மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்

மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள் 


இறைக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள் அனைவருமே மனிதர்கள்தான். ஆனால் அப்படிச் சொன்னால் இறைவனை உருவாக்கியவன் மனிதனே என்ற உண்மை எளிதில் விளங்கிவிடும் என்பதனாலேயே இறைக் கோட்பாட்டைச் சொன்னவர்கள் தேவர்களுக்கு இணையான ஞானிகள் (ரிஷிகள்) என்றும், அவர்கள் மொழிந்த கோட்பாடுகள் வேதங்கள் என்றும், இவற்றிற்குக் காலங்கள் இல்லை என்றும், இதன் மொழி தேவனால் மொழியப்பட்டது என்றும் கட்டமைக்கப்பட்டு, அதைக் காலங்காலமாய் யாரும் அறியாமல் காத்து நின்று, இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவில், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டும், பரப்பியும் வந்தார்கள், அதில் நன்மையும், அதிகாரமும் பெற்றவர்கள். அதாவது பொருளை (இயற்கையை) மறை (வேதம்) ஆக்கி, அதை மறைபொருளாக ஆக்கி வைத்து விட்டார்கள். இம்மறை பொருளின் உண்மையைத் தேடுவதே மெய்ஞானம் என்றும், அதைத் தேடுவோரே ஞானிகள் என்றும், அது தேடுவோர் அனைவருக்கும் அகப்படாது என்றும், பிறப்பினால் உயர்ந்தோரே அதை அடைய முடியும் என்றும், தேவநெறி, வேதம், சாத்திரம், மனுதர்மம் இவை அனைத்தும் பிரம்மம் என்ற ஒன்றே என்றும், அதற்குத் தாங்கள் மட்டுமே உரியவர்கள் என்றும், தங்களையும், நிகழ்வுகளையும் தாங்களே கட்டமைத்துக் கொண்டார்கள். உண்மையும், வரலாறும் புதை பொருள்களாகிப் போயின. கட்டமைக்கப்பட்ட புராணமும், சாத்திரமும் கடவுள் நெறி ஆகிப் போயின. 


மனித வர்க்கத்தின் கண்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்டே வந்திருப்பதாக மனிதவியல் அறிவியலாளர்கள் தற்போது அபாய அறிவிப்பு போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மனித வர்க்கத்தின் அத்தனை காதுகளுக்கும் போய்ச் சேராமல் மத போதனைகள் தடுத்துக் கொண்டிருக்கின்றன. கடவுள் என்ற இல்லாத கதையைப் பக்தி என்னும் கயிறினில் கோர்த்துக் கண்களும் கட்டப்பட்ட நிலையில், உண்மை என்பது மேலும் மேலும் மண் மூடப்பட்டு புதை பொருளாக ஆழத்தில் போய்க் கொண்டே இருக்கிறது. எல்லோருக்கும் தெரிகிறது பொய்யும், புனைவுகளுமே இவ்வுலகத்தில் அதிகாரமாகவும், மேல் நிலையாகவும் உலவிக் கொண்டிருக்கின்றன என்று. ஆனாலும், உண்மையை ஏற்றுக் கொள்ள விடாமல் தடுக்கும் அந்தக் கனத்த, ஊடுருவிப் பார்க்க வல்ல போர்வை, உலகத்தின் மீது போர்த்தப்படுவதையே எல்லோரும் விரும்பி ஏற்கின்றனர். இதில் விதிவிலக்கானவை மனித இனம் தவிர்த்த, பிற உயிரினங்கள் தான்.



 முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"

சமஸ்கிருதம் இந்திய மொழியா?