புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை
புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை
( கதை நடந்த காலம் 1922)
"புதுச்சேரில என்னாங்காணும் விசேஷம்" என்று கேட்டார் ராமசாமி நாயக்கர்.
" விசேஷம் ஒண்ணுமில்லே நாயக்கரே! கடலூர் வரை வந்தது தான் வந்தோம், அப்படியே புதுச்சேரிக்குப் போய் நம்ம அரவிந்தரைப் பார்த்துட்டு போகலாமேன்னு தான்"... என்று இழுத்தார் ராமச்சந்திர நாயுடு.
"அரவிந்த கோஷா? அவரை எதுக்குப் பார்க்கணும்? அவர்தான் தீவிரவாதத்திலும் இல்லே, காங்கிரசிலும் இல்லியே" என்றார் நாயக்கர்.
"இல்ல நாயக்கர் வாள், அவர் காங்கிரசில தீவிரமாக இல்லன்னாலும் பெரிய மகான். ஆன்மிகத்தைப் போதிக்க ஆசிரமம் நிறுவும் முயற்சியில இருக்கிறாரு" என்றார் உடன் வந்த கடலூர் காங்கிரஸ் செயலாளர் குமாரசாமிப் பிள்ளை.
"யோவ் குமாரசாமி! இந்த மகான், ஆசிரமக் கதையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்யா! நான் காசி வரைக்கும் போய்ப் பார்த்திட்டு வந்தவன்" என்றார் நாயக்கர்.
" சரி சரி நாயக்கரே! அதை விடுங்க. அவரு பழைய காங்கிரஸ்காரர். நீங்க சென்னை மாகாணக் காங்கிரஸ் செயலாளர். நீங்களாவது உங்க வாதத் திறமையைக் காட்டி அவரை மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டு வாங்களேன்" என்று சாம்பசிவ ஐயர் வழக்கம்போல் சீவி விட்டார்.
"ம்.. எனக்குத் தெரியாதா உம்ம நோக்கமெல்லாம்" என்று நாயக்கர் நினைத்துக்கொண்டு, "நமக்கு நிறைய வேலையிருக்கு. ஆனா புதுச்சேரிக் காத்துல ஏதோ சுதந்திர வாடை இருக்குன்றானே, அதைச் சுவாசிக்கவாச்சம் நான் புதுச்சேரிக்கு வர்றேன்" என்று சொல்லவும், ஏதோ இந்த அளவுக்காவது ஒத்துக்கொண்டாரே என்று மகிழ்ந்தார் இராமச்சந்திர நாயுடு. கார் டிரைவரிடம் அவ்வாறே புதுச்சேரிக்கு வண்டியை விடச் சொன்னார்.
கடலூர் சிறைச்சாலையை விட்டுப் புறப்பட்ட கார், முள்ளோடை தாண்டிப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தது. சுற்றிலுமுள்ள வயல்வெளிக் காட்சிகளை அனைவரும் கண்டு ஆனந்தித்து வர நாயுடுக்கு மட்டும் மனசு துறுதுறுவென்று இருந்தது. புதுச்சேரிக்குப் போய், எப்படியும் நாயக்கரைக் கூட்டிக்கொண்டு அரவிந்தரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை மனதுக்குள்ளேயே அசை போட்டபடி இயற்கையையும் ரசித்துக் கொண்டு வந்தார் ராமச்சந்திர நாயுடு.
காரில் உடன் வந்து கொண்டிருந்த ருக்மணி அம்மாளுக்கு மனசும், முகமும் நிறைவாய் இருந்தன. காங்கிரஸ் கட்சியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தவரும், தனது கணவருமான டாக்டர் பி. வரதராஜூலு நாயுடு, மறியல் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்ற ஒரு மாதம் கழித்து, இன்றுதான் அவரைப் பார்த்து அளவளாவி விட்டு வந்த திருப்தி ருக்குமணியம்மாளுக்கு. நாட்டு நலன் கருதி ஈடுபட்ட போராட்டத்தில் சிறைப்பட்டுக் கடலூர் சிறையில் இருக்கும் அவர், எப்படி எல்லாம் அவதிப்படுகிறாரோ? என்ற கவலை, சேலத்திலிருந்து வந்து சிறையில் வரதராஜுலு நாயுடுவைச் சந்தித்ததும் பறந்து போய்விட்டது.
சிரித்த முகத்தோடு கம்பீரப் பார்வையுடன் சிறைக்குள் வந்தவர்களை வரவேற்றார் வரதராஜுலு நாயுடு. "இந்தச் சிறைவாசம் முன்னை விடப் பன்மடங்கு தேசத்திற்கு உழைக்க ஊக்கம் அளிக்கிறது" என்று உற்சாகத்தோடும், சிரிப்போடும் சொன்னவுடன், அவரைக்காண வந்தவர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. கள்ளுக்கடை மறியலில் கைதாகி, கோவை சிறையில் இருந்து கொஞ்ச நாள் முன்பு தான் விடுதலையாகி இருந்த ராமசாமி நாயக்கருக்கு வாழ்த்துச் சொன்னார் நாயுடு. விசாரணை, பரிமாற்றம் எல்லாம் முடிந்து "உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று தான் சொன்னதற்குக், "கவலைப்படாதே இங்கு நான் சௌக்கியமாக இருக்கிறேனாக்கும்" என்று கிண்டலாய் நாயுடு கூறவும், அனைவரும் சிரித்ததை நினைத்துப் புன்முறுவல் பூத்தாலும், உள்ளத்தில் சிறிதளவு சோகமும் குடிகொண்டு, கண்களில் ஈரம் பதிய வைத்தது ருக்குமணி அம்மாளுக்கு.
எப்படியோ தன் கவலையை மாற்ற சேலத்திலிருந்து கடலூருக்கு வந்து கணவரைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் ராமசாமி நாயக்கருக்கும், தன் தம்பி ராமச்சந்திர நாயுடுவுக்கும் மனதுக்குள் நன்றி தெரிவித்துக் கொண்டார் ருக்குமணி அம்மாள்.
கார் அரியாங்குப்பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. காரின் முன் பக்கம் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி வந்து கொண்டிருந்த ராமசாமி நாயக்கர், அரியாங்குப்பம் திருப்பத்தில் இருந்த சுங்க வரி வசூல் சாவடியை பார்த்துக்கொண்டே, "நாயுடு! வரி வசூலிக்கிறதுல பிரெஞ்சுக் காரன் பிரிட்டிஷ்காரனை விடக் கெட்டி தான் போலிருக்கு. முறையா வேலை நடக்குதய்யா" என்றார்.
சட்டென்று விழிப்புக்கு வந்த ராமச்சந்திர நாயுடு, ஒரு நிமிஷமும் சோராமல் இப்படி எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வர்றாரே நம்ம நாயக்கர் என்று வியந்து, இல்லேன்னா பிராமண ஆதிக்கம் உள்ள காங்கிரஸ் கட்சியில தலைவரா ஒரு நாயக்கர் எப்படி நீடிக்க முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "ஆமாம் நாயக்கர் வாள்" என்று குரல் கொடுத்தார்.
"இன்னும் எவ்வளவு தூரம் போகணுங்க தம்பி" என்று நாயக்கர் ஓட்டுனரைப் பார்த்துக் கேட்க, "மூணு கல்லுங்க சாமி" என்றார் கார் டிரைவர்.
"தம்பி எதுக்கு ஆசாமியை சாமி என்ன சொல்ற? இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் படிப்பையும், வேலையையும் கோட்டை விட்டுட்டீங்க. இப்போ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்னு சொன்னா, நம்ம கட்சியிலேயே ஒத்துக்க மாட்டேங்குறான். திருச்சி, திருநெல்வேலி, தஞ்சை காங்கிரஸ் மாநாடுகள்ல நான் கொண்டு வந்த வகுப்புவாதத் தீர்மானத்தை காங்கிரஸ் காரனே தோக்கடிக்கறான். இதுக்கு ஜஸ்டிஸ் கட்சியே தேவலாயாட்டமில்ல இருக்குது" என்றால் நாயக்கர்.
"ஆளுங்கட்சியைப் புகழுற எதிர்க்கட்சித் தலைவரை நான் இப்பத்தான் பாக்குறேன்" என்று காரில் உடன் வந்த குமாரசாமிப் பிள்ளை கூறவும், அதை ஆமோதித்துச் சிரித்தனர் பொன்னுசாமி முதலியாரும், பக்கிரிசாமி நாயுடுவும், சாம்பசிவ ஐயரும்.
ஒருவழியாகக் கார் புதுச்சேரி வந்து, கடற்கரையைச் சுற்றி, சம்பா கோவிலைக் கடந்து, அரவிந்தர் வீட்டு வாயில் முன் வந்து நின்றது.
எல்லோரும் காரை விட்டு இறங்க, "நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. நான் வண்டியிலேயே இருக்குறேன்" என்றார் நாயக்கர்.
"சரியாய்ப் போச்சு, நீங்க இல்லாம நாங்க எப்படிப் போய் அவரைச் சந்திக்கிறது? அது நடக்கிற காரியமில்ல. ஏழெட்டு வருஷம் மின்னாடி (1915) மகாத்மா காந்தி புதுச்சேரி வந்தப்போ, அவரைச் சந்திக்க மறுத்தாராம் அரவிந்தர். அதனால உங்களை முன்னிறுத்தி தான் நாங்க எல்லாம் அவரைச் சந்திக்க முடியும்" என்றார் குமாரசாமிப் பிள்ளை.
மகாத்மா காந்தியைத் தன் ஆத்ம புருஷராக ஏற்றுக்கொண்டவர் நாயக்கர். மகாத்மா, கள்ளுண்ணாமையை ஆதரித்தார் என்பதற்காகத் தன் சொந்தத் தென்னந்தோப்புக் குத்தகையை ரத்துச் செய்தவர் அவர். அதை ஒப்பந்தக்காரர்கள் ஒப்புக்கொள்ளாமல் போகவே இரவோடு இரவாக ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தியவர் அவர். மகாத்மா சொன்னார் என்று ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, நீதிமன்றங்களில் தான் தொடுத்த வழக்குகளை மேற்கொண்டுத் தொடராமல் 50,000 ரூபாய் வரை அந்நாளில் இழந்தவர். முரட்டுக் கதரையே எப்போதும் அணிந்து அதைத் தன் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றுக் கதராடைத் தொழிலாளர்களுக்கு உதவியவர். இப்படிப்பட்டவருக்கு மகாத்மாவைச் சந்திக்க மாட்டேன் என்று சொன்னவர் மேல் கோபம் வராமலா போகும்?
"ஏன்யா, மகாத்மாவையே சந்திக்க மாட்டேன் என்று சொன்னவனை எப்படிய்யா 'மகான்' னு சொல்றீங்க. இவன் என்னை மட்டும் எப்படிச் சந்திப்பான்?" என்று கோபமாகக் கேட்டார் நாயக்கர்.
"சரி, மகாத்மாவை ஏன் சந்திக்கலைன்னு அவரேயே கேட்டு டுங்கோ" என்று சாம்பசிவ ஐயர் பல்லிளிக்க, "நீரெல்லாம் மாறவே மாட்டீரோ" என்று நினைத்தாலும், தன்னால் தோழர்களின் ஆர்வம் தடைப்படுகிறதே என்றும் நினைத்துக் கொண்டார் நாயக்கர்.
இளமைக்காலத்தில் ஈரோட்டில் தன் தந்தையாரைப் பார்க்க வரும் பல சாமியார்கள், ஞானிகள் ஆகியோரிடமெல்லாம் கடவுள், தத்துவம் என்று வாதாடிப் பழுத்த அனுபவத்தால் கனிந்திருந்த நாயக்கர், அரவிந்தர் என்னும் 'மகானை'ப் பார்க்க இசைந்து, "சரி வருகிறேன். பாவம் அரவிந்தர். அவருக்கு இன்றைக்குச் சோதனைதான்" என்று திருவாய் மலர்ந்தார்.
ஆனால் அரவிந்தருக்கு நல்ல காலமும், நாயக்கருக்கு சோதனையாகவும் ஆயிற்று அன்றைக்கு. அரவிந்தர் யோகத்தில் அமர்ந்து விட்டபடியால் அன்றைக்கு யாரையும் சந்திக்க இயலாத நிலையில், நாயக்கரின் கேள்விகளில் இருந்து தப்பித்தது அரவிந்தருக்கு நல்லகாலம். நாயக்கருக்குச் சோதனை பிரெஞ்சிந்தியக் காவல் அதிகாரி ரூபத்தில் வந்தது.
அரவிந்தரைத் "தரிசிக்க" முடியாமல் போயிற்றே என்று மற்றவர்கள் நினைத்தாலும், அதை ஒரு பொருட்டாக நினைக்காத நாயக்கர், "வேறு என்ன பார்க்க வேண்டிய இடமிருக்கிறது" என்று வினவினார்.
"கடைத்தெருப் பக்கம் போனால் எதாச்சும் வாங்கலாம்" என்று ருக்மணியம்மாள் பிரியப்படவே, சரியென்று அனைவரும் காரில் ஏறி 'டியூப்ளே' வீதி வந்தடைந்தனர். பெரியகடைக் காவல் நிலையம் முன்பு கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். ஓட்டுநர் வண்டியை நிறுத்தவும்,
"பர்தோன் மிசியே (மன்னியுங்கள் ஐயா), தயவுசெய்து எல்லோரும் இறங்கி வாருங்கள்" என்று அந்த நபர் கூறியதும், அனைவரும் ஒன்றும் புரியாமல் இறங்கினார்கள்.
"என்னுடன் வாருங்கள்" என்று அந்த ஆசாமி முன்னே செல்ல, சேலம், கடலூரில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். நாயக்கர் உதட்டில் மட்டும் புன்னகை மிளிர்ந்தது.
இதோ, அதோ என்று அந்த நபர் அனைவரையும் பெரியகடைக் காவல் நிலையத்திற்கு உள்ளேயே அழைத்துச் சென்றுவிட்டார்.
இவர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு அந்தப் பிரெஞ்சிந்தியக் காவல் நிலையத்தைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில்,
"படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும், இந்தப் பயந்தீர்த்திப் பொழுதே, என்னுடல் உயிராதியவெலாம், நீ யெடுத்துக்கொண்டு, உன்னுடல் உயிராதியவெலாம், உவந்தெனக்கேயளிப்பாய்"
என்று பாடலொன்று கேட்கவே, அனைவரும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினர்.
" இவர் என்ன இனிஸ்பெக்டரா?" என்று நாயுடு கேட்கவும், "இது பிரெஞ்சிந்தியவாச்சே! அவங்க யூனிஃபார்ம் எல்லாம் இப்படித்தான் இருக்கும்" என்றார் நாயக்கர்.
இந்த நேரம் பார்த்து, தேவாரப்பாடல் பாடிக் கொண்டே வந்த அந்தக் காவல் அதிகாரி, "முசியே, உங்கள் ஊர், பெயர் முதலியவைகளைச் சொல்லுங்கள்" என்று நாயுடுவைக் குறிப்பிட்டுக் கேட்டார்.
நாயுடு சிரித்துக்கொண்டே, "என்ன ஐயா, நீங்கள் யார்? இந்த போலீஸ் ஸ்டேஷனில் எங்களை எதற்காக அழைத்து வந்தீர்கள். ஊர், பெயர் முதலியவை எதற்கு? இதென்ன புதுமையா இருக்கிறதே" என்று வினவினார்.
உடனே அந்தக் காவல் அதிகாரி "நீங்கள் அரவிந்த கோஷ் அவர்களைப் பார்க்கப் போனவர்கள். ஆகையால் உங்களுடைய விலாசம் முதலியது பூராவும் இங்கே எழுதி வைத்து விட்டுப் போக வேண்டும்" என்று கூறி விட்டு, மறுபடியும் தேவாரம் பாட ஆரம்பித்துவிட்டார்.
வந்தவர்கள் எதுவும் சொல்லாமல், கேட்ட விஷயங்களை 'ரிகார்டு' செய்து விட்டு வெளியே வந்தனர்.
"அரவிந்தரைப் பார்க்காததற்கே இத்தனை கஷ்டம். பார்த்திருந்தால் இன்னும் என்ன கஷ்டமோ?" என்று சாம்பசிவ அய்யர் புலம்ப,
"பார்த்திருந்தா அந்த ஆளுக்குத்தான்யா கஷ்டம்" என்றார் நாயக்கர், சிரித்துக்கொண்டே.
காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது, தங்கள் வண்டியை வழிமறித்து கூட்டிச் சென்ற அந்த ஆசாமி நிற்கவும், அவரைப் பார்த்த நாயக்கர், "ஓய்! நாங்கள் அரவிந்த கோஷ் வீட்டுக்கு வந்தபோது, இந்த விவரங்களைக் கேட்டிருந்தால் சொல்லியிருக்க மாட்டோமா? நீர் அங்குதானே வாயிற்படியில் முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தீர். இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்?" என்ற நாயக்கர் கேட்கவும்,
"இவரை அங்கேயே பார்த்து விட்டீர்களா" என்று நாயக்கரைப் பார்த்து ஆச்சரியமாக கேட்டார் நாயுடு.
"இவனென்ன! கடலூரில் இருந்தே இன்னொரு சி.ஐ.டி. நம்மைத் தொடர்ந்து வந்தானே! அவன் இந்த சி.ஐ.டிக்கு ரிப்போர்ட் செய்யவும், இவன் பெரிய வேட்டை பிடித்து, இவனுடைய அதிகாரி இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டான். நானென்னமோ பிரிட்டிஷ்காரனை விடப் பிரெஞ்சுக்காரன் மேல் என்று நினைத்து தான் இங்கு வந்தேன். ஆனால் ஆதிக்கம்ணு வரும்போது இரண்டு பேரும் ஒரே இனம் என்று இங்கு வந்த பிறகு தான் புரிந்து கொண்டேன்" என்றார் ராமசாமி நாயக்கர்.
"என்ன கடலூரில் இருந்து நம்மை ஒற்றர்கள் பின்தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இது எதுவுமே நமக்குத் தெரியாமல் போயிற்றே! ஆனால் நாயக்கர் மட்டும் இது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார். சாமானியப் பட்டவர் இல்லய்யா இந்த நாயக்கர். வருங்காலத்தில் இந்தத் தமிழ்நாடு இவர் சொற்படி ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று நாயுடு சொல்லவும், சாம்பசிவ ஐயர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் அதை ஆமோதித்தனர்.
ஆம்! அது உண்மையாகத் தான் போயிற்று! பிற்காலத்தில் நாயக்கர் தொடங்கிய இயக்கம்தான் பேரியக்கமாக உருவெடுத்து, இன்றுவரை தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்தாலும், நாயக்கர் பெயரைச் சொல்லித்தான் ஆட்சி செய்ய வேண்டியதாகிப் போய்விட்டது.
அந்த நாயக்கர் வேறு யாரும் இல்லை. "தந்தை பெரியார்" என்று இன்று அன்புடன் அழைக்கப்படும் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் அவர். புதுச்சேரிக்கு அவர் வந்த முதல் நிகழ்வு தான் இங்குக் கதையாகப் படைக்கப்பட்டுள்ளது.
(இக்கதை 15. 6.1922 இல் புதுச்சேரியில் இருந்து வெளிவந்த சுகாபிவிருத்தினி என்ற இதழில் வெளிவந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது)
கருத்துகள்