"புதுச்சேரி வளர்த்த தமிழ்"

 

-முனைவர் சிவ இளங்கோ

 

 

முதல், இடை, கடை என்று முச்சங்கம் கண்டு வளர்ந்தது தமிழ். "வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து" எழுத்து, சொல், பொருள் இலக்கண வழி அகத்திணை மரபுகளையும், புறத்திணை மரபுகளையும் வாழ்வியலாகக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்திணைகளில் பொருந்தி வாழ்ந்த இயற்கை வாழ்வினைக் கொண்டிருந்தவர்கள். அந் நிலப்பரப்பில் மருதம், நெய்தல் ஆகிய திணைகளைக் கொண்ட பகுதியாகப் புதுச்சேரி, சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தமிழோடு இணைந்தும், பிணைந்தும் உள்ள வாழ்வியலைக் கொண்டது

 

வரலாறு

 

சங்ககாலத்தில் நல்லியக்கோடன் என்னும் மன்னன் ஆண்ட ஒய்மா நாட்டின் பகுதியாகப் புதுச்சேரி இருந்தது. இக்காலத்திற்குப் பிறகு தொண்டை மண்டிலமாக அறியப்பட்ட புதுச்சேரி தொடர்ந்து பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், பீஜப்பூர் சுல்தான் ஆகிய மன்னராட்சிகளுக்கு உட்பட்டுப் பின்னர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர் வசம் வந்தது. ஐரோப்பியர் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வசம் புதுச்சேரிப் பகுதிகள் சற்றேறக்குறைய 280 ஆண்டுகள் (1674-1954) இருந்து வந்தது. 1954 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் பிரெஞ்சியர் வெளியேற, 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினாறாம் நாள் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைந்தது.

 

தொல்லியல்

 

புதுச்சேரி, ஊசுடு ஏரிப் பகுதியில் கற்காலக் கோடரிகள் கிடைத்ததன் மூலம், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இங்கு மனித இனம் வாழ்ந்திருந்த செய்தி கிடைக்கிறது. புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அருகன்மேடு என்னும் அரிக்கமேடு பகுதியில் முதன் முதலில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்திய அரசின் தொல்லியல் துறை இயக்குனர் மார்ட்டிமர் வீலர், 1945 ஆம் ஆண்டில் அரிக்கமேட்டில் அகழ்வாய்வு செய்தார். அங்கிருந்த கிரேக்க - யவன வணிகர்கள் குடியிருப்பை வைத்துப் புதுச்சேரி, இந்தோ - ரோமானிய வணிகத் தளம் இருந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. அவ்விடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம், யவனர் குடியிருப்பு, அம்போரா என்னும் குவளைகள், அரட்டைன், ரௌலட் ஓடுகள், வண்ண மணிகள், வளையல், அணிமணிகள், கலைப் பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டுப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட செய்திகள் தெரிய வந்தன. அங்குக் கண்டெடுக்கப்பட்ட சரக்குக்கிடங்கு, சாயப்பட்டறை, சூளைகள், உறைக் கிணறுகள், வடிகால் அமைப்புகள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரிகம் அமைந்திருந்ததை உறுதி செய்தன. அரிக்கமேட்டில் கிடைத்த பானை ஓடுகள் தமிழி எழுத்துப் பொறிப்பைக் கொண்டிருந்தன. இவ் எழுத்துக்கள் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்று மார்ட்டிமர் வீலரின் அறிக்கையிலேயே கூறப்பட்டிருந்தது. அசோகன் பிராமிக்கு முன்பாகவே தமிழி எழுத்துக்கள் இருந்ததை, 1945 ஆம் ஆண்டில், அதாவது கீழடி அகழ்வாராய்ச்சிகளுக்கு முன்பாகவே தமிழி எழுத்துக்களின் முற்பட்ட காலத்தை அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி நிரூபித்தது

 

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர்" என மணிமேகலைக் காப்பியம் தமிழர்களின் உடல் அடக்க முறைகளைக் கூறுகிறது. அது போன்ற குழிகளும், முதுமக்கள் தாழிகளும் புதுச்சேரிப் பகுதிகளான அரிக்கமேடு, முத்திரப்பாளையம், பாகூர், பிள்ளையார் குப்பம், மங்கலம், சுத்துக்கேணி, பெரம்பை, ஆரோவில், காரைக்கால் மாதூர் ஆகிய பகுதிகளில் கிடைத்தன. இத்தாழிகளில் இருந்த கரித் துண்டுகளைக் கார்பன் ஆய்வு செய்த பிறகு, இவை கி.மு. 785 ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாக அறிவிக்கப்பட்டன.

 

புதுச்சேரி, துறைமுக நகரமாக இருந்ததால் கிரேக்கம், ரோமம், சீனம், சிரியா, பாலஸ்தீனம், பிற தென்கிழக்காசிய நாடுகளோடு வணிகத்தொடர்பு ஏற்பட்டிருந்தது. அதனால் புதுச்சேரியில் பன்னாட்டு மொழிகள் பேசப்பட்டதுடன், வணிகம் வழிப் பிற நாடுகளில் தமிழ் மொழியும், தமிழர்களும் பரவ ஏதுவானது. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை கடற் பயணங்கள் மேற்கொண்ட யவனர்களான பெரிப்புளூஸ், தாலமி, ஸ்டிராபோ போன்றோரின் பயணக் குறிப்புகள் காவிரிப்பூம்பட்டினம், இடைக்கழி நாடு (மரக்காணம்), புதுச்சேரியின் வணிகத் தொடர்புகளையும், இங்கு வாழ்ந்த மக்கள், மொழி குறித்த விவரங்களையும் தருகின்றன. சோழ மண்டலக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களில் புதுச்சேரியைச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரிக்கமேடு அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுக் குறிப்புகளைத் தருகிறது. மரக்கலங்கள் உற்பத்தி, மணிகள் செய்தல், சிற்பம், ஓவியம் உருவாக்குதல், உறைகிணறுகள், குளங்கள் போன்றவற்றில் புதுச்சேரிக்கும், பூம்புகாருக்கும் பல ஒற்றுமைகள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டினப்பாலையில் 'அடல்வாள் யவனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ள படிப் புதுச்சேரியிலும் யவனர்கள் தங்கள் குடியிருப்பைப் பாதுகாத்து வந்தனர். இவையெல்லாம் சங்க இலக்கியக் காட்சிகளைக் கண் முன் நிகழ்த்தும் காட்சிப் படிமங்களாகக் காணப்படுகின்றன

 

புதுச்சேரி, காரைக்கால் கோவில்களில் கல்வெட்டுகள் நிறையக் கிடைத்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்பாக, மதகடிப்பட்டு சிவன் கோயில், முதலாம் இராசராசனால் கட்டப்பட்ட கோவிலாகும். "உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித் தருளின திருக்கற்றளி" எனக் கோயில் கல்வெட்டு கூறுகிறது. இக் கோயிலில் 83 தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்று வடமொழியில் உள்ளன. இக்கல்வெட்டுகள் சோழர்கால எழுத்தமைதி கொண்டவை. பாகூர், சிவன் கோயில் பராந்தகச் சோழன் காலத்தைச் சேர்ந்தது. வில்லியனூர் திருக்காமீசுவரம் உடையார் கோயில், பாகூர் கோயில்களிலும் இராசராசன் எடுப்பித்த கல்வெட்டுகள் உள்ளன. திருநள்ளாறு சிவன் கோயிலில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் எடுப்பித்த கல்வெட்டுகள் உள்ளன. பாகூரில் பல்லவ வேந்தன் நிருபதுங்கன் ஏற்படுத்திய பாகூர் செப்புப் பட்டயங்கள் கிடைத்தன. இவை பாகூர்ச் செப்பேடுகள் என வழங்கப்படுகின்றன புதுச்சேரியில் ஓலைச்சுவடிகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. எதுவார் அரியேல் என்னும் பிரெஞ்சு வரலாற்று அறிஞர் ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கத் தொடங்கினார். அவற்றில் பெருமளவு தற்போது பாரிஸ் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் உள்ளன. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்திலும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

பிரெஞ்சியர் காலத்தில் தமிழ் மொழி

 

பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் பிரெஞ்சு மொழியோடு தமிழ் மொழிக்கும் சரிநிகர் மதிப்பு அளிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் வீடு, நிலப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவை முதலில் தமிழில் தான் இருந்தன. பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் அவை பிரெஞ்சிலும், தமிழ் மொழியிலுமாக எழுதப்பட்டன. புதுச்சேரி, காரைக்காலில் தெருப் பெயர்கள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலுமாக அமைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற அறிக்கைகள் பிரெஞ்சிலும், தமிழிலும் வெளியிடப்பட்டன. 'ழுர்னால் லொஃபீசியல்' எனப்படும் அரசிதழ்கள் பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. பணத் தாள்களில் தமிழ் மொழி இடம் பெற்று இருந்தது. பிரெஞ்சு நிர்வாகத்தின் காவல்துறை இலட்சணையில் "சட்டமொன்றே சர்வாதிகாரமானது" என்று பிரெஞ்சிலும், தமிழிலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலக்கியம், வரலாறு, தொல்லியல் தொடர்பான ஏராளமான நூல்கள் தமிழில் இருந்து பிரெஞ்சு மொழியிலும், பிரஞ்சு மொழியின் இலக்கியம், வரலாறு நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முஸ்ஸே, துய்ப்புய் ஆகிய இரண்டு பிரெஞ்சு அறிஞர்களும், 'தமிழ் - பிரெஞ்சு அகராதி', 'பிரெஞ்சு - தமிழ் அகராதி' ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டனர்.. 

 

ழுய்லியேன் வேன்சான் என்பவர் தமிழ் இலக்கண நூலை இயற்றி வெளியிட்டார். ஃபோன்த்தேனியே என்பவர் திருக்குறள் காமத்துப்பாலைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பெ. அதாம் என்பவர் 'கொன்றை வேந்தன்', 'ஆத்திசூடி', 'நல்வழி', 'மூதுரை', 'வள்ளுவர் வரலாறு' ஆகிய தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஏராளமான பிரஞ்சு மொழிக் கல்வியாளர்கள் தமிழ் மொழியின் உயர்வினை அறிந்து, தமிழ் கற்று, தமிழுக்குத் தொண்டாற்றி உள்ளனர். அப் பட்டியல் மிக நீளமானது. அவர்களுள் மாபெரும் சாதனையாளராகக் குறிப்பிடப்படுபவர் ழுவோ துய்ப்ராய் (1885 - 1945).

 

இந்தியா முழுமையும் ஆரிய நாகரிகமாக அறியப்பட்ட ஐரோப்பியர் பார்வையை மாற்றித் தென்னிந்தியாவின் திராவிட மொழிகள் சார்ந்த வரலாறைத் தெளிவு படுத்திய அறிஞர் கால்டுவெல்லைப் போல பிரஞ்சு அறிஞர் ழுவோ துய்ப்ராய் தென்னிந்தியக் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், கோயில் அமைப்புகளும் வெளிப்படுத்தும் திராவிட பாணி ஒத்திசைவுக் கொள்கையை ஆய்வுவழி நிறுவியவர். தென்னிந்தியர்களுக்குப் பெருமையுடன் திரும்பிப் பார்க்கும் வரலாறு இல்லை என்று கூறிய அந்நாளைய வரலாற்று ஆசிரியர்களுக்குத் திராவிடர் வரலாறு குறித்துத் துல்லியமான பார்வையைக் கொடுத்தவர். அரிக்கமேட்டின் தொல்லியல் தடயங்கள், நகர நாகரிகம் குறித்துப் பிரஞ்சிந்திய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி அரிக்கமேடு அகழ்வாய்வுக்கு வழிவகுத்தவர். அசோக மன்னன் காலத்திலிருந்து இரண்டாம் புலிகேசி காலம் வரையிலான (கி.மு. 261 முதல் கி.பி. 610 வரை) வரலாறைத் 'தெக்கணத்தின் முற்கால வரலாறு' என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல் இந்திய வரலாறில் திராவிடத்தின் தொன்மையைத் தெளிவுபடுத்தியது. 'பல்லவர்களின் முற்கால வரலாறு' என்ற நூல் வழி தென்னிந்திய வரலாறில் பல்லவர்களின் இருப்பை முதன்முதலாக வெளிப்படுத்தியவர்.

 

இயற்றமிழ்

 

புதுச்சேரியின் தமிழ் வளர்ச்சியை 1)சங்க காலம் 2)நாட்குறிப்புக் காலம் 3)அச்சு நூல்கள் காலம் என்று வகைப்படுத்தலாம். புதுச்சேரியை உள்ளடக்கிய ஒய்மா நாட்டில் (இடைக்கழி நாடு) வாழ்ந்த நல்லூர் நத்தத்தனார், பத்துப்பாட்டு வரிசையில் 'சிறுபாணாற்றுப்படை' நூலை இயற்றிய சங்க இலக்கியப் புலவர். அதேபோலப் புதுச்சேரியும் சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுக்குப் பங்களிப்புச் செய்திருக்கிறது. புதுச்சேரியின் நெய்தல் நிலப்பகுதியான வீரைவெளியைச் சேர்ந்த வீரைவெளியன் என்னும் சங்க இலக்கியப் புலவர், "முன்றின் முஞ்சையொடு" என்று தொடங்கும் புறநானூறின் 320 ஆவது பாடலை இயற்றியிருக்கிறார். அவரது மகனான வீரைவெளியன் தித்தனார், "பெருங்கடல் முகந்த" என்று தொடங்கும் அகநானூறின் 188 ஆவது பாடலைப் பாடியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் அம்மையார் சங்கம் மருவிய காலத்தில் தமிழ்ப் பதிகங்கள் பல பாடியுள்ளார். அவை பன்னிரு திருமுறைகள் வரிசையில் வைத்துப் போற்றப்படுகின்றன.

 

பிரெஞ்சிந்திய ஆளுநர்களுக்குத் துபாஷியாக (துவி பாஷி - இருமொழியாளர்) இருந்தவர்கள் பலரும் நாட்குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை அவர்கள். அவரது நாட்குறிப்புகள் ஒரு புதிய இலக்கிய வகைமையாகத் தற்காலத்தில் கருதப்படுகிறது. அவரைப் போலவே திருவேங்கடம் பிள்ளை, ரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை, முத்து விஜய திருவேங்கடம், குருவப்பப் பிள்ளை, இரண்டாம் வீரா நாயகர் ஆகியோரும் நாட்குறிப்புகளை அன்றைய உரைநடைத் தமிழில் எழுதி உள்ளமை தமிழுக்குக் கிடைத்த நற்பேறாகும்.

 

தென்னிந்தியாவில் முதல் அச்சுக்கூடம் அமைந்த இடம் புதுச்சேரியா என்பது ஆயவுக்குரியது. பிரெஞ்சு மெஷினரியினர், புதுச்சேரி, மாதாக்கோயில் தெருவில் 'மிஷன் பிரஸ்' என்னும் அச்சுக் கூடத்தை நிறுவினர். இங்குதான் தமிழின் முதல் புத்தகங்கள் சில அச்சேறின. வீரமாமுனிவரின் தேம்பாவணி, பரமார்த்த குரு கதைகள் இங்கு தான் அச்சியற்றப்பட்டன. திருக்குறள், அகராதிகள் போன்றவையும் இங்கு அச்சியற்றப்பட்டுள்ளன. 1907 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சர்வ வியாபி' என்னும் தமிழ் வார இதழ் இன்றும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. முத்துசாமிப் பிள்ளை, நைனியப்ப முதலியார், தாண்டவராய முதலியார் போன்றோர் தனிப்பட்ட முறையில் தமிழ் அச்சுக் கூடங்களை நிறுவிப் பல்வேறு தமிழ் நூல்களை அச்சிட்டனர். இவர்கள் பதிப்பகங்களும் நிறுவித் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

 

புலவர்கள் பு. . பெரியசாமிப் பிள்ளை, சி. பங்காரு பத்தர், திருப்புளிசாமி அய்யா போன்றோர் புதுச்சேரியில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் இலக்கணப் புலவர்கள். இவர்களிடம் தமிழ் கற்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். புலவர் வெங்கடாசல நாயகர் 'சுகாபிவிருத்தினி' என்ற தமிழ் வாரப் பத்திரிகையை மிகப் பெரும் எதிர்ப்புகளிடையே வெளியிட்டு வந்தார். புலவர் சவராயலு நாயகர் பல நூல்களை இயற்றியுள்ளார். பண்டித வீ. துரைசாமி, இரா. தேசிகம்பிள்ளை, ஞான தியாகு, சிவ. கண்ணப்பா போன்ற புதுச்சேரிப் புலவர்களும் தமிழுக்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள். புலவர் சுந்தர சண்முகனார், தமிழ் கலைக்களஞ்சியம் என்னும் பெரும் நூலைத் தொகுத்தவர். மகாகவி பாரதியார் புதுச்சேரியில் பத்தாண்டுகள் வாழ்ந்த காலத்தில் தான் அவரது குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற குறுங்காவியங்கள் இயற்றப்பட்டன. கவிஞர்கள் பாரதிதாசன், புதுவைச் சிவம், தமிழ் ஒளி, வாணிதாசன், திருமுருகன், தங்கப்பா, பிரபஞ்சன் உள்ளிட்ட பெருமளவிலான தமிழறிஞர்களின் எண்ணற்ற படைப்புகளும் தமிழ்த்தாயின் மகுடத்திற்கு ஒளியூட்டுகின்றன

 

இசைத்தமிழ்

 

தமிழிசையின் நீள, அகல, ஆழங்களைச் சரிவர வரையறுத்துக் காட்டிய சேர நாட்டுத் தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம். களப்பிரர் காலத்திற்குப் பின் ஊடுருவிய பல்லவர் காலத்தில் ஆரிய மரபுள்ள வேற்று மொழிகள் தமிழ் மண்ணில் திணிக்கப்பட்டன. பக்தி இலக்கியக் காலத்தில் தமிழுக்கு உயர்வளித்த காவியங்கள் இயற்றப்பட்டதுடன், அவை தமிழிசையை மீட்டெடுத்தன. தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப் பண்ணமைந்த இலக்கியங்கள் இன்னிசையோடு பாடப்பட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் காலத்திற்கு முன்பே புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார் "திருவாலங்காட்டுத் திருப்பதிகம்" என்ற பதிகத்தைத் தமிழ்ப் பண்ணான நட்டபாடைப் பண்ணில் பாடினார். பொதுவாக இசையரங்குகளில் தொடக்கப் பாடல் நட்டபாடை என்னும் தமிழ்ப் பண்ணில் தான் அமையும். இது தற்காலத்தில் நைவளம், கம்பீர நாட்டை என்று வேற்று மொழிகளில் கூறப்படுகிறது. ஆனால் இசைமுறைக்குத் தமிழ்ப் பண்ணமைந்த பதிகம் பாடியவர் காரைக்காலம்மையார். இதைப் பின்பற்றியே சம்பந்தரும் 'தோடுடைய செவியன்' என்னும் பதிகத்தைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

பிரெஞ்சியர் காலத்தில் ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகையில் நடந்த இசை நிகழ்வொன்றில் ஆளுநர் டியூப்ளே கலந்துகொண்டு அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தைக் கண்டு இரசித்தார். அதில் கீர்த்தனைகள் தெலுங்கில் பாடப்பட்டதால், "ஏன் தமிழில் பாடுவதில்லை?" என்று கேள்வியை ஆளுநர் டியூப்ளே எழுப்பி இருக்கிறார். பாரதியார் வாழ்ந்த காலத்தில் இசை நிகழ்ச்சிகளில் தெலுங்குக் கீர்த்தனைகள் அதிகமாகப் பாடப் பட்டதால் "தமிழனுக்குத் தோள் காது இல்லை, இரும்புக் காதுதான் உள்ளது" என்று பாரதியார் கட்டுரையில் சாடி இருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் 1935 ஆம் ஆண்டு நடத்திய 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' கவிதை இதழில் தியாகராஜ கீர்த்தனைகளைத் தமிழ்ப் படுத்தி, தமிழ்ப் பண்ணோடு அமைந்த வகையில் வெளியிட்டார். "இலங்கு தமிழ் மொழியினில் பாடல் இல்லை என உரைத்தால் அறையுங்கள்" என்றும் கவிதையில் உசுப்பேற்றியவர் பாரதிதாசன். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று தெலுங்குக் கீர்த்தனைகள் கொண்ட பாடல்களைத் தமிழில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்னும் உருப்படிகளாக ஆக்கி, ஏராளமான தமிழிசைப் பாடல்களைக் கவிஞர் புதுவைச் சிவம் இயற்றினார். அவை தமிழிசைப் பாடல்கள், தமிழர் தன்மதிப்புப் பாடல்கள், திராவிடப் பண் ஆகிய தொகுப்பு நூல்களாக வெளிவந்தன. கவிஞர் தமிழ் ஒளி, கவிஞர் வாணிதாசன் ஆகியோரும் இசைத்தமிழ் பாடல்களைப் பெருமளவில் இயற்றியுள்ளனர். முனைவர் இரா. திருமுருகன் சிந்துப் பாடல்களுக்கான இலக்கணங்களை முதன்முதலாக வகுத்து ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்குப் புதுச்சேரிக் கவிஞர்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்துள்ளனர்

 

புதுச்சேரியில் நாடக வளர்ச்சி

 

பனிரண்டாம் நூற்றாண்டில் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த வீரைத் தலைவன் பரசமய கோளரி மாமுனி என்ற புலவர் 'பூம்புலியூர் நாடகம்' என்னும் நூலை இயற்றியதாக புதுவை அரசிதழ் தெரிவிக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கிப் பிரெஞ்சு நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. புதுச்சேரியில் பல்லாண்டு காலம் வாழ்ந்த கவியோகி சுத்தானந்த பாரதியார், பல நாடகப் படைப்புகளையும், மொழி பெயர்ப்புகளையும் செய்துள்ளார். விக்டர் உய்கோவின் நாடகத்தைத் தமிழில் 'ஏழை படும் பாடு' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். மேற்கத்திய நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், மோலியே, ரசீன், கொர்னே ஆகியோரின் நாடகங்களையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். மாபெரும் இலக்கியப் படைப்பாளர்களான எமிலி ஜோலா, ரோமன் ரோலண்ட், கஸ்தாவ் பிலாபேர், மாப்பசான், பால்ஜாக், லாரோஷ் ஃபூக்கோ ஆகியோரது நாடகங்கள் புதுச்சேரி மொழி அறிஞர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அல்போன்ஸ் தொதேவின் காவிய நாடகமொன்றைப் புதுவைச் சிவம் 'காதல் முன் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் குறுங்காவியமாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

 

புதுச்சேரியில் இசை நாடகங்கள் 'வாசகப்பா' என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டுள்ளன. 'மனுநீதிச் சக்கரவர்த்தியின் வாசகப்பா' என்னும் நாடகம் மாணிக்கப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு நூலாகப் புதுச்சேரியில் பதிப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் சில காலம் தங்கி இருந்து நாடகங்களை நடத்தி வந்தார். முழுவதும் பாட்டும், பேச்சுமாக இருந்த கூத்துக் கலை வடிவத்தை உரைநடையும், பாடல்களும் சேர்ந்த நாடகக் கலையாக வடிவமைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவருடைய 'ஞானசௌந்தரி', 'சுலோசனா சதி' உள்ளிட்ட நாடகங்கள் புதுச்சேரியில் இயற்றப்பட்டு மேடையற்றப்பட்டன. சங்கரதாஸ் சுவாமிகள் புதுச்சேரியில் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தி மாணவர்களைப் பயிற்றுவித்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் செய்யுள் நாடகம், உரைநடை நாடகம், உரைநடையும் பாடலும் கலந்த நாடகம் எனப் பல்வேறு வகையான 48 நாடகங்களை உருவாக்கினார். திராவிட இயக்கக் கருத்துகள் அடங்கிய பல சீர்திருத்த நாடகங்களைக் கவிஞர் புதுவைச் சிவம் இயற்றிப் புதுச்சேரி, தமிழ்நாடு, இலங்கை, மலேசியா போன்ற பகுதிகளில் மேடையற்றினார். கவிஞர் தமிழ் ஒளி 'நிலை பெற்ற சிலை' உள்ளிட்ட பல நாடகங்களையும், கவிஞர் வாணிதாசன், 'நிலாமுற்றம்', 'பிறைமதி' போன்ற நாடகங்களையும் இயற்றியுள்ளனர். புதுச்சேரியில் பல்வேறு நாடகக் குழுக்கள் தொடங்கப்பட்டு, ஏராளமான நாடகங்களை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, டி. கே. எஸ். சகோதரர்கள் நாடகக் குழு, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, எம். ஆர். ராதா நாடகக் குழு, சக்தி நாடக சபா போன்ற நாடகக் குழுக்களும் புதுச்சேரிக்கு வந்து நாடகங்கள் நடத்தினார்கள்

 

திராவிட இயக்கக் கருத்துக்கள் அமைந்த ஏராளமான நாடகங்கள் புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வந்தன. நாகை திராவிட நடிகர் கழகம், நாகை ஆர். வி. கோபால் தலைமையில் 1945 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் சில காலம் தங்கி நாடகங்களை நடத்தி வந்தது. இதில், பின்னாளில் முத்தமிழறிஞராகப் போற்றப்பட்ட, திருவாரூர் மு. கருணாநிதி அவர்களும் இணைந்து நாடகங்களில் நடித்தும், நடத்திக் கொண்டும் வந்தார். அவரது 'சாந்தா அல்லது பழனியப்பன்', 'தூக்கு மேடை' போன்ற நாடகங்கள் புதுச்சேரியில் நடைபெற்றன. நாகை திராவிட நடிகர் கழகத்திற்குப் புதுவையில் தேவையான உதவிகளைப் பாரதிதாசனும், புதுவைச்சிவமும் செய்து வந்தனர். புதுச்சேரி டியூப்ளே வீதியில் இருந்த கெப்ளே தியேட்டரில் இந் நாடகங்கள் நடைபெற வழி வகுத்துத் தந்தனர். புதுச்சேரியில் பொதுநல நிதிக்கான நாடகங்களும் நடத்தப்பட்டு அதில் வசூலிக்கப்பட்ட தொகைகள் பாடசாலைக் கட்டிட நிதிக்காகவும், இலவசத் தமிழ் வகுப்புகள் நடத்தவும், மாணவர்களுக்குப் பரிசளிக்கவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகப் பாரதிதாசன் நடத்திய 'புதுவை முரசு' இதழ்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் மொழிக்குப் புதுச்சேரியின் பங்களிப்பு விரிந்த அளவிலானது. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு தொகுப்பாகத் திகழும் அளவிற்குத் தரவுகள் உள்ளன. தமிழ் மொழிக்கு முதன் முதலில் தந்த கொடை என்றாலும் புதுச்சேரியே முதலிடம் பெறும். தமிழ்ப் பண்கள் உருவாக்கம், சிந்துப் பாடல்களுக்கு யாப்பிலக்கணம் உருவாக்கம், முதல் நாடகம், முதல் சிறுகதை, நாட்குறிப்பு என்னும் புதிய இலக்கிய வகைமை, முதலில் கிடைத்த தமிழி எழுத்துப் பானை ஓடுகள், திராவிடக் கட்டிடக்கலை குறித்த முதல் ஆய்வு, பல்லவர் ஆட்சி பற்றிய முதல் ஆய்வு என்று பல பொருண்மைகளில் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருவது புதுச்சேரி என்பது புதுவைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உலகத் தமிழர்களுக்கும் நிறைவையே தரும்.

 

 

உதவிய நூல்கள்:

 

1) தேசிகப்பிள்ளை. ரா, தமிழகமும் பிரெஞ்சுக்காரரும், பாரி நிலையம், சென்னை, 1971. 

 

2) வேலாயுதனார். மு., வையம் புகழ் புதுவை, நற்றமிழ்ப் பதிப்பகம், புதுவை, 1974.

 

3) இளங்கோ. சிவ, பிரஞ்சிந்தியாவும் திராவிட இயக்கமும், ஞாயிறு நூற் பதிப்பகம், புதுச்சேரி, 2000.

 

4) Francis Cyril Antony, editor, Gazetteer of India, department of art and culture, Government of Pondicherry, 1982.

 

-முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"

சமஸ்கிருதம் இந்திய மொழியா?