேரியில் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது.


முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"

சமஸ்கிருதம் இந்திய மொழியா?