தேசியம்: திராவிடம்: தமிழ்; அம்பேத்கர்: பெரியார்: அண்ணா
தேசியம்: திராவிடம்: தமிழ்
அம்பேத்கர்: பெரியார்: அண்ணா
அண்ணல் அம்பேத்கரும், அறிஞர் அண்ணாவும் இன்னும் இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும். உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். அது நடவாமல் போய் விட்டதில் இந்தியாவிற்குப் பெரும் நட்டம் தான். ஆனாலும், இன்றும் உலக அரங்கில் இந்தியா ஏதாவது ஒரு பொருளில் பாராட்டப்படுமானால், அதன் பின்னணிக் கட்டமைப்பில் அண்ணல் அம்பேத்கர் தான் இருந்து வருகிறார். அதே போல இந்திய அளவில் தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறிய மாநிலமாகப் பேசப்படுவதன் பின்னணியில் அறிஞர் அண்ணாதான் அதன் அடிப்படையாக உள்ளார்.
அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணம் நீதிக்கட்சியில் தொடங்கியது. அவருடைய நீதிக்கட்சிப் பயணத்திற்குப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் வரதராஜன், சண்டே அப்சர்வர் இதழாசிரியர் பி. பாலசுப்பிரமணியம், சர். ஏ. இராமசாமி ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர். நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றாகக் கலந்து கொண்ட திருப்பூர் செங்குந்தர் மாநாட்டு மேடையில் தான் (1935) பெரியாரைச் சந்தித்தார் அண்ணா. அந்தச் சந்திப்பு அண்ணாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழ் நாட்டின் எதிர்காலத்தையே புரட்டிப் போட்டது. பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுப் பொது வாழ்வை நாடிய இளைஞராக இருந்த அண்ணா, அப்போதே பெரியாருடன் ஈரோடு சென்று விடுதலை இதழின் துணை ஆசிரியராக ஆனார். 1938 ஆம் ஆண்டில் முகிழ்த்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1940இல் விலகியது. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மையப்படுத்தியவர்களும், இயக்கங்களும் ஓரணியில் நின்றனர். இதனால் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் இயல்பாக எழுந்தது. அதே நேரம் சுயமரியாதை இயக்கத் தலைவராக இருந்த தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கும் தலைவராக ஆனார். ஆனால் அப்போது (1940 இல்) தமிழ்நாடு சென்னை மாகாணத்தில் இருந்தது. பிறமொழி பேசும் பகுதிகளான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் (புதுக்கோட்டை, திருவாங்கூர், மைசூர் உள்ளிட்ட சில சமஸ்தானங்கள் தவிர்த்து) ஆகியவையும் சென்னை மாகாணத்தில் இருந்தன. எனவே அவர்களின் நிலையையும் கருதி, 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முழுக்கம் பின்மொழியப் பட்டது.
தேர்தல் அரசியலை ஒருபோதும் ஏற்காத பெரியார், 1919 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாகத் தேர்தல் அரசியலில் மூழ்கி முத்தெடுத்த (மும்முறை ஆட்சியில் இருந்த) அரசியல் கட்சியான நீதிக் கட்சிக்குத் தலைவராக ஆனதால், அரசியல் நிலைப்பாடுகளைக் கைக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனைப் பெரியார் விரும்பாவிட்டாலும், நீதிக் கட்சியின் பிரமுகர்கள் விரும்பியதால் உட்கட்சிப் பூசல்கள் பெரிதாக எழுந்து நின்றன. இவை எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி 1944ஆம் ஆண்டு சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் வைக்கப்பட்டது. நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்த புதிய அமைப்பான திராவிடர் கழகம் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் தந்த உயர் விருதுகளான சர் பட்டம், ராவ் பகதூர், திவான் பகதூர் ஆகிய பட்டங்களை உதறிவிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களும் 'அண்ணாதுரை தீர்மானங்கள்' என முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சமூகச் சீர்திருத்தக் கொள்கைப் பயணத்தில் தொய்வின்றிச் சென்று கொண்டிருந்த திராவிடர் கழகத்தில் 1949 ஆம் ஆண்டு ஒரு திருப்பம் ஏற்பட்டது. சில, பல பிரச்சினைகளை முன்வைத்து, அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்புத் தொடங்கப்பட்டது. இதுவும் சமூகச் சீர்திருத்த இயக்கமே என்றும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளே திமுகவின் கொள்கைகள் என்றும் அண்ணா அறிவித்தார். இதன் உச்சபட்சமாகப் புதிய அமைப்புக்கும் (திமுக) பெரியாரே தலைவர் என்றும், அதனால் திமுகவின் தலைவர் பதவி காலியாகவே வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் பெரியாரோ தேர்தல் அரசியலை மனதில் கொண்டுதான் அண்ணாவும், பிறரும் தனி அமைப்பைத் தொடங்கி உள்ளனர் என்றார்.
தொடக்கத்தில் அண்ணா சொன்னபடியே திமுக ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கமாகவே செயல்பட்டு, 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தவிர்த்தது. ஆனாலும், பின்னர் ஏற்பட்ட காலச்சூழல் திமுகவைத் தேர்தல் அரசியலை நோக்கித் தள்ளிக் கொண்டே வந்தது. இந்நிலையில் 1955 ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில், தொண்டர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தேர்தலில் போட்டியிடலாம் என்று பெரும்பாலான தொண்டர்கள் விரும்பியதால், அடுத்து வந்த 1957 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் திமுக போட்டியிட்டது. சமூகச் சீர்திருத்த இயக்கத் தலைவரான பெரியாருடன் 14 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்த அண்ணா, தனியாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி, எட்டு ஆண்டுகள் கழித்துத் தேர்தல் அரசியலில் பங்குபெற்றதற்கு என்ன காரணம்? "நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான்" என்று அவரைப் பிரிந்த போதும் கூறியவர், பின்னர் அவரது சமூகச் சீர்திருத்தப் பாதையை விட்டு, தேர்தல் அரசியலை நோக்கித் திரும்பியதற்கு என்ன காரணம்? இதற்கான பதிலை, "பெரியாரின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை நிறைவேற்றவே திமுக அரசியலில் நுழைகிறது" என்று அண்ணாவே கூறினார். அவர் சொன்னதுபோலவே, 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பின்னர், பெரியாரை நேரில் சந்தித்து, "இந்த அரசு பெரியாருக்குக் காணிக்கை" என்று கூறி, அவர் ஏற்கனவே கூறியதை நியாயப்படுத்தினார். பெரியாரின் பகுத்தறிவு அரசாங்கம், சீர்திருத்தத் திருமணம் போன்ற கொள்கைகளைச் சட்டமாகவும் ஆக்கினார்.
இந்த நிலையை அண்ணா அடைவதற்கு, அதாவது தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வென்றதற்கு, அவர் மனதில் வேறு சில பின்புலங்களும் உண்டு. அவற்றுள் முதலாவதாக நிற்பவர் அண்ணல் அம்பேத்கார். அம்பேத்கர் காட்டிய வழியில்தான் அண்ணா தேர்தல் அரசியலை விரும்பி ஏற்றார். அதற்கும் முன்பாக, 1935இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டைத் தொகுதியில், நீதிக்கட்சி வேட்பாளராகக் களமிறங்கித் தோற்ற வரலாறும் அண்ணாவுக்கு உண்டு. ஆனாலும் 1940 ஆம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கரை அண்ணா சந்தித்ததே, அவருடைய தேர்தல் அரசியலுக்கான அடிப்படை வித்தாக அமைந்தது.
1940 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள், பெரியாருடன் மும்பை சென்றடைந்தனர் அண்ணாவும் பிற தோழர்களும். அவர்கள் அங்கு தங்கியிருந்த ஒரு வார காலமும் டாக்டர் அம்பேத்கரின் அரவணைப்பிலேயே நன்கு கவனிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் தேநீர் விருந்து, உணவு விருந்தளித்து, அம்பேத்கர் அங்கு பம்பாயில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும், ஜனாப் ஜின்னா மற்றும் பல முக்கியப் பிரமுகர்களின் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்து தந்தார். தாராவி, காலேகில்லா போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்த ஆதி திராவிடர் வாலிபர் கழகத்தின் ஆண்டு விழாவிலும், பிற கூட்டங்களிலும் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டு பேசினர். இதில் பல கூட்டங்களில் அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கி உரையாற்றினார். அம்பேத்கரின் ஆங்கிலப் பேச்சை அங்கு தமிழில் மொழி பெயர்த்தார் அண்ணா. அம்பேத்கர் இல்லத்திலும், முகமது அலி ஜின்னா இல்லத்திலும் பெரியாருடன் நடந்த சந்திப்புகளில் அம் மூவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராகவும் கலந்து கொண்டார் அண்ணா. இது பற்றி விரிவான செய்திகள் விடுதலை இதழில் வெளிவந்தன. (விடுதலை 4-18.01.1940). இந்தக் காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், 1937 இல் நடந்த பம்பாய் மாகாண சட்டமன்றத் தேர்தலில், சுதந்திரத் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஜின்னா முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்தார். காங்கிரசோடு நெருக்கமான பேச்சுவார்த்தையில் இருந்தாலும், முஸ்லிம் லீக் அரசியல் கட்சியாக இல்லை. ஆனால் அம்பேத்கரின் அரசியல் ஈடுபாடும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவரைத் தவிர்க்க முடியாத ஊடகவியலாளர்களின் வருகைகளும், அவர்களின் வெளியீடுகளும், செய்திகளும், வேறு பல பிரபலங்களின் வருகையும், அவர்களின் ஆதரவும் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தன. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அண்ணல் அம்பேத்கரின் சென்னை வருகையும், அப்போது அவருடன் நடந்த சந்திப்புகளும் அண்ணாவை அம்பேத்கர் பால் மிகவும் ஈர்த்தன.
அண்ணல் அம்பேத்கரின் தேர்தல் அரசியல் ஈடுபாடு தான் அண்ணாவை அதிகம் ஈர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படை மாற்றத்தைப் பெரியார் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்ந்தே இருந்தார் அண்ணா. ஆனாலும் வேறு சூழ்நிலைகளால் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சித் தொடங்கிய பிறகு, அம்பேத்கரின் அரசியல் ஈடுபாடு காரணமாக, அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்று, தேர்தல் அரசியலில் அண்ணா நுழைந்திருக்கிறார். அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் அண்ணாவிற்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கைகளாக வடிவமைக்கப் பட்டவை அனைத்தும் அம்பேத்கரின் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளாகவும் இருந்தன. மேலும் அம்பேத்கரைத் தனது தலைவராகப் பெரியாரும் பலமுறை முன் மொழிந்திருக்கிறார். ஆனாலும் தன் ஒரே தலைவராகப் பெரியாரை கூறிவிட்டதால், அம்பேத்கரை தன் ஒரே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுவிட்ட நடைமுறைகள்தான், பின்னாட்களில் அண்ணாவின் தேர்தல் அரசியல் ஈடுபாட்டையும், பொருளாதாரக் கொள்கைத் திட்டமிடலையும் இந்தியாவுக்கே அறிவுறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியே இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற தேசிய இனங்களுக்கும் வழிகாட்டும் சிறந்த பாராளுமன்ற வாதியாக அண்ணாவை முன்னிறுத்தி உள்ளன.
பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் 1. 5. 1962 அன்று ஆற்றிய தனது முதல் உரையில், மக்களாட்சிக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாத நாடாளுமன்றத் தேர்தல் முறையைச் சாடுகிறார் அண்ணா. தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை வற்புறுத்தி அண்ணா பேசிய பேச்சில், பிரிட்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமைத் தொடர்பாக அம்பேத்கர் வலியுறுத்திய பிரதிநிதித்துவ ஜனநாயக முறை எதிரொலித்தது. மகாத்மாவையே ஆட்டம் காண வைத்த அம்பேத்கரைப் போல், இந்திய நாடாளுமன்றத்தின் வட இந்தியத் தலைவர்கள் அனைவரையும், பஞ்சசீலம் பேசிய ஆசிய ஜோதி நேரு உட்பட, திடுக்கிட வைத்தார் அண்ணா. "உங்களோடு ஒரு நாடாக இருக்கக் கூட ஆசைதான். ஆனால் ஆசை வேறு; உண்மைகள் வேறு" என்று கூறிய அண்ணா, "இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான, மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட சில விஷயங்கள் எங்களிடம் உண்டு என்று கருதுகிறோம். அதனால் எங்களுக்கு சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்" என்று அண்ணா பேசிய போது அலண்டு போனது நாடாளுமன்ற மேலவை. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமானது, இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய இனங்கள் சகவாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பை மறுத்து விடவில்லை என்று, பிரிவினையிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் உண்டு என்ற புதிய சிந்தனை வாசலைத் திறந்து வைத்தார் அண்ணா.
குடியரசுத் தலைவரின் உரையில் தேசியமும், ஒருமைப்பாடும் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டிப் பிற உறுப்பினர்கள் அண்ணாவை மடக்கியபோது, "ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம் தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது?" என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் அண்ணா. நம்மைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் எண்ணங்களின் வறுமையைத் தான் இந்த தேசிய ஒருமைப்பாடு என்கிற சொல் காட்டுகிறது என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிலளித்த அவர், தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றிக் குறிப்பிட்டு, விழிப்புற்றிருக்கும் அவர்களின் சார்பில்தான், தன் பேச்சு அமைந்திருப்பதாகக் கூறினார். இந்தியா ஒரு நாடல்ல என்றும், ஏற்கனவே பிரிந்து இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து இருக்கும் இந்தத் துணைக்கண்டம், கூட்டாட்சியாகவோ அல்லது பிரிக்கப்பட்டோ சிறிய ஒரே மாதிரி மக்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பாக மாறுவது தவிர்க்க முடியாதது என்றும் கூறினார். எல்லாப் பகுதியும் கலந்து பழகி சமுதாய முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றமும் இந்தக் கூட்டமைப்பில் கூட்டாட்சித் தத்துவமாகப் பெருகி வளரும் என்று கூறினார். ஒரு மத்திய அரசு கூடத் தேவைப்படாத கூட்டமைப்பை அண்ணா உருவகமாகக் கட்டமைத்தார். "தமிழ்நாடு என்பது தேசம்; திராவிட நாடு என்பது ஒரு கூட்டரசு; இந்தியா என்பது ஒரு பாதுகாப்புக் கழகம்; தேசியத்தை இப்படிப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் பாடம் நடத்தினார்.
இதையேதான் அம்பேத்கரும் கூறினார். இந்தியா முழுவதும் ஒரே ஒன்றியமாக இருக்க முடியாது என்று கூறிய அவர், தென்னிந்திய மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாகவும் (Federation of Southern States), வட இந்திய மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாகவும் (Federation of Northern States) அமைத்து, இரண்டையும் சேர்த்து சம வாக்குரிமை அளித்து, இந்தியப் பெரும் கூட்டமைப்பை (Confederation of India) உருவாக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவில், 1955 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படும் சூழ்நிலையில் தான் அம்பேத்கார் இப்படிக் கூறினார். தென்னிந்தியாவும், வட இந்தியாவும் சேர்ந்தே இருக்க முடியாது என்று கூறிய அவர், தென்னிந்தியர்கள் கல்வியில் முன்னேறியவர்கள், பகுத்தறிவுவாதிகள், புதுமையை விரும்புபவர்கள்; இதற்கு நேர் எதிரானவர்கள் வட இந்தியர்கள்; எனவே எப்படி இரண்டு பேரும் சேர்ந்து இருக்க முடியும்? என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். அம்பேத்கர் சொன்னதற்கு யாரும் எதிர் விளைவு காட்டாத நிலையில், அதையே அண்ணா பாராளுமன்றத்தில் கூறிய போது அவரைப் பிரிவினைவாதி என்றனர். ஆனால் அண்ணா எதைத் திராவிட ஒன்றியம் என்று குறிப்பிட்டுக் கேட்டாரோ, அதையேதான் பின்னாட்களில் நிதிக்குழு தென் மண்டலமாகப் பிரித்தது. தென் மண்டலம் உட்பட இந்தியாவை ஐந்து பிராந்திய மண்டலங்களாக நிதிக்குழு பிரித்ததைத்தான் "அண்ணாவின் பார்வை இந்த விஷயத்தில் ரொம்ப சரி" என்று காமராசரும் கூறினார்.
அன்றையப் பேச்சில், இந்திய நாடாளுமன்ற வாதிகளுக்குச் சமத்துவத்தைப் பற்றிப் புதிய விளக்கமும் தந்தார் அண்ணா. "சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது மட்டுமல்ல; எல்லோருக்கும் சம வாய்ப்புத் தருவது" என்று கூறிய அண்ணா, இந்தியச் சமூகப் பின்னணியில் சமூகநீதிக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சமூக நலத்திட்டங்களை சமத்துவத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கவும் அவர் வலியுறுத்தினார். "சோசலிச சமுதாயத்தில் தான் சோசலிசத் திட்டங்கள் வெற்றி பெறும். ஆனால் நடைமுறையில் இங்கு சோசலிசம் இல்லை. சோசலிசத்திற்கு அரசாங்கம் தரும் வேறுபட்ட விளக்கங்களால் தான் அது தோல்வியைத் தழுவி நிற்கிறது" என்று அவர்களுக்கு அவர்களின் அறியாமையை அல்லது அறிந்தும் அறியாத போக்கை விளக்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வறிஞர் பால் பேரன் ஒருமுறை ஜவகர்லால் நேருவிடம், "இந்தியா ஒரு சோசலிச சமுதாயமாகக் கட்டமைக்கப்பட்டால்தான் ஐந்தாண்டுத் திட்டங்கள் வெற்றியடைய முடியும்" என்றார். இதே கருத்தை, இந்தியாவின் ஒரு மூலையான தமிழ் நாட்டில் இருந்து வந்த ஒற்றைத் திமுக உறுப்பினரான அண்ணா பாராளுமன்றத்தில் பேசியது நேருவை வியப்பில் ஆழ்த்தியது.
நேரு அரசாங்கத்திற்கு எதிராக அண்ணா முன்வைத்த விமர்சனங்களின் வழியாக அவருடைய பொருளாதாரப் பார்வையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதன் வழி, அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை எவ்வளவு தனித்துவமானது என்பதும் தெரியவரும். பொருளாதாரம் கற்ற அண்ணாவின் புத்தகப் பசிக்கு அண்ணல் அம்பேத்கரின் நூல்களும், பொருளாதாரம் தொடர்பான புத்தகங்களும் எந்த அளவுக்குப் பெருந்தீனியாக ஆகி இருந்தன என்பதைப் பின்னாட்களில் அண்ணாவின் பேச்சுகளும், செயல்பாடுகளும் நிரூபித்துள்ளன. தமிழ்நாட்டில் இன்று சிறு, குறு நிலவுடைமையாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அண்ணாவின் பொருளாதாரக் கொள்கையே காரணம். விவசாயத்திலும் கவனம் செலுத்தி ஒரு நாட்டைத் தொழில் மயமாக்கும் பொழுது, அங்குள்ள சாமானிய மக்களை வளர்ச்சிக்கு வெளியே நிறுத்தி விடாமல், வளர்ச்சியில் அவர்களுக்குப் பங்கு கிடைக்கக்கூடியதாகத் திட்டமிட வேண்டும் என்ற அண்ணாவின் பார்வையைத் தான், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின், பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2007-2012), "ஒருங்கிணைந்த வளர்ச்சி" என்று அன்றைய திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார். இந்தியாவைப் பொருத்தவரை, மாநில ஒற்றுமையைத் துணைத் தேசியவாதம் என்று குறிப்பிடும் அமெரிக்க பிரௌன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிஞர் பிரேர்ணா சிங், "இன்றைக்கு இந்தியாவில் துணைத் தேசிய வாதத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்வது தமிழ்நாடு தான்" என்று கூறி, அதற்குக் காரணம் மாநில உணர்வுடன் சமூக நலத்திட்டங்கள் பிணைக்கப்பட்டு உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். அதற்கான மிகச்சிறந்த குறியீடாகப், பஞ்சம் நிலவிய காலத்தில் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்குப் படி அரிசித் திட்டத்தை அவர் குறிப்பிடுகிறார். இந்த உணர்வுடன் கூடிய சமூக நலக் கொள்கைகளை ஓர் அரசு முன்னெடுக்கும் போது, அது வளர்ச்சியை நோக்கி வேகமாக மக்களைச் செலுத்துகிறது. இந்திய வரலாற்றில் அதற்கான புதிய விசைதான் அண்ணாவின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் என்பதும் அவர் கருத்து.
அண்ணாவின் மொழிக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் அவருக்குப் பிறகும் திராவிட இயக்க ஆட்சிகளால் பின் பற்றப் பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று மாதிரிகளைக் கொண்டது. அவை குஜராத் மாதிரி, கேரளா மாதிரி, தமிழ்நாடு மாதிரி ஆகிய மூன்று மாதிரிகள்தான். இவற்றில் 'தமிழ்நாடு மாதிரி'தான் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று காங்கிரஸ் அறிவுஜீவிகளில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் இப்பொழுது கூறுகிறார். 'தமிழ்நாடு மாதிரி' என்பது அண்ணாவுக்குப் பின்னும் வந்த திராவிட இயக்கங்கள், அந்தப் பின்னணியில் செயல்பட்டதால் உருவான முன்னேற்றம். அம்மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக விளங்கும் மூன்று பிரதான அரசியல் கட்சிகளின் பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கான மாற்றுப் பொருளாதாரம் என்பது அண்ணாவினுடையது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் தான் அதிகம். அதுபோலவே பன்னாட்டு விமான நிலையங்களும் அதிகம். பள்ளி, கல்லூரிகளும் தமிழ்நாட்டில்தான் அதிகம். மேலும் உயர்கல்வி பயில்வோர் தமிழ்நாட்டில் 49 விழுக்காடு உள்ளனர். இது இந்தியாவில் மிக அதிகமான ஒரு நிலை. இந்தியா 2030 ஆம் ஆண்டில் அடைவதற்கான இலக்குதான் இது. ஆனால், அதை 2020 லேயே தமிழ்நாடு எட்டியிருக்கிறது. மேலும் மருத்துவத் துறையிலும் தமிழ்நாடு தான் முதலில் இருக்கிறது. குழந்தை இறப்பு விகிதம்தான் மருத்துவத்தில் முன்னேறிய ஒரு அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது இந்திய அளவில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 34 ஆக இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டில் 1000க்கு 17 ஆகக் குழந்தை இறப்பு விகிதம் இருக்கிறது. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நூறு விழுக்காடு மருத்துவத்தில் முன்னேறிய நிலையைக் குறிக்கிறது. தனிநபர் பொருளாதாரத்தைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் தனிநபர் வருமான வேறுபாடு குறைவு. கல்வி, தொழில் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்குக் காரணம். அதனால்தான் இங்குக் கூலி வேலை செய்ய ஆள் இல்லாத நிலையும், கூலி வேலை செய்வதற்காக வடநாட்டில் இருந்து தொழிலாளர்கள் தமிழ்நாடு நோக்கி வரும் நிலையும் ஏற்படுகின்றன. "தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரத் துறை வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்றால், முன்னேறிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும்; ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது" என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் கருத்து, இன்று இந்தியத் தேசிய இனங்களுக்கு அண்ணா வழிகாட்டியாக இருக்கிறார் என்பதையே உறுதிப் படுத்துகிறது. அண்ணாவின் இந்தப் பொருளாதாரக் திட்டமிடல் கொள்கையின் பின்னணியில் அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கை இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அண்ணாவின் உலகப் பார்வை மகத்தானது. அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்திலிருந்து உலகளாவிய கனவைக் கண்டவர் அவர். தனது கனவுக்கான உயிரைத் தனது மொழியின் தொன்மையிலிருந்து அவர் பற்றினார். பல்லாயிரம் ஆண்டுத் தமிழ்த் தொல்மரபை நவீன உலக அரசியலோடுத் தன் கற்பனையின் வழி அண்ணா பொருத்தினார். உலகத்தோடு தமிழ்நாடும், இந்தியாவும் உரையாட வேண்டும் என்றால் அதற்கான மொழியாக ஆங்கிலம் தேவை என்று வலியுறுத்தினார். மேற்கு உலகில் இருந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வெளித்திறன் பயன்பாடு (Outsourcing) புரட்சிக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியவர் அண்ணா. அதனால்தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறும் போட்டியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
உலகத்தின் தலைசிறந்த சமூக சிந்தனையாளர்கள், அரசியல் அவதானிகள் ஆகியோரின் கருத்துக்களை எளிமையான முறையில் தமிழுக்குக் கொண்டு வந்தார் அண்ணா. ஆபிரகாம் லிங்கன், கரிபால்டி, மாஜினி ஆகியோரின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டார். லெனின், ஹோசிமின் போன்ற தலைவர்கள் மீது மரியாதை கொண்டிருந்தார். சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ உடன் அவர் கொண்டிருந்த தோழமைதான், சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு இன்றளவும் சமத்துவ அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
அண்ணா எல்லோரையும் அரவணைத்தார். அனைவரையும் மதித்தார். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் அவர் தனது தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டார். எவரைப் பற்றிக் குறிப்பிடும் போதும், அவர்களுடைய பண்பு நலன்கள் குறித்து உயர்த்தியே பேசும் வழக்கம் உடையவர் அண்ணா. அதனால்தான் மாற்றுக் கருத்துள்ளவர்கள் ஆனாலும்கூட மூதறிஞர் ராஜாஜி என்று குறிப்பிட்டார். காமராசரைப் பெருந்தலைவர் காமராசர் என்று பாராட்டினார். பசும்பொன் தேவர் திருமகன் என்றார். வ.ரா.வை அக்ரகாரத்து அதிசய மனிதர் என்றார். ஒத்த கருத்து உள்ளோரையும் அவர் குறிப்பிடும் பொழுது அவருக்கே உரித்தான அடுக்கு நடை அடைமொழியில் குறிப்பிட்டார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சிலம்புச் செல்வர் ம. பொ. சி. என்றார். கண்ணியமிக்க காயிதே மில்லத் என்றார். மக்கள் கவிஞர் என்று மகாகவி பாரதியை வாழ்த்தினார். தோழர் இராமமூர்த்தி என்றார். முத்தமிழ்க் காவலர் என்று கி.ஆ.பெ. விசுவநாதத்தைப் போற்றினார். தான் தலைவர்களாக மதித்தவர்களைத் தந்தை பெரியார் என்று போற்றினார். அண்ணல் அம்பேத்கர் என்று அழைத்தார். இப்படி அவர் கொடுத்த அடைமொழிகள் அனைவருக்கும் மிகப் பொருத்தமானதாகவும், அவை அவர்களுடைய அடைமொழிச் சொல்லாகவும் இன்றளவும் இருந்து வருகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் உயிர்ப்பு என்ற ஒன்றை ஒற்றைச் சொல்லில் சொல்வதானால், அது புத்தரின் தம்மம் என்றே சொல்லமுடியும். அதைத் தமிழில் அறம் என்று திருவள்ளுவர் மொழிகிறார். ஒரு காலத்தில் பௌத்தத்தை அழித்த வைதீகர்கள் கூட இதைச் சொல்லத் தயங்குவதில்லை. என்னதான் சமணத்திலிருந்து கிளைத்ததாக 'அறம்' இருந்தாலும், கௌதம புத்தரால் வடிவமைக்கப்பட்ட நாணயமாக, அது எளிய மக்கள் எல்லோரிடமும் சேர்ந்தது. இதை இந்தியாவிலேயே முழுமையாக உணர்ந்தவரில் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு அறிவாளியும் இல்லை; அரசியல்வாதியும் இல்லை. அவருக்கடுத்துத் தனிமனித வழியிலும், இயக்கக் கோட்பாட்டிலும், அரசியல் முறைகளிலும், கலைப் படைப்புகளிலும் புத்தரையும் அவரது அறத்தையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமே. அயோத்திதாசர் 'தமிழ் பௌத்தம்' என்ற புதிய பாதையை வகுத்தார். அயோத்திதாசர் காலத்திற்குப் பிறகு அவர் தோற்றுவித்த பௌத்த சங்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக இயங்கிய காலமும் இருந்தது. புத்தர் விழாக்களில் கலந்து கொண்ட பெரியார், அண்ணல் அம்பேத்கருடன் பர்மாவில் நடைபெற்ற உலகப் பௌத்த சங்க மாநாட்டில் கலந்துகொண்டார். பம்பாய், டெல்லி, லாகூர் வரை சென்ற பெரியாரும், அண்ணாவும் காசி வரை சென்று வாரணாசி, புத்த கயாவுக்கும் சென்று வந்தனர். அங்கு புத்தர் சிலையைப் பார்த்து, "பார்ப்பனியத்தை விரட்டிய உங்கள் புரட்சியை வைதீகம் நாடு கடத்தி விட்டதே" என்ற மௌனமாக வினவுகிறார் அண்ணா. அதற்குப் புத்தரின் மௌனமான புன்னகையே பதிலானது. "வைதிகத்தின் வைரிகள்" காலந்தோறும் தோன்றுவார்கள் என்பதாகப் புத்தரின் புன்னகைக்குப் பொருள் கொள்கிறார் அண்ணா. அந்தப் பொருளின் வடிவம் தான் பெரியாரும், அம்பேத்கரும். அந்த அறம்தான் அண்ணாவை வழிநடத்தியது. அவரது அரசியல் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அந்த அறமே காரணம். அதனால்தான் அண்ணல் அம்பேத்கார் 1956 இல் புத்த மதம் தழுவிய போது அவரை வரவேற்றுப் பாராட்டுகிறார்; வாழ்த்துகிறார்; வணங்குகிறார் அண்ணா. அதைத் திராவிட நாடு இதழில் (21.10.1956) இப்படி எழுதுகிறார் அண்ணா.
"டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர். அவர் கற்காத இந்து மதத் தொடர்புடைய வடமொழி, வேத ஆகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்குச் சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர். அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு மூன்று லட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி விட்ட சம்பவம் போல் கருதக்கூடியது அல்ல. டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றச் சம்பவம் உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறி விடாது. சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது. உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் 3 லட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான் உலக மக்கள் முடிவு கட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்டச் சமரசப் பூச்சும், இந்தியத் தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவைகளாகும். தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு, தாழ்வு போன்ற மிகமிகக் கொடிய தொற்று நோய்க்கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப் பட்ட அரண்மனையாக இருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் அங்கு வாழ ஒப்ப மாட்டார்கள். வெளியேறித்தான் தீருவர். டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுகளுக்கும் உரியதாகும்."
முனைவர் சிவ. இளங்கோ புதுச்சேரி.
துணை நூல்கள்:
வடநாட்டுப் பெரியார் தென்னாட்டு அம்பேத்கர், தலித் தகவல் ஒருங்கிணைப்பு, 2000.
அண்ணா நூற்றாண்டு மலர் 2009, தினமணி, சென்னை.
வடநாட்டில் பெரியார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 2012.
மாபெரும் தமிழ்க் கனவு, இந்து தமிழ் திசை, 2019.
கருத்துகள்