மூச்சு விட முடியவில்லை
மூச்சு விட முடியவில்லை
முனைவர் சிவ.இளங்கோ
இந்தியாவின் சாதிவெறி
அமெரிக்காவின்
இனவெறி
சட்டங்கள்
யாவருக்கும் பொதுவானவை.
அவற்றை யாரும்
கையில் எடுக்கக்கூடாது.
அவற்றைப் பாதுகாக்கவும்,
நிறைவேற்றவும் அரசுத்
துறைகள் உள்ளன
என்றுதான் எல்லா
நாடுகளும் சொல்கின்றன.
ஆனால் அமெரிக்காவில்
மின்னபொலீஸ் நகரத்தின்
காவல் குழுவினர்
சட்டத்தைக் கையிலெடுத்து
மட்டுமல்ல தண்டனை என்று
கருதி ஒரு
கொலையைப் பொது
வெளியிலேயே நிறைவேற்றி இருக்கிறார்கள்.
டெக்சாஸைச்
சேர்ந்த 46 வயதான,
ஐந்து குழந்தைகளுக்குத்
தகப்பனான, ஜார்ஜ்
பிளாயிட் என்பவர்
மின்னபொலீஸ் நகரத்தின்
தனியார் நிறுவனக்
காவலராக வேலை
செய்து வந்த
நிலையில் கொரோனா
ஏற்படுத்திய நெருக்கடியினால்
வேலை இழந்தவர்.
கையில் காசு
இல்லாததால் ஏமாற்றிச்
சிகரெட் வாங்கியதாக
காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுக் கைகள்
விலங்கிடப்பட்ட நிலையில்,
துப்பாக்கி முனையில்,
சாலையில் குப்புறப்
படுக்க வைத்துக்
கழுத்தில் ஒரு
காவலர் கால்
முட்டியால் அழுத்த,
"என்னால் மூச்சு விடமுடியவில்லை"
எனப் பலமுறை
சிரமப்பட்டுக் கூறிய
பிளாய்டின் மூச்சு,
எட்டாவது நிமிடத்தில்
அடங்கிப்போனது. அப்போது
சாலையில் சென்று
கொண்டிருந்த பலரும்
காவலரிடம் அவர்
கால் முட்டியை
எடுக்கச்சொல்லி மன்றாடியும்
டெரிக் சாவின்
என்ற அந்தக்
காவலரும், மற்ற
மூன்று காவலர்களும்
அதைச் செவிமடுக்கவில்லை.
பிளாய்டு இறந்த
சேதியும், காவலர்
அவரைக் கால்
முட்டியால் அழுத்திக் கொன்ற வீடியோவும்
வெளியான பின்னர்தான்
அமெரிக்கா முழுவதும்
காவல்துறையின் அரச
வெறியைக்
கண்டித்துப் போராட்டம் தொடங்கியது. இதுதான் தற்போது இனவெறிக்கு எதிரான போராட்டமாக பெரும்பாலான உலக நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தப்
போராட்டம் இனவெறிக்கு
எதிரானது மட்டுமல்ல. இனவெறிக்கு
அடிப்படையான காரணங்களைக்
கண்டுபிடித்து அவற்றையும்
எதிர்க்கத் தொடங்கிவிட்டனர்
போராட்டக்காரர்கள். இங்கிலாந்து
நாட்டில் பிரிஸ்டல்
நகரில் எட்வர்ட்
கால்ஸ்டன் என்பவருடைய
சிலை தகர்க்கப்பட்டு
அருகில் உள்ள
ஆரோன் ஆற்றில்
வீசப்பட்டது. ஆப்பிரிக்காவில்
இருந்து கிட்டத்தட்ட
ஒரு லட்சம்
கறுப்பர்களை அடிமையாகக்
கொண்டுவந்து விற்கக்
காரணமாக இருந்தவர்தான்
இந்தக் கால்ஸ்டன். பதினேழாம்
நூற்றாண்டில் இந்தக்
கறுப்பின மக்கள் அமெரிக்காவிற்கும்,
கரீபியன் தீவுகளுக்கும்
அடிமைகளாக விற்கப்பட்டனர். புதிய நாடுகளைக் கண்டு பிடிக்கும் ஆர்வத்தில் தென் அமெரிக்க, ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குள் கப்பல் வழி வந்து இறங்கி அங்கிருந்த பூர்வகுடி மக்களைத் துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்ற கொலம்பஸ் காட்டிய வழிதான் இது. இதனால் அடிமை விற்பனைக்குத் காரணமாக இருந்த இங்கிலாந்து
அரச சின்னங்களும்
அகற்றப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகளும்
கூடவே எழுந்திருக்கின்றன.
இதேபோல பெல்ஜியம்
நாட்டிலும் கிங்
லியோ பார்ட்-2
சிலையை அகற்ற
வேண்டும் என்று
மிகப் பெரிய
அளவில் பேரணி
நடைபெற்றது. அந்தச்
சிலையையும், அவரது
பெயர் வைக்கப்பட்டுள்ள
சாலைகளில் அப்பெயர்களை
நீக்கவும் கோரிக்கை
எழுந்துள்ளது. காலனித்துவ
பழமையில் அடிமைத்தனத்தை
நிலைநாட்டியவர்களின் சின்னங்கள்
நீக்கப்பட வேண்டும்
என்பதுதான் இந்தப்
போராட்டக் குழுவினர்களின்
கோரிக்கை. இப்படிப்பட்டவர்களின்
சிலைகளை எடுத்துவிட்டு
அடிமைத் தனத்தால்
கொல்லப்பட்ட அப்பாவி
மக்களுக்குச் சிலை
வைக்க வேண்டும்
என்பதும் இப்போராட்டத்தில்
எழுப்பப்படும் கோரிக்கையாகும்.
மேலும் அடிமைத்தனத்தின்
அவலங்களை விளக்கும்
ஓர் அருங்காட்சியகம்
(slavery museum) ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்
என்பதும் இவர்களது
கோரிக்கை.
மேற்கத்திய
நாடுகளில் நடக்கின்ற
இதுபோன்ற கொலைகளும்
வன்முறைகளும் இனவெறி
என்ற பெயரில் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்று விடுகின்றன.
ஆனால் இந்தியாவில்
இப்படிப்பட்ட நிகழ்வுகள்
சாதி வெறியின்
விளைவுகளாக நடக்கின்ற
போது அவை
உலக நாடுகளின்
கவனத்தை,
ஏன் ஆசியாவின்
கவனத்தைக் கூட
பெறுவதில்லை.
இன்னும் சொல்லப்போனால்
இந்திய அளவில்
கூட இந்தப்
பிரச்சனைகள் கவனத்தை
ஈர்ப்பதில்லை. தென்னாப்பிரிக்காவில் இன
வெறி நிகழ்வுகள் உலகச்செய்திகள் ஆனபோது அதைவிடக் கொடுமையான சாதிவெறி நிகழ்வுகள் கண்டு
கொள்ளப்படுவதில்லை என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் பண்டிதர் அயோத்திதாசர். இருபதாம்
நூற்றாண்டுத் தொடக்கத்தில் அயோத்திதாசரின் இந்த கண்டனக் குரலை அடுத்து 1920களில் தந்தை
பெரியார் இப்படிப்பட்ட கலகக் குரலை உயர்த்தினார்.
மிளகு
கொள்முதல், வணிகச்
சாவடிகள் நிறுவுதல்
மற்றும் நாடு
பிடிக்கும் ஆசையில் இந்தியா உட்படத் தென்கிழக்கு ஆசியா வந்திறங்கிய
ஐரோப்பியர்கள் இங்கு
இருக்கும் பூர்வகுடி
மக்களை அடிமைகளாக
ஆக்கிய அயோக்கியக்
கதை கண்ணில்
குருதி வடியச்
சொல்லப்படுகிறது. ஆனால்
இங்கிருந்த பூர்வகுடி
மக்கள் இதற்கு
முன்பும் சுதந்திரமாக
இருந்தவர்கள் அல்ல.
அதற்கு முன்பும்
அவர்கள் அடிமைதான்.
சாதியடிமை. உயர்
சாதிக்காரனுக்கு அடிமை.
பிறப்பினால் களங்கம்
கூறிச் செய்யப்பட்ட
அடிமை. கடவுள்
பேரால் சொல்லப்பட்ட
சனாதனத்தைத் தலைமுறை
தலைமுறையாக ஏற்றுக்
கொண்டுவிட்ட கொத்தடிமை.
சாதியப் போர்வையைப்
பக்தி வழியில்
போர்த்திவிட்டு முழு
உரிமையும் பிடுங்கப்பட்டு விட்ட முட்டாள் அடிமை.
தனக்கு
வாய்த்த அடிமைகளை
எங்கிருந்தோ வந்த
ஐரோப்பியன் கொண்டு
போகிறான் என்ற
கோபமே இங்கிருந்த
உயர்சாதி ஓநாய்களின்
சுயராஜ்ய அழுகை
என்று புரிவதற்குள்
காலங்கள் பல
கடந்து விட்டன.
ஐரோப்பியனாவது நவீன
ஆயுதம் காட்டி
ஆள் பலத்தினால்
அடிமை ஆக்கினான்.
அவையெல்லாம் எதுவுமே
இல்லாமல் சாதி,
மதம், சாத்திரம் கூறி
காலங்காலமாய் அடிமைப்படுத்திய
‘நம்மவர்’களின்
ஆயுதம் எத்தனைக் கூர்மையான
அறிவாயுதமாக இருந்திருக்க
வேண்டும். அதுவும்
தனது அடிமைகளுக்கு
உள்ளேயே பல
பிரிவுகளை உண்டாக்கி,
அப்பேதங்களை அம்
முட்டாள் அடிமைகளே
காலங்காலமாய்ப் பாதுகாத்து வரும்படியான, அடிமையே எஜமானன்; எஜமானனே அடிமை என்ற ‘உரிமையை' மனுநீதியாக வரித்து அவ்வடிமைகளின்
மேனியில் அடையாளமாய்ப்
போர்த்திவிட்ட ஆரியக்
கபடத்தின் ஓதலும்,
ஓதுவித்தலும் எத்தனை
இரகசியமான ஆயுதங்கள். அந்த அறிவாயுதத்தின்
கூர்மையான பற்கள்
தான் சாதியம்.
பிறக்கும்போதே சாதி,
சமயம், பண்பாடு,
ஒழுக்கம் எனப்
பல நூறு
வளையங்கள் தெற்காசியக்
காட்டுமிராண்டிகளுக்கு போடப்படுகின்றன என்பதைப்
புரிந்து கொள்வதற்குள்
அவன் ஆயுள்
கடந்துவிடும். அதாவது
இளைத்தவனைக் காட்டுமிராண்டிகள்
ஆகவே வைத்திருக்க
விரும்பிய 'நல்ல'
உள்ளம் கொண்ட
அறிவுஜீவிக் காட்டுமிராண்டிகள்
தான் இத்தனைக்கும்
காரணம் என்பதைப்
புரிந்து கொள்ளாமல்
போய்ச் சேர்ந்தவர்களும்,
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்
தான் அதிகம்.
அதேநேரம் பாரம்பரியம் மிக்க இந்தச் சனாதனத்தில்
இந்தியர்கள் அனைவரும் ஒரே மதம் ஒரே நாடு என்று கூறி
மேற்கத்திய நாடுகளைப் போன்று ஆசியாவில், குறிப்பாகத் தென்கிழக்கு
ஆசியாவில் நிற வெறியும், இனவெறியும் இல்லை என்று ஐரோப்பியர்களைச் சீண்டி விடலாம்தான்.
ஆனால் அவற்றை விடக் கேவலமான சாதிவெறி இங்கு நிலவி வருவதையும், அதுவும் காலங்காலமாகக்
கடைப்பிடிக்கப்பட்டு வருவதையும் கவனித்தால் ஐரோப்பியர்களே தேவலாம் என்றாகிவிடுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, வெள்ளையனுக்குத் தனிச்சட்டம், இந்தியனுக்குத் தனிச் சட்டம்
என்பதைப் பொறுத்துக் கொள்ளாத காந்தி அடிகள், இந்தியர்களுக்குள் பிறப்பைக் காரணம் காட்டி,
மேல் சாதிக்கு ஒரு நீதி, கீழ் சாதிக்கு ஒரு நீதி என்ற அநீதியைக் கடைசிவரையிலும் கண்டிக்கவும்
இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக வர்ணாசிரமம் இந்துக்களின் வாழ்வியல் தர்மம் என்று
அருள்வாக்குச் சொல்லி விட்டு அமரராகி விட்டார்.
இனவாத
எதிர்ப்புக்கான அனைத்துலக
மாநாடு ஒன்றை
ஐக்கிய நாடுகள்
சபை தென்னாப்பிரிக்காவில்
உள்ள டர்பன்
நகரில் 2001 ஆம்
ஆண்டு நடத்திய
போது, அந்த
மாநாட்டில் இனவெறி
பற்றிய விவாதங்களுடன்
ஆசிய நாடுகளில்
உள்ள,
குறிப்பாக இந்தியாவில்
உள்ள சாதி
வெறி குறித்தும்
விவாதிப்பதற்கு இந்தியாவில்
உள்ள அரசு
சாரா அமைப்புகள்
முயற்சி செய்தன.
ஆனால் சாதியம்
என்பது ஐக்கிய
நாடுகள் அமைப்பில்
எப்போதுமே ஒரு
விவாதப் பொருளாக
எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.
இதற்குக் காரணம்
சாதியமும், சாதிக்
கொடுமைகளும் இந்தியாவில்
இல்லை என்று
ஐ.நா.
சபை நினைப்பதைவிட,
அதற்கான அடிப்படையை
வளர்ந்த நாடுகள்
புரிந்துகொள்ளும் அளவு
எடுத்துச் சொல்ல
வாய்ப்பு அளிக்கப் படாததுதான்
என்று அரசு
சாரா அமைப்புகள்
கூறுகின்றன. இனவெறியைப்
புரிந்துகொண்டு எதிர்க்கின்ற
வளர்ந்த உலக
நாடுகளுக்கு, சாதியம்
பற்றிப் புரிய
வைக்க முடியாத
நிலை வலிந்து
உருவாக்கப் படுகிறது.
பிறப்பை வைத்து
எப்படி மக்களிடம்
வேறுபாடு தோன்றும்?
பிறப்பினால் தனிப்
பிரிவுகள் உருவாகி
எப்படி சாதிக்
கொடுமைகள் நிகழும்?
என்றெல்லாம் கேள்விகள்
எழுப்பப்படுகின்றன. ஆனால்
பிறப்பை வைத்துப்
பேதம் பிரிப்பதும்,
அதனால் உயர்வு
தாழ்வு சொல்லி
அடிமைகளாக்கப்படும் நிகழ்வுகளும்,
சாதிக் கொடுமைகளும்
இன்றளவும் இந்தியாவில்
நிலவி வருகின்றன
என்பது நம்
நாட்டைப் பொருத்தவரையில்
நூறு விழுக்காடு உண்மை.
அதனால், இனவெறி அடிப்படையைப்
புரிந்து கொண்ட
நாடுகளின் வழியிலேயே
சென்று சாதியத்தைப்
புரியவைக்க முடியுமா
என்பதும் ஒரு
முயற்சிதான். ஐக்கிய
நாடுகள் சபையின்
விவாதப்பொருளாக இனவெறி,
இனப்பாகுபாடு, அயல்
நாட்டினர் மீது
பகைமை, சகிப்பின்மை
ஆகிய தலைப்புகள் அடிக்கடி
விவாத நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இனவெறி
என்பதற்கு இன
ஒதுக்கீடு காரணமாகச்
சொல்லப்படுகிறது. அதாவது
இன ஒதுக்கீட்டைக்
காலங்காலமாய் நிர்ணயித்து
வரும் பாரம்பரிய
நம்பிக்கையே அதற்குக் காரணம்.
இந்தப் பாரம்பரியம் கருப்பு
வெள்ளை நிற அடிப்படையிலானது.
அதற்குக் காரணம்
மரபும், வழித்
தோன்றலும். அதை
நிர்ணயிப்பது பாரம்பரியத்
தொழிலும், அடிமைத்தொழிலும்.
இந்தப் படிநிலை
அமைப்பில் தான்
இனவெறிக்கான காரணங்கள்
சொல்லப்பட்டு, அவை
அனைத்து நாடுகளாலும்
புரிந்துகொள்ளப்பட்டு, ஐக்கிய
நாடுகள் சபையின்
விவாதப் பொருளாகிறது.
இதே படிநிலை
அமைப்பில் சாதியத்தைப்
புரிய வைக்க
அரசு சாரா
அமைப்பினர் முயன்று
வருகின்றனர். சாதியம்
என்பதற்குக் காரணம்
தீண்டாமை;
அதாவது தீண்டத்தகாதவர்கள்
என்று காலங்காலமாய்
இருந்து வரும்
பாரம்பரிய நம்பிக்கை; இந்தத்
தீண்டாமைக்குக் காரணம்
மரபும்,
வழித்தோன்றலும்;
அதாவது நான்கு
வருணமாகப் பிரிக்கப்பட்டு
விட்ட வர்ணாசிரம
தர்மம்;
அதற்கு அடிப்படை
பாரம்பரியத் தொழில்,
கொத்தடிமை போன்றவை என்பதே இந்திய அரசு சாரா அமைப்புகளின் விளக்கம். நிறத்தை வைத்து இவ்வினத்தவர் இன்ன குற்றம் செய்வார்கள் என்ற இன விபரக்குறிப்பு (Racial profiling) மேற்கு நாடுகளின் உளவியலாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இது சாதியைக் குறிப்பிட்டுக் குற்றப் பரம்பரையினர் என்று சட்ட அளவில் செயல்பட்ட காலமும் இருந்தது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கு இடம் தரவில்லை. என்றாலும் இன்ன சாதியினர் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்னும் சாதி விபரக்குறிப்பு (caste profiling) இந்திய மனநிலையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த உளவியலைத் தான் பைத்தியக்கார மனநிலை என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
இனவெறிக்கு
அடுத்த விவாதப்பொருள்
இனப்பாகுபாடு. அங்கு நிறத்தால் வருவது; இங்குப் பிறப்பால் வருவது. இனப்பாகுபாட்டில் என்னென்ன உட்பிரிவுகள் உள்ளனவோ
அதைவிட அதிகமான உட்பிரிவுகள்
சாதியப் பாகுபாட்டிலும் உள்ளன. மூன்றாவது விவாதப்பொருள்
அயல் நாட்டினர்
மீது பகைமை
பற்றியது. இந்தியாவிலோ
சாதியத்தால் ஊருக்கும்
சேரிக்குமே பகைமை
இருப்பதும்,
அது இன்றும்
நிலைத்திருப்பதும் கண்கூடு.
நான்காவது விவாதப்பொருள்
சகிப்பின்மை. இங்கோ
அதற்கு மேலும்
சென்று விளைவை
ஏற்படுத்துபவை சாதிச்
சகிப்பின்மையால் மூளும்
சண்டைகள். ஆக,
படிநிலையில் பொருத்திப்
பார்க்கும்போது ஒரேவித
வேறுபாடு, கொடுமைகள்,
அடக்கு முறைகள்
ஆகியவற்றை அனுபவித்தும்
இனவெறியை உலகநாடுகள்
விவாதிக்கும் பொழுது
சாதியத்தை விவாதிக்க
ஏன் தயங்க
வேண்டும் என்பதுதான்
சமூகவியலாளர்களின் கேள்வி.
இனவெறியை விடவும்
சாதியம் இன்னும்
கொடுமையானது என்று
பலவாறு எடுத்துச்
சொல்லியும், சாதியத்தின்
அடிப்படை மேலைநாடுகளுக்கு
எப்படிப் புரியாமல்
போகிறது என்பதும்
அவர்களின் ஆதங்கம்.
இவர்களது
ஆதங்கத்தை அதிகப்
படுத்தும் விதமாகவே
இந்தியா உள்ளிட்ட
தெற்காசிய நாடுகளின்
வாதம் அமைந்திருப்பதாகவும்
இவர்கள் குற்றம்
சாட்டுகின்றனர். அதாவது
சாதியம் என்பது
இனவெறியைப் போல்
அவ்வளவு ஆழமான
பொருள் இல்லை
என்றும், சாதிப்
பிரிவினைகளோடு சமுதாயம்
இருந்தாலும், அப்பிரச்சனைகள்
உடனடியாகக் கவனிக்கப்பட்டு
நிவாரணமும், தண்டனையும்
வழங்கப்பட்டு விடுகின்றன
என்றும், ஆகவே
சாதியம் ஐ.
நா. அளவில்
விவாதிக்கப்பட வேண்டிய
ஒரு பொருளே
அல்ல என்பதும்
இந்தியாவின் வாதமாக
வைக்கப்படுகிறது. மேலும்
சாதியத்திற்குத் தீர்வாக
இந்தியா நான்கு
வழிகளைச் சொல்கிறது.
முதலாவது இந்திய
அரசியல் அமைப்புச்
சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள
உத்திரவாதம். அதாவது
கல்வி, வேலைவாய்ப்பு,
ஆட்சி அதிகாரம்
ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கான இட
ஒதுக்கீட்டு உரிமைகளும், பிற
சலுகைகளும். இரண்டாவது,
தீண்டாமைக் குற்றத்திற்கு
எதிராக 1955 ஆம்
ஆண்டில் இயற்றப்பட்ட
தனிச் சட்டம்
மற்றும் சிவில்
உரிமைப் பாதுகாப்புச்
சட்டங்கள் 1976,
1989 ஆகியவை. மூன்றாவது,
நமது நீதிமன்ற
நடைமுறைகள். அதாவது
சாதிக் கொடுமையால்
பாதிக்கப்பட்ட எவரும்
நீதிமன்றம் சென்று
எளிதில் பாரபட்சமில்லாத
நீதியைப் பெற
முடிவதற்கான நீதிமன்ற
நெறிமுறைகள். நான்காவதாக,
தேசிய மனித
உரிமை ஆணையம்.
சாதிக் கொடுமைகளுக்கு
எதிராக இத்தனை உரிமைகளை நடைமுறைச்
சாத்தியங்களாகக் கொடுத்திருக்கும்
பொழுது,
சாதிக்கொடுமைகள் பெரிய
அளவில் நடைபெறச்
சாத்தியமே இல்லை
என்பதே ஐக்கிய
நாடுகள் சபையில்
இந்தியாவின் வாதம்.
இந்திய
அரசின் இத்தனைப் பொய்ச் சாட்சிகளையும்
மீறிக் கலவரங்களும்,
கொடுமைகளும் சாதியத்தின்
காரணமாக நடைபெற்று
வருகின்றன என்று
வாதிடும் அரசு
சாரா அமைப்புகள்,
1948 ஆம் ஆண்டில்
நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
பன்னாட்டு மனித
உரிமை விதிமுறைகளின்படி
நடைபெற்று வரும்
மனித உரிமை
மாநாடுகளில் மனித
உரிமைகளுக்காக முன்வைக்கப்படுகின்ற
தலைப்புகளில் சாதியம்
இதுவரை சேர்த்துக்
கொள்ளப்படவில்லை என்றும்
கூறி இன்னும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.
சாதியம்
பற்றி ஐக்கிய
நாடுகள் சபையில்
விவாதித்து விட்டால்
உடனடியாக என்ன
நிகழ்ந்து விடும்?
விவாதம் முடிந்த
அடுத்த நாள்
காலையில் அனைத்து
நாடுகளிலும் சாதிக்கொடுமைகள்
ஒழிந்து விடவா
போகின்றன? இனவெறி
பற்றி இத்தனைக்
காலம் விவாதித்தார்களே, இன்னும்
இனக்கலவரங்கள் நடக்கவில்லையா? என்ற
அடிப்படையான கேள்விகள்
தவிர்க்க முடியாதவை
தான். ஆனால்
நாடு தழுவிய
எந்த சமூக
மாற்றங்களுக்கும் விழிப்புணர்வுதான்
அடிப்படை. இதேபோன்று
உலக நாடுகளின்
கவனத்தை ஈர்த்த
பிரச்சனைகளான மக்கள்
தொகைப் பெருக்கம்,
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு,
பெண்விடுதலை, குழந்தைத்
தொழிலாளர் முறை,
பாலியல் கொடுமைகள்,
மனித உரிமைகள்
குறித்த விழிப்புணர்வு
ஆகியவற்றில் இன்று
உலகத்தின் எந்த
மூலையிலும், சாதாரண
குக்கிராமம் வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த
முடிந்திருக்கிறது என்றால்
அவை பன்னாட்டளவில்
விவாதிக்கப்பட்டதே காரணம்.
அதே விழிப்புணர்வை
சாதியத்தைப் பற்றியும்
உலக அளவில்
ஏற்படுத்தி விட்டால்
இந்தியாவில் நடக்கும்
சாதிக் கலவரங்கள்
உலக அளவில்
கவனத்தைப் பெறவும், நிவாரணங்களைப்
பெறவும் சாத்தியமாகும்.
உலக நாடுகளின்
கண்டனத்தைப் பெறக்கூடும்
என்ற அளவில்
இந்திய அரசு
இதற்குத் தயங்கலாம்.
ஆனால் சாதியமும்,
சாதிப் பிரிவுகளும்
இன்றைய சமுதாயமோ
அல்லது இந்திய
அரசோ ஏற்படுத்தியவை
அல்ல. மனித
உணர்வின் பாரம்பரிய
நம்பிக்கைகளில் சாதியம்
வாழ்ந்து வருகின்றது.
இது தேவையற்றது
என்ற புரிதலும்,
இயல்பான மான
உணர்வும், உலக
அளவில் கண்காணிக்கப்படுகிறோம்
என்ற விழிப்புணர்வுடன்
கூடிய தார்மீக
அடிப்படையும் இனியாவது
இந்தியாவில் சாதிக்
கலவரங்களைத் தடுக்கக்
கூடும் என்ற
நம்பிக்கையில்தான் சாதி
எதிர்ப்பாளர்கள் இந்தியச்
சமாதானத்தையும், அதைக்
கண்டும் காணாமல்
விட்டு வைத்திருக்கும்
மதவாத அரசாங்கங்களையும்
எதிர்க்க வேண்டிய
தேவைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இதற்கான
மாற்று வழிகளைப்
பண்டிதர் அயோத்திதாசரும்,
அண்ணல் அம்பேத்கரும்
முன்கூட்டியே நமக்குக்
கற்றுக் கொடுத்துவிட்டுத்தான்
சென்றிருக்கிறார்கள். பூர்வ குடிமக்கள்
சாதிய வேறுபாட்டினால்
அடிமை என்றும்,
அவலமான பிரிவுகளில்
இருந்தும் வெளியேற
அவர்களுக்குக் கிடைத்த
ஒரு பற்றுக்கோல்தான்
புதிய வழிபாட்டு
முறைகளும், அதன்
மூலம் மாற்று
அடையாளத்தைத் தேடும்
அல்லது அடையும்
வழிகளும். இதுதான்
சாதிய விடுதலைப்
போரின் பரிணாமமாகப் பத்தொன்பதாம்
நூற்றாண்டு தொடங்கி
இந்த நூற்றாண்டு
வரையிலும் தொடர்ந்து
வருகிறது. வரலாற்றின்
ஒவ்வொரு காலகட்டத்திலும்
இப்படிப்பட்ட சாதிய
விடுதலைப் போர்
நிகழ்ந்து, நிகழ்ந்து
ஒடுங்கிப் போய்
விட்டிருக்கிறது. அதன்
அடையாளங்களாகக் சமயங்கள்
மட்டுமே சின்னங்களாக
விளங்கிக் கொண்டிருக்கின்றன.
சமய
அடையாளங்களை மாற்றிக்
கொள்வதன் மூலமாகச்
சாதிய அடையாளங்களை
மாற்றிக் கொள்வதற்கும்
அல்லது இழப்பதற்கும்
முடிகிறதென்றால் சாதியத்திற்கும்,
சமயத்திற்குமான தொடர்பு
என்னவாக இருக்க
முடியும்? அவைதான்
இந்திய ஞானம்
அல்லது தத்துவம்
என்னும் வலிமை
வாய்ந்த அரண்கள். இந்த அரண்களைத் தெளிவான மெய்யியல்களாக நமக்களித்த சமணம், பௌத்தம் போன்றவை இப்போது வலிமையாக இல்லை. சார்வாகம், ஆசீவகம் போன்றவை இருப்பிலேயே இல்லை. இவையெல்லாம் வைதீகம் தின்று செரித்த வெற்றுக் கூடுகள் ஆகிவிட்டன. இப்படி வைதீகப் போர்வை போர்த்தப்பட்டு விட்ட
இந்திய ஞானமும்,
தத்துவமும் தான் இன்று
உலக ஆன்மீக
வாதிகளைக் கவர்ந்து இழுக்கின்றன. ஆனாலும் வைதீகக் கலப்பால்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
மேலாக இந்த
இந்தியத் தத்துவங்கள்
ஆன்மீக வழியில்
சென்ற பெரும்பான்மை
மக்களைச் செழுமை
அடையச் செய்யவில்லை.
கல்வியறிவு இல்லாதவர்கள்,
கடைமாந்தர்கள் என்று
யாருக்காகத் தத்துவங்கள்
உருவாக்கப்பட்டனவோ அவர்களையே
இன்றும் குறை
சொல்லி வரும்
இந்திய ஞானிகள்
அல்லது ஆன்மீகவாதிகள்
அல்லது சாமிகள்
என்று தம்மை
அழைத்துக் கொள்ளும்
மனிதர்கள் தன்னலத்திலேயே
உழன்று ஆணவம்,
கன்மம், மாயை
எனும் மும்மலங்களைக்
கழியாத ஆனால்
சொர்க்க வாசலைக்
காட்டும் சோற்றுத்
துருத்திகளாகவே வாழ்ந்தனர்.
வாழ்ந்து வருகின்றனர்.
இத்தனைத்
தத்துவங்கள் அடங்கிய
இந்திய ஞானம்
தான் இன்று
இந்தியர்களைக் காணும்
இடம் எங்கும்
எச்சில் துப்புவர்களாகவும்,
கண்ட இடங்களில்
கழிவை வெளியேற்றுபவர்களாவும்,
பெரும்பாலான கோயில்களைக்
கழிவறைக்குச் சமமாக
வைத்து இருப்பவர்களாகவும்,
ஊழலை வாழ்வியலாகக்
கொண்டவர்களாகவும், முடியும்
வரை ஆதிக்க
வெறி உள்ளவர்களாகவும், முடியாதபோது அடிமைகளாகவும், வந்தவர்களுக் கெல்லாம்
குனிபவர்களாகவும், மத
வெறியர்களாகவும், சாதியக்
காப்பாளர்களாகவும், கடவுள்களுக்குப்
பூட்டுப் போட்டு
காவல் காப்பவர்களாகவும்,
இப்படிக் கேவலமாக
உழன்று கொண்டிருப்பவர்களின்
உன்னதக் கேடயமாகவும்,
திருவோடாகவும் இந்திய
ஞானம் இவர்களுக்குப்
பயன்பட்டு வருகிறது.
இன்றைய அறிவியலின்படி
டி. என்.
ஏ. உயிரணு
உருவாக்க நிகழ்வில்
இவ்வலிமை வாய்ந்த
அரண்கள் நொறுங்கிப்
போய் விட்டன
என்பதை இன்னும்
அறியாத அல்லது
அறிந்தாலும் ஏற்றுக்கொள்ளாத
அரண் காக்கும்
அறிவு ஜீவிகள்
அப்படியே இருக்கட்டும்.
ஆனால் நொறுங்கிக்கொண்டிருக்கும்
தங்கள் அரண்
மேல் பூசி
மெழுக அறிவியலையும்
துணைக் கொள்ளும்
முயற்சியில் இறங்கிவிட்டனர்
இந்த அறிவுஜீவிகள்
என்பதையும் அப்படியே
இருக்கட்டும் என்று
விட்டு விட
எந்தக் காரணமும்
இல்லை. அதனால்தான் இந்தியச்
சாதிவெறிக் கொடுமைகள்
பன்னாட்டுக் கதவுகளைத்
தட்ட முடியவில்லை
என்ற உண்மையைச்
சாதியைப் பாதுகாக்கும்
சனாதனக்
கொத்தடிமைகள் புரிந்து
கொண்டுவிட்டால் அமெரிக்காவின்
ஜார்ஜ் பிளாய்டும்
ஒன்றுதான்; மேலவளவு
முருகேசனும் ஒன்றுதான்.
முனைவர் சிவ.இளங்கோ
6, கவிஞர்
புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி- 605
011.
இந்தியா.
பேசி: 99940
78907,
Blog: sivailango.blogspot.com


கருத்துகள்