தீ பரவட்டும்

 தீ பரவட்டும்




விட்டன்பர்க். கிழக்கு ஜெர்மனியின் ஒரு நகரம். விட்டன் பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மார்ட்டின் லூதர், அந்நகர தேவாலயத்தின் மதகுருவாகவும் இருந்தார். கி.பி. 1500 களின் தொடக்கத்தில் கிறித்துவ தேவாலயங்கள் பாவமன்னிப்புச் சீட்டு விற்கும் பஜனை மடங்களாக நிலை பெற்றிருந்தன. எத்தகைய பாவத்திற்கும் பணம் கொடுத்தால் பாவ மன்னிப்பு உண்டு. பாவத்தின் தன்மையைப் பொறுத்துப் பணத்தின் அளவும் மிகும். இறந்துபோய் நரகத்தில் இருப்பவரின் பாவங்கள் கூடப் பணத்தினால் இங்கிருந்தே பாவமன்னிப்புப் பெற்றன. கோயில்கள் கொள்ளைக் கூடாரமாக மாறினால் ஏழைகள் இறைவனிடமிருந்து விலகித் தானே ஆகவேண்டும். இவ்வநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மார்ட்டின் லூதர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். தன்னை ஒர் உண்மையான கிறித்தவனாகக் கருதிய மார்ட்டின் லூதர், இறைவனின் கருணை எல்லோருக்கும் பொதுவானதே தவிர, இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்துப் பாவ மன்னிப்புப் பெறுவது, இயேசு கிறித்துவின் போதனைகளைத் திரிப்பதாகும் என்றார். போலியான புனிதங்கள் குறித்துக் கத்தோலிக்கத் தேவாலயங்களில் விவாதிக்கக் கோரிய லூதர், அதற்குத் தேவனின் இடைத்தரகர்கள் ஒத்துழைக்காததால், 1517 ஆம் ஆண்டில் விட்டன்பர்க் தேவாலயத்தின் மரக்கதவுகளில் தன்னுடைய 95 விளக்கங்களைப் பொறித்தார். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்று தேவனின் பெயரால் கூறப்பட்ட வாக்கிற்கேற்பக் கத்தோலிக்கத் தேவாலயக் கதவுகள் புதிய பாதையெனத் திறந்தன. ஒரு புதிய மதச் சீர்திருத்தம் 'புராட்டஸ்டன்ட்' என்னும் பிரிவாக ஐரோப்பாவைக் குலுக்கியது. மதத்தில் கூட மறுமலர்ச்சி நிகழ்த்தப்பட்ட இடம்தான் ஜெர்மனியின் விட்டன்பர்க். இதற்கு 410 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் விட்டன்பர்க்காக மகாராஷ்டிராவின் மகத் நகரம் மாறியது.


கடவுள் பெயரால் கொள்ளை அடித்தல், போலிப் புனிதம் கூறி வயிறு வளர்த்தல், மதச்சடங்குகள் என்ற பெயரால் ஏழைகளைத் துன்புறுத்துதல், மாற்றம் ஏற்கா மதவெறி ஆகிய இவற்றின் மீது மார்ட்டின் லூதர் தொடுத்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவில் நிலவிய மதவெறியின் மீதும், போலியான புனிதங்களின் மீதும் அண்ணல் அம்பேத்கரால் தொடுக்கப்பட்ட போர்தான் மகத் நகரில் 1927ஆம் ஆண்டில் நடத்திய மனுசுமிருதி எரிப்புப் போராட்டம். வைதீக மதத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய மனுசுமிருதியைக் கொளுத்தி விட்டுப் புதிய மதச் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று முழங்கி, அம்பேத்கர் 25. 12. 1927 அன்று நடத்திய மதப் புரட்சியின் அடையாளம் தான் மகத் நகரம். இந்தியாவில் பிராமணர்களைத் தவிர்த்த மற்ற அனைவரையும், பெண்டிர் உட்பட, மிகமிக இழிவு படுத்திய மேலதிகார அடையாளங்களில் ஒன்றாக இருந்தது தான் மனுசுமிருதி.


 "மனித குலத்தின் தொடக்கம்தான் மனு. அந்த மனுவின் பெயரில்தான் மனிதகுலம் அழைக்கப்படுகிறது. பிற உயிர்களில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது மனம். மனம் உள்ளவன் மனிதன். முதல் மன்னனான மனுவுக்குப் பிரம்மாவால் செய்யப்பட்ட போதனைதான் மனுதர்மம். முதல் மனுவை உருவாக்கியவரும் பிரம்மாதான். தன் உடம்பை இரு கூறாக்கி, ஒன்று ஆணாகவும், மற்றொன்றைப் பெண்ணாகவும் செய்த பிரம்மா, அவர்கள் இருவரையும் ஒன்று சேர வைத்து விராட் புருஷனை உண்டு பண்ணினார். அந்த விராட் புருஷன் உலகத்தை உருவாக்கும் பொருட்டுத் தவஞ்செய்து மனுவை உருவாக்கினார். அவர்தான் சுயவாம்பு மனு. இந்த மனு என்பவன் படைத்தது தான் இவ்வுலகமும் அதிலுள்ள உயிர்களும். அந்த வரலாறை மனுவே தன் வாயால் மொழிந்ததுதான் மனுசுமிருதி. இதைக் கேட்ட ஞானிகள் தான் இதை இத்தேசமெங்கும் பரப்பினார்கள்" என்று மனுசுமிருதி கூறுகிறது. ரிக்வேதம் தொடங்கிப் பல சாத்திரங்களும், சுமிருதிகளும் மனுவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மனுவின் பெயர் சுமதி பார்க்கவா என்று ஓர் ஆய்வு கூறுகிறது. சூரியனுக்கும், சந்தியா தேவிக்கும் பிறந்த வைவஸ்வத மனு என்பவன் மனுசுமிருதியை இயற்றியதாக வடமொழித் தொன்ம மரபொன்று கூறுகிறது. இந்த வைவஸ்வத மனு என்பவன்தான் சூரிய, சந்திர குலங்களின் மூதாதை. இப்படியாக இதுவரை 14 மனுக்களும், அவர்கள் தொகுத்தவையும் தொன்மக் கதைகளில் உள்ளன. ஒவ்வொன்றும் வேறுவேறான மனுக்களாகக் கதை மாறி மாறிச் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் பிராமணர்களை (ஆரியப் பார்ப்பனர்களை) உயர்ந்தவர்களாகக் கற்பிப்பதில் ஒன்றுபோலவே இருக்கின்றன. மனு குறித்து ஆய்வு செய்த மாக்ஸ் முல்லர், ஜெய்ஸ்வால் போன்ற ஆய்வாளர்கள் இது புஷ்யமித்திர சுங்கன் காலத்தில் (கி.மு. 150 - கி.பி. 100) தொகுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த புஷ்யமித்திரன் தான் மாமன்னர் அசோகரின் மௌரிய சாம்ராஜ்யத்தை அழித்து வைதீக ஆட்சியை நிறுவிய ஆரியப் பார்ப்பனன். அசோகர் காலத்தில் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் நடைமுறையில் இருந்தாலும், அசோகர், புத்தரின் பஞ்சசீலக் கொள்கை வழி அரசாண்டவர். அசோகர் காலந்தொட்டு (கி.மு. 300) அவரது பரம்பரையினர் அரசாண்ட 300 ஆண்டுக் காலம் வரையிலும் ஒடுங்கியிருந்த வைதீகம், பௌத்தத்தைத் தகர்க்கும் பொருட்டு, மௌரிய அரசாட்சியை அழித்து, பார்ப்பனியமும் வைதிகமும் அடைந்த வெற்றியைக் குறிக்கும் வண்ணமாகவும், புதிய வைதீக அரசாட்சிக்கு வழி காட்டும் வகையிலும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஏற்பாடுதான் மனுசுமிருதி. "மதச் சார்பற்ற சட்டம் ஆட்சி செய்த மண்ணில், அதை விரட்டி விட்டு, முதன் முதலாக ஊடுருவியது மனுசுமிருதி தான்" என்று ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கூறுகிறார். மனுவின் காலம் கி.பி. 200 என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார் (இந்துமதத் தத்துவமும் மனுதர்மமும், பக்கம்: 19). இம் மனுசுமிருதியை 1776 ஆம் ஆண்டில் முதன் முதலாக, சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில், சர். வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்தார் (google - wikipedia). 


வைதீகம் கூறும் 'ரிக், யசூர், சாம, அதர்வண' என்னும் நான்கு வேதங்களும் 'சுருதிகள்' (வெளிப்பாடு) எனப்படுகின்றன. இவை மந்திரம், பிராமணம், உபநிடதம், உபாசனா, ஆரண்யகம் ஆகியவற்றை அங்கங்களாகக் (வேத + அங்கங்கள்) கொண்டவை. இவற்றுக்குத் துணை செய்யும் சாத்திரங்கள் 'சுமிருதிகள்' (மரபு / புனிதச் சட்டம்) என்று அறியப் படுகின்றன. அவை தர்ம சாத்திரம், இதிகாசம், புராணம், ஆகமம், தரிசனம் ஆகியவற்றை உள்ளடக்கிய வேதாந்தங்கள் (வேத+அந்தங்கள்) ஆகும். இந்தத் தரும சாத்திரங்களை உருவாக்கியவர்களாக மனு, யாக்ஞவல்லர், பராசரர், கௌதமர், நாரதர், காத்தியாயனர்,  ஜராதுஸ்ட்ரர் ஆகியோரைக் குறிக்கின்றனர். சாத்திரங்கள் பொதுவாகச் 'சுமிருதி' என்று அழைக்கப்படுவதால், மனு என்பவர் மொழிந்த தர்ம சாத்திரம் மனுசுமிருதி என்றும், மனு தர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. சுருதி, சுமிருதி இவை எதுவுமே விவாதத்திற்கு உரியன அல்ல. சுருதி (வேதம்), சுமிருதி (தரும சாத்திரம்) போன்றவற்றுக்கான எதிர்ப்பு இருபதாம் நூற்றாண்டில் மட்டும் நிகழவில்லை. வேதங்களுக்கெல்லாம் காலத்தில் முந்திய தொல்காப்பியம், அதற்கும் முந்திய ஐந்திறம் போன்ற தமிழ் இலக்கியங்கள் எதுவும் வருண வேறுபாட்டையோ, மகளிர் வேறுபாட்டையோ கூறவில்லை. சங்க இலக்கியங்கள் எல்லாம் காதலையும், போரையும் தமிழரின் வாழ்வியலாகக் கற்பித்துப் பெண்டிரையும், ஆடவரையும் உயர்த்திப் பிடிக்கின்றன. திருக்குறள் மகளிரை உயர் நிலையில் வைக்கிறது. சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டதுடன் அறச் சிந்தனைகளை வளர்த்தன. களப்பிரர் காலத்தில் வைதிகம் நசுக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்தது. பக்தி இலக்கிய காலம் இசைத் தமிழுக்குத் தொண்டு செய்து, சமயப் போரைத் தூண்டினாலும் மகளிரை இழிவு படுத்தவில்லை. பல்லவர்கள் வளர்த்துவிட்ட வைதீகம், பிற்காலச் சோழர்கள் காலத்தில் செழித்து, தமிழ்நாட்டின் நீக்கவியலா ஒட்டுண்ணியாக ஆனது. பன்னூறு ஆண்டுகள் எதிர்ப்பில்லாது போன வைதிகத்தையும், மனுவையும் அவ்வப்போது சித்தர்கள் எதிர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டில் வள்ளலார் எதிர்த்தார். தொடர்ந்து அயோத்திதாசப் பண்டிதர் எதிர்த்தார். அய்யங்காளி எதிர்த்தார். தந்தை பெரியார் எதிர்த்தார். வட இந்தியாவில் ஜோதிராவ் புலே எதிர்த்தார். அவரது மனைவி சாவித்திரி பாய் புலே எதிர்த்தார். சாகு மகராசா எதிர்த்தார். அண்ணல் அம்பேத்கர் எதிர்த்தார். தொடர்ந்து பெரியார், அம்பேத்கர் வழியில் பயணிப்போர் அனைவரும் எதிர்த்துக் கொண்டே வருகின்றனர். இவ் எதிர்ப்பின் விளைவுகளாக இருபதாம் நூற்றாண்டில் (1922) மனுசுமிருதியை எரிக்க வேண்டும் என்று பெரியார் முழங்கி, 1927 இல் எரித்தார். அதே ஆண்டு அக்டோபரில் எம். சி. ராசா ஆதிதிராவிடர் மாநாட்டில் எரித்தார். டிசம்பர் மாதம் குடியாத்தம் நகரில் சுயமரியாதை இயக்கம் எரித்தது. 25. 12. 1927 இல் டாக்டர் அம்பேத்கர் மகத் நகரில் மாநாடு நடத்தி மனுசுமிருதியை நாடதிரக் கொளுத்தினார். 2020 இல் டாக்டர் திருமாவளவன் கொளுத்தினார். 


வைதீக மதம் சமத்துவத்தை ஏற்கவில்லை என்று கூறுவதற்கு, அன்று மொழியப்பட்ட மனுசுமிருதியே இன்று எழுதப்பட்ட ஆவணமாகத் திகழ்கிறது. மனிதகுலத்தை நான்கு வருணங்களாகப் பிரித்தது மனுசுமிருதி. பிரம்மாவின் வாய், தோள், தொடை, பாதத்திலிருந்து உண்டான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை தான் அவை (மனு:1: 31, 87). அத்துடன் மனுசுமிருதி, ஏழுவகை அடிமைகளைக் கொண்டதாகச் சூத்திரப் பிரிவை வகைப் படுத்துகிறது. யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர். பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழு விதத் தொழிலாளியான சூத்திரர் இடத்திலிருந்து பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம் (மனு: 8: 15, 17). இச்சாதிகளின் ஒழுக்கம் குறித்துக் கூறும் மனு, நான்கு வருணத்தைச் (சாதியைச்) சேர்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக் கேட்டினால் உருவானவைதான் சாதிகள் என்கிறது. பிராமணப் பெண்ணுக்கும், சூத்திரனுக்கும் பிறந்த மக்களைச் சண்டாளர்கள் (அவர்ணர்கள்) என்றும் மனு குறிப்பிடுகிறது. மனித குலத்தையே ஒழுக்கங் கெட்டவர்களாகச் சித்தரிப்பதே  மனுவின் நோக்கமாக இருந்திருக்கிறது. உலகின் பிற சமயங்கள் மனித குலத்தை மேம்படுத்த முயற்சிக்கின்றன. வைதிகம்  மக்களை இழிவு படுத்துவதில் பெருமை கொள்கிறது என்பதற்கு மனுசுமிருதியே  சாட்சி. மகளிரை வீட்டு வேலைகளைச் செய்ய மட்டுமே பணிக்க வேண்டும்; இல்லையெனில் அவர்கள் மனம் வேறு இடத்தில் செல்லும் (மனு:9:11) என்கின்ற பெண்ணடிமைத் தனத்திற்கு மனுதான் உற்பத்தி இடம். மகளிரை இதைவிடவும் இழிவுபடுத்தும் வாசகங்கள் மனுவில் நிறையவே உள்ளன.  "ஆடவரிடமிருந்து ஆண் தன்மையை மட்டும்தான் பெண்கள் விரும்புகின்றனர். மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள். படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்" (மனு:9:14,17,19). பிராமணர்களின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது பிரம்மாவின் வாயைப் பிறப்புறுப்பாக்கும் போக்கைப் பற்றி வெட்கம் அடையாத மனுதான், மகளிர் அனைவரையும் தாசிகளாக்குவதில் பெருமை அடைகிறான். பிராமணர்களின் இழிவை விளக்குவதற்கும் ஒரு சுமிருதி இருக்கிறது. அதுதான் சாகியத்ரி காண்டம் (இந்துமதத் தத்துவமும் மனுதர்மமும், பக்கம், 36). "உலகின் மிகக் குற்றவியல் மனம் கொண்ட ஒருவனால் உருவாக்கப்பட்டதுதான் மனுசுமிருதி. கடந்தகால முட்டாள்களால் உருவாக்கப்பட்டு இந்த நாடு நாகரீகம் அடையவில்லை என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. ஒட்டுண்ணிகளாகவும், இரத்தக் குடிப்பாளர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட சட்டம் இது" என்கிறார் ஓஷோ (The Messiah, vol. I, ch.13). 


மேற்கூறிய வேதம் (சுருதி), வேத அங்கம் (சம்ஹிதை), வேத அந்தம் (தரும சாத்திரம்) ஆகிய இந்தச் சனாதனங்கள் வகுத்தபடி பிறவியில் பேதமும், கீழ் நிலையாகக் கற்பிக்கப்பட்டவர்களுக்குப்  பொது உரிமைகளை மறுத்தலும் காலங்காலமாய்த் தொடர்ந்து வந்தன. அதில் ஒன்று பொதுக்கிணறு, குளங்களின் நீரை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்தத் தடை விதித்தது. அப்படிப்பட்ட குளங்களில் ஒன்று பம்பாய் மாகாணத்தின் மகத் நகரின் வீரேசுவரர் கோவிலைச் சேர்ந்த மகத் நகராட்சியின் சௌதார் குளம். பம்பாய் மாகாணச் சட்டசபை உறுப்பினரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான போலே என்பவரின் பெரும் முயற்சியால் சௌதார் குளத்தினை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்தலாம் என்ற தீர்மானம் 1923ஆம் ஆண்டில் சட்டசபையில் நிறைவேறியது. 1926 ஆம் ஆண்டில் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் செயல்வடிவம் பெறவில்லை. காலங்காலமாய்க் காத்துவரும் வழக்காறு அதற்கு அணை போட்டது. அந்த வழக்காறுதான் மனுசுமிருதி. இதற்கு ஒரு முடிவு கட்டவே 'கொலாபா மாவட்டத் தீண்டப்படாத மக்கள் மாநாடு' மகத் நகரில் 1927, மார்ச், 19, 20 ஆகிய நாட்களில் நடந்தது. பம்பாய் மாகாணச் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்த டாக்டர் அம்பேத்கர் அம்மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சௌதார் குளத்தை அடைந்து, அதன் நீரை அம்பேத்கர் கைகளால் அள்ளிப் பருகினார். அவருடன் சென்ற பல்லாயிரக்கணக்கோரும் அவ்வாறே செய்தனர். பின்னர் அனைவரும் மாநாட்டுக்குத் திரும்பியபோது அந்நகரச் சாதி,மத வெறியர்களால் பெரும் கலவரம் நிகழ்த்தப்பட்டது. சாதி வெறியர்களின் செயல்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. சௌதார் குளம் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, அதைப் புனிதமாக்க, மாடுகளின் கழிவுகளையும், பால், நீர் ஆகியவற்றையும் 108 குடங்களில் கலந்து 'பஞ்சகாவ்யா' என்ற பெயரில், வறட்டுத் தவளைக் கூச்சலுடன், குளத்தில் ஊற்றி அதைப் புனிதப் படுத்தினார்கள். சௌதார் குளம் தீட்டுப்பட்டதாகக் கூறப்பட்டதும், பஞ்சகாவ்யாவினால் புனிதமாக்கப் பட்டதாகக் கூறியதும் மனுசுமிருதி காட்டிய வழிகளே.


மேற்கூறிய போராட்டத்தைத் தொடர்ந்து, சௌதார் குளத்தை அவர்ண மக்கள் (வர்ணத்தில் சேர்க்கப்படாத ஒடுக்கப்பட்டோர்) பயன்படுத்துவதற்கு மகத் நகராட்சி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தடை விதித்தது. இதனால் அம்பேத்கரின் அலுவலகத்தில் போராட்டக் குழுவினர் கூடி 1927, டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் மாநாடாகக் கூடிச் சத்தியாக்கிரகம் செய்வது என முடிவெடுத்தனர். ஆனால் மாவட்ட நீதிபதி மூலமாக மாநாடு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சௌதார் குளத்தில் நீர் அருந்தவும், கோவில் நுழைவும் தடைசெய்யப்பட்டன. மாநாட்டின் முதல் நாள் பேசிய டாக்டர் அம்பேத்கர், "உரிமையை எவரும் அன்பளிப்பாகப் பெற முடியாது; போராடித்தான் பெற முடியும். ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்; சிங்கங்களை அல்ல" என்றார். மேலும் அனைத்து வகையிலும் தீண்டப்படாதோர்க்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அவர் பேசும்போது, "மனு நீதியின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். இந்த மனுசுமிருதியின் கட்டளைகளின்படித்தான் கொடிய வறுமையில் தள்ளப்பட்டோம். இப்படிப்பட்ட சமத்துவமின்மையின், கொடுமையின், அநீதியின் அடையாளமாக மனுநீதி இருப்பதால்தான் அதைக் கொளுத்துகிறோம்" என்று கூறி, அதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, 25. 12.1927 அன்று இரவு 9 மணிக்கு மாநாட்டுப் பந்தலின் முன் தோண்டப்பட்ட ஒரு குழியில், மனுசுமிருதியைப் போட்டுத் தீ வைத்தார் (தனஞ்செய் கீர், பக்கம்: 101 - 104). எரிந்தது மனுசுமிருதி மட்டுமல்ல. காலங்காலமாய் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த அநீதி, அக்கிரமம், ஆரியத்தின் அடையாளங்களும்தான். உண்மையில் அதுதான் யாகம். காலங்காலமாய் வைதிகர்கள் பல உயிர்களையும், பொருட்களையும் யாகக் குழியில் போட்டுத் தீ வளர்த்ததெல்லாம் உண்மையான யாகமல்ல. அப்படி நடத்தி வந்த, அந்தப் பழமைகளின் சட்டத் தொகுப்பினை அக்கினிக்கு இரையாக்கியதே அண்ணல் அம்பேத்கர் செய்த சரியான யாகமும், வேள்வியும். இம்மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் பேசும்போது, "எண்ணத்தில் எழுச்சியும், பேச்சினில் திருத்தமும், செயலில் மாற்றமும் தேவை" என்று அறிவுறுத்தி, முதலில் உடுத்தும் உடையிலும் மாற்றத்தைத் தொடங்குங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப மாநாட்டில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும், அடுத்த நாள் மாநாட்டில், தாங்கள் சேலை கட்டும் முறையை மாற்றி இருந்ததை மாநாட்டின் வெற்றியாகவே கருதப்பட்டது. பின்னர் மாநாடு கட்டுப்பாட்டுடன் நிறைவுற்றது. சிலகாலம் சென்ற பின்னர், சௌதார் குளத்தில் தீண்டப்படாதோர் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டுகள் தொடர்ந்து வாதாடி, வெற்றிக் கனியைச் சட்டப்படிப் பெற்றுத் தந்தார் அண்ணல் அம்பேத்கர்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மனுசுமிருதி வழக்கில் இல்லை என்று கூறுபவர்கள்,  அரசியலமைப்புச்சட்டம் இருக்கும்போதே உச்ச நீதிமன்றத்தின் 38 தீர்ப்புகளில் மனுசுமிருதியை மேற்கோள் காட்டியதை என்னவென்று சொல்வார்கள்?  இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்படைக்கப்பட்ட 1949 நவம்பரில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் காலங்காலமாய்ச் செயல்பாட்டில் இருந்த மனுசுமிருதி பற்றி எதுவும் இல்லாததால் அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று ஜனசங்கம் வெளியிடும் 'ஆர்கனைசர்' இதழ் அறிவித்ததை உச்சிக்குடுமிகள் ஏற்கலாம்; உச்சநீதிமன்றம் ஏற்கலாமா? இந்துச் சட்டத் தொகுதி, பாராளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்ட காலத்தில் (1950), அம்பேத்கர் செய்த சில சீர்திருத்தங்களைப் பலரும் எதிர்த்ததற்கு என்ன அடிப்படை? காலங்காலமாய் நிலவிவரும் வழக்கங்களை மாற்றக் கூடாது என்பதுதானே அதன் பொருள்? இத்தனைக்கும் அம்பேத்கர் இந்து மதச் சட்டங்களில் இருந்து முற்றாக வேறுபட்டு இந்துச் சட்டத்தை மாற்ற வில்லை. இந்துச் சட்டத்தின் சில பிரிவுகளை வடிவமைப்பதும், மாற்றி அமைப்பதும்தான் இந்துச் சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் என்று கூறிய டாக்டர் அம்பேத்கர், இந்துச் சட்ட மசோதாவை முற்போக்கானது என்றோ, புரட்சிகரமானது என்றோ கூறுவது தவறாகும் என்றும், இந்து சமய சாத்திரங்களின் அடிப்படையில்தான் இவை மேற்கொள்ளப்பட்டன என்றும் தெளிவுபடுத்தினார் (தனஞ்செய் கீர், பக்கம்: 622-623). ஆனால் அவர் மேற்கொண்ட இந்து மதச் சீர்திருத்தம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாமலேயே போனது. ஒரு பக்கம் பிராமணர்கள் அவரது சீர்திருத்தத்தை எதிர்த்தனர். இன்னொரு பக்கம் சோசலிசம் பேசியவர்கள், அம்பேத்கரை நவீன மனுவாகச் சித்தரித்தனர். எத்தனைச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், மனுசுமிருதியின் வழக்காறு தொடர்ந்து கொண்டே வருவது தான் இதற்கெல்லாம் காரணம். இன்றளவும் நீதிமன்றங்கள் முற்பகலில் மட்டும் விசாரணை செய்யும் முறை எந்த வழக்கத்தில் இருந்து வந்தது? (பகலில் பதினைந்து நாழிகைக்கு உள்ளாக நீதிசபையில் தேவதா விக்கிரகம் பிராமணர்கள் - மனு: 8: 87). 


இந்தியாவில் மன்னராட்சிக் காலத்தில் மனுசுமிருதியே நடைமுறையில் இருந்து வந்தது. இசுலாமிய மன்னர்களின் ஆட்சியின்போது முகமதியன் சட்டமும் இருக்க, முகமதியர் அல்லாதோருக்கான கிராமப் பஞ்சாயத்துகளின் நீதி முறைகள் சுமிருதி அடிப்படையில் இருந்தன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிர்வாகத்தின் போதும் முகமதியன் சட்டமே நடைமுறையில் இருந்தது. அப்போதும் பிராமணிய நீதிமன்றங்கள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் மனுசுமிருதியும், பிற சுமிருதிகளும் (சாத்திரங்கள்) கோலோச்சிக் கொண்டிருந்தன. 1834 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தால் முதல் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவரான தாமஸ் பாபிங்டன் மெக்காலே தலைமையில் உருவான இந்தியக் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.), 1835 இல் பிரிட்டிஷ் இந்திய அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, 1862 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அதுவரையிலும் மனுசுமிருதியின் பெயராலேயே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்கள், இந்தியக் குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்தும், வழக்காறு என்ற பெயரில், மனுவை மடியில் கட்டிக் கொண்டே தீர்ப்புகளைப் படித்தனர். (Atul Chandra Patra, An Historical Introduction to the Indian Penal Code, Vol.3, No.3 (July - Sept., 1961) - jstor.org).


 இப்படிப்பட்ட மனுசுமிருதிதான் இந்திய அரசின் கலாச்சாரத் துறையால் அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்த்துரையோடு (10. 7. 1962) 1964 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட்டதாக (முதற்பதிப்பு 1896) ஓர் அச்சு ஊடகம் தெரிவிக்கிறது. இதையும் மீறி, மனுசுமிருதி தற்போது நடைமுறையில் இல்லை என்பவர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் போனால் அங்கே மனு சிலையாக நிற்பதைக் காணலாம். 28. 6. 1989 அன்று நிறுவப்பட்டது மனுவின் இந்தச் சிலை. இதற்குப் பெரும் எதிர்ப்புத் தோன்றவே, உயர்நீதிமன்றமே சிலையை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் சிலையை நிறுவிய பிராமணர்கள் தடைகோரி வழக்குத் தொடர, அன்று விதிக்கப்பட்ட தடை தான். இன்றும் அந்த சிலை இறுமாந்து நின்றுகொண்டிருக்கிறது பட்டேல் சிலையைப் போல. ஆனாலும் காந்தாபாய் ஆயரி, சீலாபாவர் ஆகிய இரு தலித் பெண்கள் மனுவின் சிலை மீது ஏறி கறுப்புச் சாயம் பூசினார்கள். இது குறித்து, ' தி வயர்'  இணைய இதழில் பேசிய காந்தாபாய் ஆயரி, "அந்தக் கற்பனை உருவம் (மனு) சமகால இந்தியாவில் சட்டபூர்வமான தன்மையைப் பெற்று இருக்கிறது" என்று மனம் நொந்துபோய்க் கூறினார். அந்த இரு சகோதரிகளுக்கு உண்டான கோபம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டால் மனுவின் அடையாளம் ஒன்று கூட மிஞ்சாது. அதற்காகவாவது மனுசுமிருதியை டாக்டர் அம்பேத்கர் கொளுத்திய நாளை (டிசம்பர் 25) "இந்திய மகளிர் விடுதலை தினமாகவும்", "சாதி ஒழிப்பு தினமாகவும்" இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும். "பழக்கவழக்கம் என்பது சட்டத்தை விட மிகுந்த ஆற்றல் மிக்கது. அது காவலர்கள் இல்லாத வன்முறையாக, குறுக்கீடுகள் அற்ற ஆதிக்கமாக இருக்கின்றது. பழக்கவழக்கங்கள் அரசால் அமுல் படுத்தப் படுகின்ற சட்டத்தைவிட, மக்களால் மிகத் திறமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட மக்களிடம் இருக்கின்ற வலிந்து திணிக்கின்ற ஆற்றல், அரசிடம் இருக்கின்ற ஆற்றலை விட மிக அதிகம்" என்று டாக்டர் அம்பேத்கர் மகத் மாநாட்டில் கூறியதன் பொருள் என்னவென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், இதுவரை இருந்து வந்த வழக்காறுகளும் நடைமுறையில் இருக்குமானால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் பலன்களை இழக்கச் செய்து விடும் என்பதுதான். "அரசியலமைப்புச் சட்டத்தின் வழி அரசியல் உரிமை பெற்றிருக்கும் பட்டியல் சாதியினர் தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, நாடாளுமன்றத்தில் துணிச்சலுடன் குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் சமூக, பொருளாதார உரிமைகளையும் பெற முடியும். அதுவரையில் இட ஒதுக்கீடும் தொடர வேண்டும். இல்லையெனில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 'மனுசுமிருதி இராச்சியத்தை' நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்" என்று, முதல் பொதுத் தேர்தலுக்கான (1952) பிரச்சாரத்தின் போது, டாக்டர் அம்பேத்கர் கூறியது (27. 10. 1951 இல் ஜலந்தரில் ஆற்றிய உரை) இன்று (2020 இல்) எந்த அளவு உண்மையாகிவிட்டது என்பதைக் குற்றப்பரம்பரையினர், சூத்திரர், தீண்டத்தகாதவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.


 மனிதர்கள் தன்மானம் இன்றி வாழவும், குறிப்பாக மகளிரின் பண்பையே கீழ்மைப் படுத்தவும், அதையும் அச்சில் ஏற்றி, ஆவணமாக்கி, நீதிமன்றத்தின் புனித ஏடுகளில் மறைமுக வெளிப்பாடாகச் சனாதனத்தின் கண்ணாடிகளுக்குப் பிரகாசமாய்த் தெரியும் வண்ணம் இன்னமும் மனுசுமிருதி வாழ்கிறதென்றால் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொல்லிக் கொள்ள நமக்கு என்ன தகுதி வாழ்கிறது? அவ்வையார் போன்ற கேட்டறிந்த தாய்மார்கள், கவுந்தியடிகள் போன்ற படித்தறிந்த தாய்மார்கள், நாம் வாழும் காலத்தில் கிராமங்கள், நகரங்களில் பார்த்த தாய்மார்கள், நம்மை உருவாக்கிய தாய், சகோதரி ஆகிய தாய்மார்கள், நாம் கொஞ்சி மகிழ்ந்த மகள், பேத்தி ஆகிய தாயனையர் ஆகிய அனைத்துத் தாய்மார்களையும் நாம் உயர்வாகக் கருதி வாழ்வதே உயர்ந்த அறம். தமிழின் அனைத்து இலக்கியங்களும் இதைத்தான் கற்பிக்கின்றன. ஆனால் சமற்கிருதச் சுருதிகளும், சுமிருதிகளும் மகளிரை மிக மிகக் கீழான நிலையில் வைத்துப் பார்க்கின்றன. இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, இம்மாதம் 25 ஆம் தேதி, இன்றைக்கு 93 ஆண்டுகளுக்கு முன்பாக, அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் மனுசுமிருதியைக் கொளுத்திய முன்னோட்டத்தின் வழி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியைப் பின்பற்றுபவர்கள், மனுசுமிருதியை எரிக்க வேண்டும். அதற்காக எங்கும் போகவேண்டாம். ஒரு தாளில் மனுசுமிருதி என்று எழுதி, அதை இம்மாதம் 25 ஆம் தேதி அன்று, ஒவ்வொரு இல்லத்திலும் தீயில் இட வேண்டும். நாம் அனைவரும் தனித்தனியாக அவரவர் இல்லத்தில் இருந்து கொண்டே இதைச் செய்ய வேண்டும். தீ பரவட்டும்!!!


 கனலேந்தி வாருங்கள் தீபங்களே! 

கரைந்தோடும் மனு சொன்ன பாவங்களே!



 முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"

சமஸ்கிருதம் இந்திய மொழியா?