திருக்குறள் மாநாடு சிகாகோ "திருக்குறளின் சமயம்"
திருக்குறள் மாநாடு சிகாகோ
அறங்கூறும் நூல்களுள் சிறந்ததாக 'முப்பால்' என்று மொழியப்பட்ட குறளை அதன் மதிப்பறிந்தோர் உயர்த்துகின்றனர். அப்பெருமை கருதி அடைமொழி தந்து அதனைத் திருக்குறள் என்றும், அதனை இயற்றிய வள்ளுவரைத் திருவள்ளுவர் என்றும் வழங்கி வருகின்றனர். தமிழ் மொழிக்கு வரி வடிவம் உருவான காலத்திற்குப் பின்னர் வள்ளுவர் வாழ்ந்தவர் என்பதால், குறள் எழுதப்பட்ட ஆவணமாகக் கிடைத்து இருக்கிறது. ஆனால் வள்ளுவரின் வாழ்வும், வாழ்க்கை நிகழ்வுகளும், வரலாறும் தொகுக்கப்பட்ட ஓர் ஆவணமாகக் கிடைக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தனிப்பாடல்களும், திருவள்ளுவ மாலையும் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன. ஆனால் அவற்றில் நிறைய பாட மாறுபாடுகளும் காணப்படுகின்றன. திருவள்ளுவர் அல்லது திருக்குறளின் சமயம் எதுவென்று ஆய்வினை எடுத்துக் கொண்டால் அவருடைய பிறப்பில் இருந்து இறப்பு வரை உள்ள எல்லா நிகழ்வுகளும் சமயம் சார்ந்தே கற்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த நிலையில் ஒரு முழுமையான வரலாற்று ஆய்வுக்காக நாம் வள்ளுவர் எழுதிய திருக்குறளையேப் பெரிதும் சார்ந்து நிற்க வேண்டி உள்ளது. இந்த வகையில் கீழ்க்கண்ட வகைப்பாடுகளில் ஆய்வு மேற்கொள்வது திருக்குறளின் சமயத்தை அறியத் துணை புரியும்.
வள்ளுவர் பிறப்பு
வள்ளுவர் அரச குலமா
வள்ளுவர் காலத்துச் சமயங்கள்
வள்ளுவரின் சமயம்
உரையாசிரியர்களின் சமயம்
திருக்குறளின் சமயம்
வள்ளுவரின் பிறப்பு, இறப்பில் கட்டமைக்கப் படும் சமயம்
ஆகிய பகுப்புகளில் இவ்வாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
வள்ளுவர் பிறப்பு
வள்ளுவரின் பிறப்பாகத் தமிழ்நாட்டின் மூன்று நிலப் பகுதிகள் குறிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் என்னும் திருமயிலை, வடமதுரை, குமரி மாவட்டம் ஆகியவை அவை. திருவள்ளுவர் சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற இடத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து அங்கேயே மறைவெய்தினார் என்பதைக் குறிக்கும் வகையில் தற்போது உள்ள சென்னை, மயிலாப்பூர் பகுதியில் “மயிலைத் திருவள்ளுவர் கோயில்” நிறுவப்பட்டு அது ஒரு கோயிலாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கோயிலின் தர்மகர்த்தர்களால் திருவள்ளுவர் திருநாள் போன்ற விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுகுறித்த செய்திகள் படங்களுடன் சென்னை, திருவள்ளுவர் திருநாட் கழகம் வெளியிட்ட திருவள்ளுவர் நினைவு மலர், 1935 இல் குறிக்கப்பட்டுள்ளன (பக்கம் 128).
திருவள்ளுவ மாலையில் இடம்பெறும் நல்கூர் வேள்வியாரின் வெண்பாவில் மாமதுரை, புனற்கூடல் ஆகிய குறிப்புகளைக் கொண்டு (திருக்குறள் பரிமேலழகருரை 1967 : 515) திருவள்ளுவர் பிறந்த இடம் மதுரை என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. (திருவள்ளுவர் பிறந்தது, வாழ்ந்தது, மறைந்தது அனைத்தும் மதுரை என்ற கருத்தைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி கூறுகிறார். “வள்ளுவர் வரலாறு எது?” என்று அறியப் புலவர்கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில், உ. வே. சா. தலைமையில் கூடிய கூட்டத்தில் இக்கருத்து இறுதி செய்யப்பட்டதாகப் புலவர் கி. ஆ. பெ. விசுவநாதம் தெரிவித்துள்ளார் (தெளிதமிழ், ஆண்டு இல்லை, பக். 7-8).
“மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற்கு அச்சு” என்று முடியும் ஈற்றடியில் புனற்கூடம் என்பது மதுரை எனக் கூறியதை, மதுரை மாநகரில் வைகை ஆறு ஓடுகிறதே தவிர எங்கும் கூடவில்லை என்றும், புனல் கூடல் என்பது பழம்பெரும் ஆறான பழையாறும், முக்கடல் நீரும் ஒன்று கூடும் தென்குமரி என்று கொள்ளுவதே பொருத்தம் என்றும் குமரி மாவட்டத்துக்குக் குரல்கள் ஒலிக்கின்றன (எஸ்.பத்மநாபன் 2005 : 60). அதேநேரம், “திருவள்ளுவ நாயனார் தந்தை கச்சனென்னும் அரயன் வடமதுரையை ஆண்ட அனுபவம் கொண்டு நாளது வரையில் அந்நாட்டைக் கச்சயம் என்றும், கச்சம் என்றும் வழங்கி வருகிறார்கள்” என்று இதே சாற்றுக்கவியை மேற்கோள் காட்டிப் பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் வடமதுரை இன்றைய திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை போகும் பாதையில் ஆரணி ஆற்றுக்கு அருகில் உள்ளது. திருக்குறளை 1831 ஆம் ஆண்டில் பதிப்பித்த விசாகப் பெருமாளையர், “திருவள்ளுவர் தொண்டை நாட்டில் பிறந்தார்; அவர் பிறந்தது கூவ நகரம்” என்றும் கூறுகிறார். அப்பகுதி திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டுக்கு அருகே உள்ள கூவம் என்னும் கிராமம். இக்கிராமத்தின் பெயராலேயே கூவம் ஆறு அழைக்கப்படுகிறது (கௌதம சன்னா 2019 : 80-84).
குமரி மாவட்டத்தின் கரை கண்டேசுவரர் ஆலயம் அருகில் முட்டம் என்ற சிற்றூர் அருகே, வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான திருநாயனார்க்குறிச்சி என்னும் இடம் தான் வள்ளுவர் பிறந்த இடம் என்றும், திருவள்ளுவ நாயனாரைக் குறிக்கும் விதத்தில் திருநாயனார்க் குறிச்சி என்ற பெயர் நிலைத்திருப்பதாகவும் குமரி மாவட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் குமரிப் பகுதிகளை ஆண்டு வந்த ஆய்குல மன்னர் கோக்கருந்தடக்கன் (கி.பி.857 - 885) காலத்துச் செப்பேடுகள் வள்ளுவ நாட்டுடன் தெங்கெழு நாடு, மிடால நாடு, படப்பா நாடு ஆகியவை இருந்ததெனக் குறிப்பிடுகின்றன. மன்னன் விக்கிரமாதித்திய வரகுணன் (கி.பி. 885-925) காலத்துச் செப்பேடுகள் வள்ளுவ நாட்டு மேற்கோடு பகுதிகளைக் குறிப்பிடுகின்றன. இராசராச சோழ மன்னர் (கி.பி. 985 -1014) காலத்தின் பதினெட்டாம ஆண்டில் வள்ளுவ நாட்டு முட்டம் பகுதியைப் போரில் பிடித்த பின்னர் அதற்கு மும்முடிச் சோழநல்லூர் என்று பெயரிட்ட செய்தி பேச்சிப் பாறை அணை, திருநந்திக் குடைவரைக் கோயில் கல்வெட்டில் காணக் கிடைக்கிறது (குமரியின் பழமையும் பெருமையும் 2019:28). மேலும் கருப்புக்கோட்டை, கைலாசநாதர் கோயிலில் உள்ள பனிரெண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டிலும் வள்ளுவ நாட்டைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்றும் வள்ளுவ நாட்டு முட்டம், வள்ளுவ நாட்டு மேற்கோடு ஆகிய பெயர்கள் வழங்கி வருகின்றன (எஸ். பத்மநாபன் 2005:60).
தமிழ்நாடு அரசின் அரசிதழ் குறிப்பில், வள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. “கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போன்று, தமிழர்களுக்கு உயர் அறநூலான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே உள்ள திருநாயனார்க் குறிச்சியில் பிறந்தவர்” என்று தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்ட அரசிதழில் (பக்கம் 830) ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது (குமரியின் பழமையும் பெருமையும், 2019, பக். 27). மேலும் நீரை வெள்ளம் எனல் (குறள் 595), மடித்தற்று (குறள் 1032), தொடிப்புழுதி (குறள் 1037), தூண்டிற்பொன் (குறள் 931), பிணந்தழீஇயற்று (குறள் 931), போன்ற குறள்களில் பயின்று வந்துள்ள குமரி மாவட்டத்தின் பேச்சு வழக்கும், வாழ்வியல் முறைகளும் திருவள்ளுவரைக் குமரி மாவட்டத்தவராகச் சொந்தம் கொண்டாடும் முறையில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (எஸ். பத்மநாபன், ஆய்வுக் களஞ்சியம், மார்ச், 2011, பக்கம் 3-10). இத்தனை வட்டார வழக்குச் சொற்களும், வழக்காறுகளும் திருக்குறளில் இடம் பெற்றிருப்பது ஆய்வுக்குரியதே.
திருவள்ளுவரின் பிறப்பிடமாகக் கூறப்படும் இவ்விடங்களின் பின்னணியில், திருவள்ளுவரின் சமயம் குறித்த செய்திகள் பின்னப்பட்டுள்ளன. சென்னை, மயிலாப்பூர் கோவிலில் உள்ள திருவள்ளுவரின் உருவம் அவரைச் சைவராகவே காட்டும் வகையில் மிக வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அவர் மதுரையில் பிறந்து, வாழ்ந்து, மறைந்தார் என்று திருவள்ளுவ மாலையில் உள்ள சாற்றுக்கவிகள் மூலம் சொல்லப்படும் செய்திகளும் அவரைச் சைவராகச் சித்தரிக்கும் பின்னணியைக் கொண்டுள்ளன. திருவள்ளுவர் வடமதுரையில் பிறந்தவர் என்னும் செய்தியும், அவர் அங்கேயே அறகத்தாக வாழ்ந்து மறைந்தார் என்ற செய்தியின் பின்னணியில் அவரைப் பவுத்தராக நிறுவும் பின்னணி உள்ளது. திருவள்ளுவர் குமரியில் பிறந்தார் என்னும் குறிப்புகளில் நிறைய வரலாற்றுப் பின்னணிகளும், தகவல்களும் இருந்தாலும் மறைமுகமாக அவரைச் சைவராகக் குறிப்பிடும் நிலையும் அவ்வாய்வுகளில் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன.
வள்ளுவர் அரச குலமா
வட மதுரையை அரசாண்ட கச்சன் என்னும் அரசனுக்கு மகன் பிறந்து சகல கலைகளும் கற்றுத் தெளிவுற்று, பின்னர் முப்பால் நூலைத் தனது தந்தையாகிய கச்சன் என்னும் அரசனுக்கு வாசித்துக் காட்டி அவனை மனமகிழச் செய்தார் திருவள்ளுவர் என்று திருவள்ளுவ மாலையில் கீரந்தையார் எழுதிய சாற்றுக் கவியை முன்வைத்து, வள்ளுவர் அரச குலத்தினர் என்று கூறுகிறார் அயோத்திதாசப் பண்டிதர் (கௌதம சன்னா 2019:75-76). வள்ளுவர் அரச பரம்பரையில் பிறந்தவர் என்று கருதலாம் என்று அறிஞர் சாமி. சிதம்பரனாரின் கூற்றும், வள்ளுவர்கள் சங்க காலத்தே குறுநில மன்னர்களாக இருந்தனர் என்று அவ்வை துரைசாமிப் பிள்ளையின் கூற்றும் திருவள்ளுவர் மன்னராக இருந்தார் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன (குமரியின் பழமையும் பெருமையும் 2019 : 28).
திருவள்ளுவர் ஒரு குறுநில மன்னர் என்றும், அவர் வள்ளுவ நாட்டை ஆட்சி செய்தவர் என்றும், இவ் வட்டாரத்தில் அரசனையும் தலைவனையும் நாயனார் என்று அழைக்கும் வழக்கம் உள்ளதையும் குமரி மாவட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வடிப்படையிலேயே வள்ளுவர் பிறந்த ஊர் திருநாயனார்க் குறிச்சி என்று பெயர் பெற்று உள்ளது. குமரி மாவட்டத்தின் கூவைக்காடு மலைப்பகுதியில் உள்ள ஒரு பெரிய கல் திட்டை வள்ளுவன் கல்பொற்றை என்றும், அதன் அருகில் உள்ள சிறிய கல்திட்டை வள்ளுவத்தி பொற்றை என்றும் அழைக்கப் படுவதை கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வள்ளுவ நாட்டை ஆண்டு வந்த திருவள்ளுவர் தனது மனைவியோடு கூவைக்காடு மலைக்கு வந்து தேனும், தினைமாவும் விரும்பி ஏற்றுக் கொண்டதை அங்கு வசிக்கும் காணியினப் பழங்குடி மக்கள் வாய்மொழி வரலாறாக அளிக்கின்றனர். அவர் தங்கி இளைப்பாறிய இடமே வள்ளுவன் கல்பொற்றை என்று அழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வள்ளுவன் கல்பொற்றையின் உச்சியில் வள்ளுவர் பாதம் பொறிக்கப்பட்டு வழிபாட்டுத் தலமாக இன்றும் திகழ்வதாகவும், அவ்வாறு மழை வேண்டிச் செண்டை மேளத்தோடு வள்ளுவன் பொற்றையின் உச்சிக்குச் சென்று, வள்ளுவர் பாதத்தில் கூவை இலையில் அவருக்குப் பிடித்த தேனும், தினைமாவும் படையலிட்டுக் குலவை ஒலிக்கும் வழக்கம் இன்றும் உள்ளதாகவும், அவ்வழக்கம் வள்ளுவன் கொடுதி என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் குமரி மாவட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (குமரியின் பழமையும் பெருமையும் 2019 : 34-35).
சங்க காலத்து நாஞ்சில் நாட்டைப் பொருநன் என்ற நாஞ்சில் வள்ளுவர் ஆண்டு வந்ததாக மருதன் இளநாகனார், அவ்வையார், கரூவூர்க் கதப்பிள்ளை போன்ற சங்ககாலப் புலவர்கள் போற்றிப் பாடியதாகக் குறிப்பிடப்படுகிறது. வள்ளுவர்கள் அரசரின் அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணியினைச் செய்ததாக மணிமேகலையில் வள்ளுவர் பற்றிய குறிப்பு வருகிறது. அரசாங்க நடவடிக்கைகளில் மன்னருக்கு நெருக்கமாக வைத்து “மன்னர்க்கு உட்படு கருமத் தலைவர்” என்று திவாகர நிகண்டு கூறுகிறது (குமரியின் பழமையும் பெருமையும் 2019:29/திருக்குறள் பன்முக வாசிப்பு 2009:65-70). “செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்” என்று பெருங்கதை கூறுகிறது. வள்ளுவர் “யானை மீமிசை நன்பறை அறைந்தனர்” என்று கம்பராமாயணம் குறிப்பிடுகிறது. இவை, சங்க காலத்திற்குப் பிறகு வள்ளுவக் குடியினர் அரசரைச் சார்ந்தொழுகும் பெருங்குடி மக்களாக விளங்கினர் என்றும், சேர நாட்டுத் திருநாவாய்க் கோயில்களில் மகாமகத் திருவிழாவை நடத்தும் பணியினராகவும் குறிப்பிடப்படுகிறது. சோழ நாட்டில் அரசு ஆணைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்தவர்கள் வள்ளுவர்கள் என்ற செய்தி இருக்கிறது. வள்ளுவர்களைத் “தென்னவர் வயமறவன்” என்று கரூவூர்க் கதப்பிள்ளையின் புறநானூற்றுப் பாடல் (380) கூறுகிறது. வள்ளுவர்கள் பாண்டி நாட்டின் படைத்தலைவர்களாகப் பணியாற்றிய செய்தியும் கிடைத்து தமிழ்நாட்டின் சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களோடு வள்ளுவர் வரலாறு இணைக்கப்பட்ட பல செய்திகள் முன்வைக்கப்படுகின்றன. வள்ளுவர்கள் கணியர்களாக அரச குலத்திற்கும், மக்களுக்கும் காலமுணர்த்திய செய்திகள், அவர்கள் முற்காலச் சமயங்களோடு தொடர்புடையவர்கள் என்ற நிலைமையினைத் தெரிவிக்கின்றன (குமரியின் பழமையும் பெருமையும் 2019:30).
திருவள்ளுவர் காலத்துச் சமயங்கள்
வள்ளுவர் காலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் திருக்குறள் வைக்கப்படுவதால், அது சங்கம் மருவிய காலம் அதாவது கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலமாகப் பலர் கருத்துரைத்துள்ளனர் (ஆர். விஸ்வநாத பாரதி, திருக்குறள் ஆராய்ச்சி, திருவள்ளுவர் வரலாறு 1926:43). அதே நேரம் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் திருக்குறள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தனார் தம் மணிமேகலையில் ‘தெய்வம் தொழாஅள்’ என்ற குறளை எடுத்துக்கூறி திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் எனச் சுட்டுகிறார். இவை இளங்கோவடிகள், சாத்தனார் ஆகியோர் காலத்துக்கு முற்பட்டவராகத் திருவள்ளுவரை நிறுத்துகின்றன. ஆலந்தூர் கிழார் பாடிய புறநானூற்றுச் செய்யுளொன்றில் எந்நன்றி கொன்றார்க்கும் என்று குறளின் கருத்தைத் தம் பாட்டுக்கேற்றபடி மாற்றி அமைத்துப் பாடிய திறனைக் கூறி திருவள்ளுவர் கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்டவர் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புறநானூறில் காக்கைபாடினியார் பாடிய “நரம்பெழுந்துலறிய” என்ற செய்யுளில் வரும் “ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே” என்ற சொற்றொடர்க்கும் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்” என்ற வள்ளுவரின் சொற்றொடர்க்கும் பெரிதும் ஒற்றுமை உள்ளதைச் சில ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். காக்கைப் பாடினியார், ஆலந்தூர் கிழார் போன்ற புலவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கக்கூடும். புத்தரின் கோட்பாடுகள் திருக்குறளில் காணப்படுவதால் திருவள்ளுவர், புத்தர் காலத்திற்குப் பிற்பட்டுத் தோன்றி காக்கைபாடினியார் காலத்துக்கு முற்பட்டு வாழ்ந்தவர் என்றும், ஆகவே திருவள்ளுவர் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம் என்றும் திருக்குறள் பரிமேலழகர் உரையில் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய திரு தூ. சு. கந்தசாமி கூறுகிறார் (திருக்குறள் பரிமேலழகர் உரை 1967:7-9).
திருவள்ளுவ நாயனார் வரலாறு என்னும் நூலில் பல அரிய செய்திகளை முன் வைக்கும் பண்டிதர் அயோத்திதாசர், திருவள்ளுவர் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று உறுதிபடக் கூறுகிறார். திருவள்ளுவர் மறைந்த இடமாகத் திருவள்ளூர் மாவட்டம், தின்னனூரைச் சுட்டிக்காட்டும் அவர் அங்கு இருந்த தின்னனூர் வியாரத்தில் தான் திருவள்ளுவர் மறைந்தார் என்று அவருக்குக் கிடைத்த ஓலைச்சுவடிப் பாடலைக் கொண்டு கூறுகிறார் (திருவள்ளுவ நாயனார் வரலாறு 1926:7-9). திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தின்னனூர் வியாரம், அசோக மாமன்னர் காலத்தைச் சேர்ந்தது என்று கூறும் அயோத்திதாசர், அதனால் அசோகரின் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுதான் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் (கௌதம சன்னா 2019:85-90).
திருவள்ளுவர் காலத்துச் சமயங்கள்
சிந்தனைக்கு அளவைகள் உண்டு. இந்த அளவைகள் நம் சமூகமயமாக்கலின் போது அவரவர் சிந்தனையில் ஏற்றப்படுபவை. இவற்றில் பெற்றோரும், ஆசிரியரும் பெரும்பங்கு வகிப்பர்; நண்பர்களும், நூல்களும் அதற்கு மெருகு ஏற்றுபவை. எந்த அளவைகளும் இல்லாத சிந்தனையும் சாத்தியமே. இதற்கு ஓகமும் (யோகம்), தியானமும் தேவைப்படும். ஓகம் யாரும் செய்யலாம். தியானம் செய்ய நினைவுகளற்ற மனம் உருவாக்குதல் தேவை. அதற்குக் கருவியும் உண்டு. அக்கருவி பெரும்பாலும் இறையியல் சார்ந்து வழங்கப்படுவதால், அவ்வழியே சென்று எல்லையை அடைந்தும், அடையாமலும் நின்று போகின்றன. நினைவுகள் அற்ற மனம் என்ற செயலிக்கான கருவி, அதுவே ஒரு நினைவைக் கோடிட்டு அழைத்துச் சென்று விடும். கருவி என்பது நினைவைத் தொடரும் ஓர் உருவகம் அல்லது பொருள் சார்ந்து இல்லாமல் ஒலி, ஒளி என்ற தன்மையில் நாமே ஏற்படுத்திக் கொண்டு, நினைவுகளே அற்ற தியான நிலையில் நுழையும்போது எதுவும் நிகழாத ஒன்று நிகழ்ந்ததாக எண்ணத் தோன்றும். முழு வாழ்க்கையிலும் ஒன்றும் இல்லை என்பதை அது உணர்த்தி விடும். அந்த உணர்வு தான் உண்மை. அதுதான் மெய். அதுவே மெய்யியல். இப்படி உருவான மெய்யியல் தான் இந்திய மெய்யியல் கோட்பாடுகளின் தொடக்கமாக இருக்கிறது. இந்த வழியில் கற்பித்த சமயங்கள்தான் இந்தியாவின் தொடக்க காலச் சமயங்களாக அறியப்படுகின்றன.
திருவள்ளுவரின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், திருவள்ளுவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு (2300) - கி.பி. முதலாம் நூற்றாண்டு (0-100) ஆகிய இடைப்பட்ட 400 ஆண்டுக் காலத்துக்குள் வாழ்ந்தவராகத் தமிழறிஞர்கள் சிலர் கணக்கிட்டுள்ளனர். இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்ததாக மூன்று சமயங்கள் அறியப்படுகின்றன. அவை சைனம் (சமணம்), பௌத்தம், ஆசிவகம் ஆகியவை. இந்தச் சமயங்களின் தோற்றுவாய் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. சைனம் (சமணம்) மிகவும் தொன்மையான சமயமாக இருந்தாலும் அச்சமயத்தின் 24-வது தீர்த்தங்கரமான மகாவீரர் காலத்தில் இருந்து தான் அச்சமயம் ஒரு சங்கமாகவும் அறியப்படுகிறது. அதே சமகாலத்தில் வாழ்ந்த கௌதம புத்தரின் மெய்யியலை முன்வைத்துத் தோற்றுவிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பான பௌத்த சமயமும், மற்கலி கோசாலரின் ஆசீவகம் என்னும் சமயமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் கோட்பாடுகளைக் கொண்டு நாடெங்கும் பரவியதாக வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அசோக மாமன்னர், அப்போரின் விளைவு கண்டு பௌத்தத்தைத் தழுவியதாகவும், பௌத்தத்தை வெளி உலகம் அறியும் பொருட்டுத் தன் சந்ததியினரை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் பௌத்தத்தைப் பரவச் செய்ததாகவும் அசோக மாமன்னரின் கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொல்லியல் துறையும் இவற்றை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேற்கூறிய இந்த மூன்று சமயங்களும் தென்னிந்தியாவில் பரவியதுடன் அரசர்கள் வரை செல்வாக்குப் பெற்று அரசர்கள் கடைப்பிடித்த, பராமரித்த சமயங்களாகவும் இருந்திருக்கின்றன.
திருவள்ளூர் காலமாகக் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் (கி.மு.300 - கி.பி.100) சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களும், அவற்றின் கோட்பாடுகளும் தென்னிந்தியப் பகுதிகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தன. அந்தக் காலங்களில் வைதிகத்தின் தாக்கம் அவ்வளவாக இருக்கவில்லை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடலொன்றில் ‘பார்ப்பன மகனே’ என்று ஒரு குறிப்பு வருகிறது. மேலும் புறநானூறு இரண்டாம் பாடலில் ஒரு போரில் இரு பிரிவினர்களுக்கும் உணவிட்ட ஒரு செய்தியைக் கூறும், “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்று சேர மன்னன் வானவரம்பனைப் போற்றும் (ஐராவதம் மகாதேவன் 2016 : 29 / சிவ இளங்கோ 2021: 53) சொற்றொடரைக் கொண்டு, மகாபாரதப் போரில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் சோறிட்டதாக விளக்கவுரை எழுதி வைத்துள்ளனர். பல்யாகச் சாலை முதுகுடுமிப் பெருவெழுதி என்ற பாண்டிய மன்னன் காலத்தில் யாகம் வளர்த்த செய்திகளும் இடம்பெறுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் வைத்து சங்க இலக்கியங்களில் வேதவழியில் வந்த வைதிகத்தின் உள் நுழைவின் பதிவாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அந்தக் காலகட்டத்தில் சைனர்கள் தான் (சமணர்கள்) இன்றைய பார்ப்பனர்களைப் போல அன்றைக்கு நடைமுறையில் இருந்து வந்தனர். அவர்கள் படிக்க, எழுதத் தெரிந்தவர்களாகவும் பிராகிருத மொழியில் எழுதுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓலைச்சுவடி வைத்திருந்த செய்தியும் கிடைக்கிறது. இவர்களைப் பார்த்துப் பின் வந்த வேதியர்கள் தங்களையும் பார்ப்பனர்களைப் போல மாற்றிக் கொண்டனர் என்பவை தற்கால ஆய்வுகள் (புதிய கோடாங்கி பிப்ரவரி 2021:6-11).
திருக்குறள் உரையாசிரியர்களின் சமயங்கள்
திருவள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகக் கூறப்படுகிறது. திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றின போது வள்ளுவரையும் குறளையும் சிறப்பித்துச் சங்கப் புலவர்கள் பாடியதாக 53 சாற்றுக்கவிகளும், இரண்டு குறள் வெண்பாக்களும் திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளன (திருக்குறள் பரிமேலழகருரை 1967:508-526). திருவள்ளுவர் மாலையில் உள்ள சாற்றுக்கவிகள் சங்கப் புலவர்களின் பாடல்களாக அறியப்படுகின்றன. இந்தச் சாற்றுக்கவிகள் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தே யாரோ எழுதி, சங்கப் புலவர்கள் செய்ததாகத் தோன்றுமாறு அவர்களின் பெயர்களை எழுதி வைத்து விட்டதாகத் திருக்குறளுக்குப் பகுத்தறிவு உரை எழுதிய புலவர் குழந்தை கூறுகிறார். பரிமேலழகர் உரை எழுதிய பின்னர் அவ்வுரைக்கு உறுதுணையாகப் பாடப்பட்டதே திருவள்ளுவமாலை. திருவள்ளுவமாலையில் 21 ஆம் பாடலில் வரும் மாதானுபங்கி என்பது சங்க காலச் சொல்லல்ல. திருக்குறள் தமிழர் நாகரிகம் கூறும் நூலாக இருக்க, ஆரிய வேதமே திருக்குறளின் முதனூல் என்கின்றன, திருவள்ளுவர் மாலையில் இடம் பெறும் உக்கிரப் பெருவழுதியார், வெள்ளிவீதியார், மாங்குடி மருதனார் உள்ளிட்ட சங்கப் புலவர்கள் பெயரில் அமைந்துள்ள சாற்றுக் கவிகள். வடபுலத்து மகாபாரதம், இராமாயணம், மனுதர்மம், வேதங்கள் ஆகியவற்றைத் திருக்குறளுக்கு ஒப்பு நோக்கிக் கூறியுள்ளனர் சில சாற்றுக்கவிகள். தமிழர் ஒழுக்கம் கூறும் திருக்குறளுக்குப் புராணக் கதைகள் ஒப்பாகும் என்பது பொருந்தாப் பொய்க்கூற்றே என்று ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர் (திருக்குறள் பன்முக வாசிப்பு 2009 : 76-79). திருக்குறள், வேதம் மற்றும் உபநிடதங்களின் வழிநூல் என்பதை முற்றாக மறுக்கும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் தமிழ்க் கோட்பாடான எண்ணியத்தின் (சாங்கியம்) கருத்துகளே திருக்குறளில் விரவி உள்ளன என்று கூறுகிறார். திருவள்ளுவரைத் தமிழ் இறைவனார் என்று தன் கவிதையில் வடித்துள்ள பாரதிதாசன், “தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை நஞ்சென்று நாட்டினர் பரிமேலழகர்” என்றும் வேறொரு கவிதையில் வடித்துள்ளார் (பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் 1994:xx).
குறள் எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அதை எழுதிய வள்ளுவரைப் பற்றிய குறிப்புகள், திருவள்ளுவ மாலையாகப் பதினோராம் நூற்றாண்டில் கிடைத்திருக்கின்றன. அது ஆசரீரி தொடங்கி, கடவுளரும், பழம் புலவர்களும் பாடியுள்ளதாகக் கூறப்படுவதால் அதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கிடமாகி உள்ளது. திருவள்ளுவ மாலையில் உள்ள சாற்றுக்கவிகளுக்கு உரை எழுதிய புலவர்கள், ஒரே பாடலுக்குப் பல பொருண்மைகளைக் கூறி உள்ளனர். திருவள்ளுவர் காலத்தில் தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட தமிழி எழுத்துரு, உரையாசிரியர்கள் காலத்தில் வட்டெழுத்தாக மாறிப்போனது. தற்காலத்திய எழுத்துரு வரையில் தமிழ் எழுத்து பல மாறுதல்களைப் பெற்று விட்டது இதனால் எழுத்துருக்களில் பாடபேதங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். மேலும் ஒரே ஓர் எழுத்துருவின் மாறுபாட்டை வைத்து வேறு பொருள் கொள்ளும் நிலை ஏற்படுவதும் இயல்பே. ஒருவர் நிறுவியுள்ளதை வேறொருவர் மறுத்தும், ஒரே சொல்லுக்கு வேறு வேறு பொருள்களும் கொண்டு விளக்குவதால் குழப்பமே மிஞ்சுகிறது. தாங்கள் விரும்பும், தாங்கள் சார்ந்திருக்கும் சமயத்தவராகத் திருவள்ளுவரை எண்பிக்கும் விதமாகவே அவர்களின் விளக்கங்கள் அமைந்திருப்பதைத் திருவள்ளுவ மாலை உரைகளில் இருந்து அறிய முடிகிறது. சுகாத்தியர் என்பவர் திருக்குறளைத் திருத்தியும் உரை எழுதிப் பதிப்பித்தார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்ற குறளின் ஈற்றடியை அறவனடி சேராதார் என்று திருத்திப் பதிப்பித்தார். ‘இறை’ என்ற பதம் ‘அற’ என்று மாறும்பொழுது, பொருள் மட்டுமல்ல திருக்குறளின் சமயமே மாறுபட்டு விடுகிறது. இந்த மாற்றம் ஏன் இப்படி இருக்கலாகாது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. வள்ளுவர் வாழ்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவரது வாழ்க்கை நிகழ்வுகள் தொகுக்கப் பெற்றிருக்கின்றன. தற்போது வள்ளுவர் வாழ்ந்து 2000 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளும், வாழ்ந்த காலமும் இன்றுவரை விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன.
வைதிகத்தின் ஊடுருவல்
இந்துமத வரலாறாக இன்று கிடைப்பவை எல்லாம் அவரவர் உருவாக்கிய கதைகளாகவே உள்ளன. அதே போல காலக் கணக்கிலும் நிறையக் கோளாறுகள். ஒரு சிலர் பொதுவாக, வேத காலமே இந்து மதத்தின் தோற்றம் என்று முடித்துக் கொள்கின்றனர். வேதகாலத்திற்குச் சான்றுகள் இல்லை. உருவாக்கப்பட்ட சான்றுகளும் மிகப் பிற்காலத்தில் தான். இது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் பிரிவாக, ஆரியப் பிராமணர்களின் புறச் சமயமாக இருந்ததால் தொடக்கத்தில் பிராமண மதமாகத்தான் (வைதிகம்) அறியப்பட்டது. மகாவீரர் காலத்தில் (கி.மு. 600) அவருடைய சீடர்களாக இந்திரபூதி கௌதமன் தலைமையில் சமணத்தில் உள் நுழைந்த பிராமணர்கள், சமணக் கோட்பாடுகளை அப்படியே கிரகித்துத் தங்கள் பிரிவில் உள் நுழைத்ததுடன் சமண சமயத்தையே விழுங்கிவிட்டனர். (அ. லெ. நடராஜன், பகவான் மகாவீரர் வரலாறு, 2012).
புத்தருக்குப் பின்னர், அசோகரின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையும் வரை (கி.மு. 300 - கி.பி. 200) பௌத்த சமயத்திற்குள் நுழைய முடியாமல் இருந்த பிராமணர்கள், பின்னர் பௌத்த சமயத்திலும் உள்நுழைந்து, புத்தர் வழி வந்தவர்களை ஹீனயானப் பிரிவினராக்கி, பிராமணப் பிரிவை மகாயானமாக்கிப் புத்தரின் கோட்பாடுகளை உட்செரித்துக் கொண்டனர். அதுவரை மாடு முதற்கொண்டு அனைத்தையும் உண்டு வந்த பிராமண மதம், சமண, புத்த சமயங்களின் அரஹத்துகள், அந்தணர்கள் போல் சமூக அந்தஸ்துப் பெற வேண்டுமானால் மகாவீரரும், புத்தரும் கற்பித்த அறக் கோட்பாட்டைக் கடைபிடித்தே ஆக வேண்டிய நிலையில் அசைவத்தை விடுத்தனர். அடுத்த கட்டமாக, மகாவீரர் கிருஷ்ணர் அவதாரமாகவும், புத்தர் விஷ்ணு அவதாரமாகவும் பிராமண மதத்தினரால் ஆக்கப்பட்டு, ஒரு கோட்பாடும் இல்லாத பிராமண மதம் சமண, பௌத்த, ஆசிவகச் சமயங்களின் கோட்பாடுகளைச் சுவீகரித்துக் கொண்டது. சீனா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும், இலங்கையிலும் பௌத்தம் பரவியிருந்தது. அந் நாடுகளிலிருந்து புத்தர் பிறந்த புண்ணிய நாட்டைப் பார்க்க வந்த புத்தத் துறவிகளைப் பார்ப்பனர்கள் சந்தித்து, பார்ப்பன மயமாக்கப்பட்ட புத்தரின் விஷ்ணு முகத்தைக் காண்பித்து, உண்மை வரலாறைப் பலவகையிலும் மாற்றி எழுத வைத்து விட்டனர். (தர்மானந்த கோஸம்பி, பகவான் புத்தர், சாகித்திய அகாதெமி, 2018).
மௌரியர் காலம் முடிந்து குப்தர்கள் காலத்தில் (கி.பி. 200 - கி.பி. 500) பிராமண மதமும் தழைத்தோங்கியது. அன்றைக்கு நடைமுறையில் இருந்த அத்தனைச் சமயங்களின் கோட்பாடுகளையும் உட்செரித்துக் கொண்டாலும், வேதத்தை ஏற்றுக் கொண்ட சமயங்களாகச் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவற்றை அங்கீகரித்துக் கொண்டது பிராமண மதம். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சமயங்களாகச் சார்வாகம், ஜைனம் (சமணம்), பௌத்தம், அவற்றின் உட்பிரிவுகள் அனைத்தையும் நாஸ்திகச் சமயங்கள் என்று குறிப்பிட்டு, அவற்றில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்ததால் அவற்றையும் தங்கள் சமயங்களாக, அதாவது நாத்திகக் கோட்பாடுகளும் வேதத்தில் இருந்து கிளைத்ததாகப் பொருள்படும்படிக் காலங்காலமாய்க் கூறி வந்து, ஆதிசங்கரரையும் அப்படியே எழுத வைத்துவிட்டனர்.
வேதத்தை ஏற்றுக் கொண்ட ஆறு சமயங்கள், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத ஆறு சமயங்கள் என்று இந்த பனிரெண்டு சமயங்களையும் "தத்துவ தரிசனங்கள்" அதாவது "மெய்ப்பொருள் காட்சி"களாகக் குறிப்பிடுவதன் வழி, "எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது" என்று கூறும் பகவத்கீதையை மகாபாரதத்தின் இடைச்செருகலாக ஆக்கி, அக்கதையில் வரும் மாயக்கண்ணனை விடவும் சூழ்ச்சியும், தந்திரமும் உடைய வரலாறைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டனர். இன்னொரு பக்கம், தென்னகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் (கி.பி. 600 - கி.பி. 1200) சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மன்னர்களின் ஆதரவில் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, ஒரு பக்கம் பார்ப்பனர்களுக்கு இலவசமாகப் பிரம்ம தேயங்களும் (ஊரையே தானமாகக் கொடுத்தல்), சமண, பௌத்தர்களுக்குக் கழுவேற்ற தண்டனைகளும் விதிக்கப்பட்டன. தண்டனைகளுக்குப் பயந்து மக்களும் சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்களைக் கைவிடவே காலப்போக்கில் அச்சமயங்கள் அருகிப் போயின.
எல்லாச் சமயங்களின் கலவையாக இருந்த பிராமண மதத்திற்கென்றுத் தனி ஒரு கோட்பாடும், நூலும் இல்லாத நிலையில், அதற்கு முதல் சுழி போட்டவர் ஆதிசங்கரர் தான். இவரது காலம் கி.பி. 8 முதல் கி.பி.12 வரை என்று கூறப்படுகிறது. உண்மையில் இவர்தான் அன்றிருந்த சைவம், வைணவம், சாக்தேயம், சௌரம், காணபத்யம், கௌமாரம் ஆகிய ஆறு மார்க்கங்களை (சன் மார்க்கம்) ஒன்றிணைத்து, இதற்கு முறையே சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுள்களைக் கற்பித்து, அக் கடவுள்களுக்கு உறவு முறைகளை ஏற்படுத்தி, இவற்றிற்கு ஆகமங்கள், பிரமாண நூல், அத்வைதம் என்ற கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கி, இவற்றை "ஸ்மார்த்தம்" என்ற பெயரில் ஒருங்கிணைத்து உலவ விட்டவர். இவருக்குப் பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரி, இதைக் கண்டெடுத்து விசிஷ்டாவைதத்தைக் கூறி மெருகேற்றிக் கொடுத்தார். மேற்கூறியவற்றை, 13 ஆம் நூற்றாண்டில் மத்துவாச்சாரி, துவைதம் என்ற கோட்பாட்டுடன் கூட்டுக் கலவையாக ஆக்கினார் (புதிய கோடாங்கி, டிசம்பர் 2021, பக். 21-25).
திருக்குறளின் சமயம்
திருக்குறளில் பாதிக்கு மேற்பட்ட குறள்கள் தமிழ் படித்தோர்க்கு எளிதில் விளங்கிவிடும். மீதியில் பெரும்பாலானவற்றை உரையாசிரியர்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒருசில பகுதிகள் உரையாசிரியர்களாலும் விளங்க வைக்க முடியாதவை. அவற்றுள் ஒருசில உரையாசிரியர்களுக்கே விளங்காதவை. மிகக் குறிப்பிட்ட சில குறள்கள் வள்ளுவருக்கு மட்டுமே விளங்கக்கூடியவை. அவர் வாய்திறந்தால்தான் உண்டு. அப்படிப்பட்ட குறள்களில் ஒன்றுதான் முதல் குறள். அந்த ‘ஆதி பகவன்’ யார்தானென்று இதுவரை நடந்த ஆய்வுகளை எழுதியும், படித்தும் மாளவில்லை. பலவாறாகப் பொருள் கூறப்பட்ட அந்த ‘ஆதிபகவன்’ சொல்லாய்வில் ஏதோ ஒரு கூற்றில் உண்மை இருக்கக் கூடும். ஆனால் அது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாக இருக்க முடியாது என்ற நிலை திருக்குறளில் ஒருமை இல்லையோ என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்திவிடும். இருமையைப் பற்றிப் பல இடங்களில் கூறிச் செல்லும் அவருடைய கருத்தினால் ஒருமையும் இருக்கும், இருமையும் இருக்கும் என்பதையே குறளின் சிறப்பாகக் கொள்ளலாம். அதே நேரம், திருக்குறளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தொடக்ககாலச் சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பினை அறிந்தாக வேண்டும்.
திருக்குறளும் சமணமும்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலிருந்து (கி.மு. மூன்று) ஆயிரம் ஆண்டுகள் வரை கற்றோர் இடையில் அந்நூல் செல்வாக்குடன் இருந்து வந்தது. கி.பி.13ம் நூற்றாண்டில் பரிமேலழகர் உரை எழுதிய பின்பு, திருக்குறள் வைதீக நூலாகப் பேசப்பட்டது. சைவமும், வைணவமும் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்டாடின. பதினான்காம் நூற்றாண்டுக்குப்பிறகு சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த பின்னர், திருக்குறள் சைவ, வைணவ அறநூலாகக் கட்டமைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆட்சியர் பொறுப்பேற்ற பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (1777 – 1819) காலத்தில், அவர் வெளியிட்ட திருக்குறள் (1812) நூல்தான் மீண்டும் திருக்குறளைத் தமிழகத்திற்கு நினைவில் கொண்டுவந்தது (ப. மருதநாயகம் 2009:27). (இதற்கு முன்பும் வீரமாமுனிவர் உள்ளிட்ட சிலரின் மொழிபெயர்ப்புப் பதிப்புகள் வெளிவந்துள்ளன). அயோத்திதாசனாரின் பாட்டனார் கந்தப்பன் வழி, அவருடைய அதிகாரி ஆரிங்டன் வழி திருக்குறள் ஓலைச்சுவடி எல்லீசை அடைந்தது. அது ஒரு சமண நூலாகவே எல்லீஸ் குறிப்பிட்டுத் திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களில் இருந்து தெரிந்தெடுத்த குறள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீண்ட விளக்கங்களுடனும், பிற இலக்கிய மேற்கோள்களுடனும் 1812 இல் வெளியிட்டார். அந்தக் காலத்தில் நிலவிய கருத்துப்படி அவர் திருவள்ளுவரைச் சமணராகவே அவரது நூலில் அடையாளப்படுத்தினார். எல்லீஸ் காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் திருவள்ளுவர் தங்க நாணயங்களை வெளியிட்டது. நாணயத்தில் திருவள்ளுவர் உருவம் சமண முனிவராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது (தமிழ் மரபு அறக்கட்டளை இணைய தளம்).
திருக்குறளின் முதல் குறளில் இடம் பெறும் ‘ஆதிபகவன்’ முதற்றே உலகு’ என்னும் தொடரில் வரும் ஆதிபகவன், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரைக் குறிப்பதாகச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆதிநாதரும், ஆதிசிவனும், ஒருவரே என்றும், சமணமும், சித்தமும் அதிலிருந்தே தொடங்குகின்றன என்றும் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளி முத்திரைகளில் எருமைக் கொம்புகள் அணிந்து தவ நிலையில் காணப்படும் உருவம் ஆதிநாதர் என்றும், இடப (ரிஷப) தேவரே என்றும், சிந்துவெளி வரை பேசப்பட்ட மொழி தமிழே என்றும், சமணம் தமிழ்ச் சமயமே என்றும், சமண இலக்கியங்களே தமிழில் அதிகம் என்றும் அண்மைய ஆய்வுகள் கருத்துரைக்கின்றன (சிவ இளங்கோ 2021:60-70). பிற சமயக் குரவர்கள் அனைவரும் விருஷபதேவருக்குப் பின்னர் தோன்றியவர்களே என்று ‘திருவள்ளுவர் சைநர்’ (சமணர்) என்ற கட்டுரையில் திரு.வி.க. குறிப்பிடுகிறார் திருக்குறள் பன்முக வாசிப்பு 2009:13-26). சமணம் தமிழகத்திற்கு இறக்குமதியானதல்ல, ஆதிநாதர் (சிந்துவெளி) காலந்தொட்டே தமிழர்களின் சமயமாக சமணம் இருந்துள்ளது. தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டாக இலக்கணம், இலக்கியம், அற இலக்கியம், உரைகள் ஆகிய தொண்டுகள் உள்ளன என்கிறார் பேரா. க.ப.அறவாணன். சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்கிறார் கால்டுவெல். காப்பியங்கள், புராணங்கள் உட்பட 22 இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல் உட்பட 20 இலக்கண நூல்களும், திருக்குறள், நாலடியார் உட்பட 16 அற நூல்களும், நீலகேசி உள்ளிட்ட நான்கு தருக்க நூல்களும், பெருங்குருகு, செயிற்றியம் உள்ளிட்ட ஒன்பது இசை நூல்களும், பிற இலக்கிய வகைகளான நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம், நாடகம் ஆகிய வகையில் திருக்கலம்பகம், சூடாமணி நிகண்டு உள்ளிட்ட 36 நூல்களும் ஆக மொத்தம் 107 இலக்கிய நூல்கள் தமிழ்ச் சமணர்களால் இயற்றப்பட்டுள்ளன என்ற செய்தி, தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் (1.11.1974) வெளியிடப்பட்டுள்ளது (தகவல் இரா.பானுகுமார், சென்னை–மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளை).
திருவள்ளுவரைக் கொண்டாடும் சைவ, வைணவ மதங்களின் வழிபாட்டு இடங்களில் அவருடைய உருவம் அமைக்கப்படுவதில்லை. அடியவர் வாழ்த்தில் அவர் சேர்க்கப்படுவதில்லை. இதற்குத் திருவள்ளுவர் முன்னாளில் சமணர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமே காரணம் என்கிறார் திரு. வி.க. திருவள்ளுவரை எச்சமயத்தின் சார்பாகப் பார்த்தாலும் அவை அத்தனையுமே அருகதேவர் (மகாவீரர்) கண்ட அருள்நெறியின் பாற்பட்டன வென்பதும் திரு.வி.க. வின் ஆழ்ந்த கருத்து. கொல்லாமையைத் திருவள்ளுவர் வலியுறுத்தியதைப் போல் அவர் காலத்துப் புலவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை (அறவினை யாதெனின் கொல்லாமை – குறள் - 321). மேலும் அறத்தைப் பாயிரத்தில் அமைக்கும் மரபாட்சியும் சைனருடையதே என்றும் திரு.வி.க. கூறுகிறார். ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற வேதாந்த நாடக நூலில் சமணர் சார்பில் ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்ற குறள் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஆதிபகவனையே குறிக்கும். அவரே ஆதிநாதர் (ரிஷப நாதர்). இதுவே திருவள்ளுவர் தம் நூலில் வைத்துள்ள திறவுகோல் என்று திருவள்ளுவர் சைநர் என்ற தன் ஆய்வுக் கட்டுரையில் திரு.வி.க. உரைக்கிறார் (திருக்குறள் பன்முக வாசிப்பு 2009:13-26).
சைன (சமண) சமயம் விதிக்கின்ற ஐவகை நோன்புகளான கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், உடமை நீக்கம் ஆகியவற்றைப் பல குறள்களில் வலியுறுத்தியும், தனித்தனி அதிகாரத்தில் இக்கருத்துகளை அமைத்தும் இருப்பது திருக்குறள் சைன சமய நூலே என்று நிறுவப் போதுமானதென்று அ.சக்கரவர்த்தி நயினார் ‘திருக்குறள் வழங்கும் செய்தி’ (1959) எனும் கட்டுரையில் விளக்குகிறார். ஜைன சமயத்தில் நான்கு விழுமியங்களாக (மங்களமாக) அருகன், சித்தன், சங்கம், தருமம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாகத மொழியில் திருவள்ளுவர் இயற்றிய ஒரு பாடலில் அமைத்திருப்பதாகக் கூறும் சக்கரவர்த்தி நயினார், இதனைப் பின்பற்றியே திருக்குறளில் கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதே கருத்தையும், முறையையும் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியில் பின்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். தேவர், நாயனார் என்பவை சமண முனிவர்களுக்கு வழங்கும் பெயர் என்று சமணத்தின் பன்மொழி நூல்களும் தெரிவிக்கின்றன (திருக்குறள் பன்முக வாசிப்பு 2009:27-36). கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகியவற்றைத் திருக்குறள் முற்றாக மறுப்பதால் பௌத்தக் கோட்பாட்டைத் திருக்குறள் ஏற்கவில்லை என்பதும், திருக்குறள் பாயிரத்தில் வரும் நான்கு அதிகாரங்களின் தெய்வக் கோட்பாடுகளில் சமணச் சிந்தனைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. மண்ணுலக மனிதர்களே விண்ணுலகத் தெய்வமாவர் என்பது வள்ளுவரின் கோட்பாடாக இருப்பதால், திருக்குறள் சமணக் கோட்பாடுகளுடன் அதிகம் ஒத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர் (ஜான் சாமுவேல் 2000:20-25).
திருக்குறளும் பௌத்தமும்:
புத்த சமயம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் பரவியமைக்கு மாமன்னர் அசோகனே காரணம். புத்தர் (கி.மு. 623 – 543) பரிநிர்வாணம் எய்தி (இறந்தபின்) 300 ஆண்டுகள் கழித்து மெளரிய மாமன்னனான அசோகன் புத்த சமயத்தைத் தழுவி, அதை அரசாங்க மதமாகவும் ஆக்கினார். அதே காலத்தில் சமணம், ஆசீவகம் ஆகிய சமயங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. வைதிகமும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. அசோகனின் தூதுவர்களாகப் புத்த சமயம் பரப்ப வந்தவர்கள் முக்கியமான இடங்களில் கல்வெட்டுகளையும், அசோக சக்கரம், தூண்களையும் நிறுவினார்கள். சில இடங்களில் புத்தர் இன்னார் என்று அறிய அவரது பாத உருவங்களைப் பொறித்தார்கள். பின்னாட்களில் இந்தியாவில் உருவ வழிபாடுகள் தோன்றுவதற்கு இதுவே காரணமாயிற்று. அதற்கு முன்னரும் சில வழிபாடுகள் இருந்திருந்தன. தமிழர்களைப் பொறுத்தவரையில் முன்னோர் வழிபாடும், தாய்த் தெய்வ வழிபாடும், நடுகல் வழிபாடும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தன. முன்னோர் வழிபாடு உருவமில்லாதது. ஆனால் இடம் சார்ந்து கிடைக்கும் பொருட்களால் அடையாளப் படுத்தப்படுவது. தாய்த் தெய்வ வழிபாடு ஒரு பெண்ணுருவம், குறிப்பாகத் தாய் உருவம் சிறியதாக வடிவமைக்கப்பட்டது. நடுகல் வழிபாட்டில் தொடக்கத்தில் உருவம் இல்லை. பெயரும் அவரைச் சார்ந்த ஏதோ ஒரு அடையாளமும் இடம்பெற்று வந்தன. இந்நிலையில்தான் கௌதமபுத்தரின் திருவடிகளைத் தொழும் வழிபாடு அசோக மாமன்னரால் கி.மு. 300 இல் உருவாக்கப்பட்டது. திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் (திருக்குறளில் கடவுள் என்ற சொல் எங்கும் இடம் பெறாத நிலையில் கடவுள் வாழ்த்து எனும் தலைப்பு இடைச்செருகலே என்ற கருத்தும் நிலவுகிறது) பாதங்களைத் தொழும் தன்மை மிகுதியாக இடம்பெற்றுள்ளது. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார், தனக்குவமை இல்லாதான் தாள், அறவாழி அந்தணன் தாள், எண்குணத்தான் தாளை, இறைவன் அடி சேராதார் என்று தாள், அடி ஆகிய காலடி அல்லது பாத வணக்கத்தைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இதில் கூறப்படும் தாள், அடி என்பவை புத்தருடையதே என அதற்குரிய அடைமொழிகளான, வாலறிவன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவைகளைச் சுட்டிக்காட்டிப் புத்த சமயத்தினர் கூறிவருகின்றனர். இவை மகாவீரருக்குச் சொல்லப்பட்டவை என சமண சமயத்தவரும் கூறுகின்றனர்.
புத்தரின் ஒழுக்க இயலைப் பாலிமொழி நூல்களான விநயபிடகம், சூத்திரபிடகம் ஆகிய தொகை நூல்கள் விவரிக்கின்றன. இந்நூலில் புத்தரின் போதனைகளாகக் குறிக்கப்பெறும் ஒழுக்கவியல் திருவள்ளுவர் கூறும் திருக்குறள் ஒழுக்கவியலோடு பெரிதும் ஒத்துப் போவதைத் தனிநாயகம் அடிகளார் விவரித்துள்ளார். பௌத்தத்தின் திரிபிடகத்தில் விநயபிடகம் துறவிகளின் ஒழுக்க நெறிகளைப் பற்றிப் பேச, சுத்தபிடகமும், அபிதம்ம பிடகமும் அறநெறிகளை எடுத்தியம்பும் நூல்களாக அமைந்துள்ளன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் (ஜான் சாமுவேல் 2000:2). சாதி வேற்றுமைகளை ஒழித்த புத்தரின் கருத்து புண்ணிய பூமியை விரிவாக்கியது. அதைத் தென்னாட்டில் விரிவுபடுத்தியது திருக்குறள். புத்த தன்மங்களான பஞ்சசீலம் (ஐவகை நெறி), அஷ்டசீலம் (எண்குணத்தான்), தசசீலம் (பத்துக்கட்டளைகள்) ஆகியவற்றைத் திருக்குறளில் பொய்யாமை, அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும், கொல்லான், புலாலை மறுத்தானை, எவ்வுயிர்க்கும் செந்தண்மை போன்றவும் இன்னும் பல குறள்களிலும் காணலாம். அதே நேரம் துறவறத்தை அதிகமாகப் புத்தர் வலியுறுத்தியபோதும் திருவள்ளுவர் இல்லறத்தை வலியுறுத்தி அதுவே அறம் என்று மொழிவதை ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று மொழியும் குறள்கள் மூலமாக அறியலாம் என்றும் தனிநாயகம் அடிகளார் கூறுகிறார். துன்ப நீக்கத்திற்கு வழியாக இறப்பை வள்ளுவர் வலியுறுத்தவில்லை. மாறாக வாழ்க்கையைச் சுவைத்து வாழும் முறையையும் இன்பத்துப் பாலாகக் கொடுத்திருக்கிறார்.
புத்தரின் போதனைகளான தன்மபீடம், சூத்திரபீடம், விநயபீடம் ஆகிய மூன்று பிடகக் (திரிபிடகம்) கருத்துக்களையே மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்னும் மூன்று பிரிவாகத் திரிக்குறள் நூலை திருவள்ளுவர் இயற்றினார் என்று அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். வள்ளுவர், சாக்கையர், நிமித்திகர், வேந்தன், மாதானுபங்கி, செந்நாப்போதார், பொய்யாமொழி என்று வழங்கும் பெயர்களைத் திவாகரம், பின்கலை நிகண்டு, மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் இன்னும் பிற இலக்கியங்களில் இருந்தும் பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இறுதியாகத் தின்னனூர் அருகில் இராகுல வியாரத்தில் தங்கி நல்லுரைகள் ஆற்றிப் பின் காலமானார் என்றும் ‘தியானப் பஞ்சரத்தினப்பா’ என்னும் ஓலைச் சுவடிச் செய்தியையும் கூறுகிறார். திருவள்ளுவர் நினைவிடம் கட்டப்பட்ட இராகுல வியாரம் தற்போது வீரராகவர் ஆலயமாக வைணவ சமயத்தார் வசம் உள்ளதாகவும் பண்டிதர் கூறுகிறார். இந்த உண்மைகளைத் திரித்து திருவள்ளுவரை வேறு சமயத்தவராகவும், வேறு இனத்தவராகவும் காட்டவேண்டும் என்பதற்காகவே எழுவரோடு உடன்பிறந்தார் என்று கூறும் ‘கபிலர் அகவல்’ போன்ற பொய்யான வரலாறுகள் புனையப்பட்டதாகக் கூறும் அயோத்திதாசர், எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் (1812) நூலிலும், அதன் பின்னர் 1831 இல் வெளிவந்த நூலிலும் திருவள்ளுவர் வரலாறு இல்லையென்றும், 1935 இல் விசாகப் பெருமாளையரும், 1937 இல் சரவணப் பெருமாளையரும் ஆதி, பகவன் ஆகியோருக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற கட்டுக்கதைகளைச் சேர்த்து விட்டனர் என்றும் கூறுகிறார். இப்படியான கட்டுக்கதையிலிருந்து விடுவித்துத் திருக்குறளை புத்த சமயக் காப்பியம் என்று நிறுவுதற்குத் திரிக்குறள் உரை விளக்கத்தினை தன்னுடைய ‘தமிழன்’ இதழில் 1911 முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் எழுதிவந்தார். முதல் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதி அயோத்திதாசர் இறப்பைத் தழுவிய நிலையில், அவரது உரைகளும், அவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறும் இலக்கியச் சான்றுகளுடன் புத்தசமய வழிநூலாகத் திருக்குறளை நிறுவி உள்ளன திரிக்குறள் அயோத்திதாசர் உரை 2015:xix). பௌத்தத் திரிபிடகத்தின் அறக்கோட்பாடுகள் திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும், திருக்குறளின் அறக்கோட்பாடுகளைத் தமிழர் அறம் என்றும், புறநானூறு, கலித்தொகை, நற்றிணை போன்றவற்றில் இடம் பெற்றுள்ள சங்கப் பாடல்களின் அறமே வள்ளுவர் யாத்த மறை நூலின் மூல ஊற்றாக அமைந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர் (ஜான் சாமுவேல் 2000:13-15).
திருக்குறளும் ஆசீவகமும்
சமணம், பெளத்தம் ஆகியவை சங்கம் என்னும் அமைப்புகளாக உருவான காலத்தில்தான் ஆசீவகமும் அமைப்பாக உருவகம் பெற்றது. மகாவீரர், கெளதம புத்தரின் சமகாலத்தவராக ஆசீவகத்தின் மூன்றாம் திருத்தங்கரரான மற்கலி கோசாலர் இருந்தார் (முதலாம் திருத்தங்கரர் இடபதேவர், இரண்டாம் திருத்தங்கரர் பார்சுவநாதர்). மாமன்னர் அசோகனின் தந்தை பிம்பிசாரர் ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர். அசோகர் புத்தமதம் தழுவினாலும் ஆசீவகமும் செல்வாக்கோடு திகழ்ந்தது. வடபுலம் மட்டுமன்றித் தென்புலத்திலும் இம்மூன்று சமயங்களும் பெரும்செல்வாக்கோடுதான் இருந்தன. ஆசீவகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை வடபுலத்திலும், கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிலும் இருந்தது. சமணமும், பௌத்தமும் தமிழில் பல இலக்கிய, இலக்கண நூல்களை அளித்துள்ளன. ஆசீவகத்தின் ‘ஒன்பது கதிர்’ என்னும் தமிழ் நூல் இன்று கிடைக்கப்பெறவில்லை. இன்னொரு நூலான சினேந்திரமாலை (வெண்பா) ஆசீவகம் செல்வாக்கிழந்த நிலையில் சமண நூலாக அறியப்டுகிறது.
ஆசீவகத்தின் கோட்பாடுகள் தமிழிலக்கியங்களில் அதிகமாகவே உள்ளன. திருமந்திரம், பரிபாடல், புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார், அருங்கலச் செப்பு ஆகிய நூல்களில் ஆசீவகக் கருத்துகள் விரவிக் காணப்படுகின்றன. திருவள்ளுவர் காலத்தில் இம்மூன்று சமயங்களுமே தமிழகத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தன. ஆசீவகத்தின் கருத்துகளில் உயர்ந்தவையும், உடன்பாடானவையும் திருக்குறளில் பயின்று வருகின்றன. ஆசீவகம் பிறவியை ஏழு வண்ணங்களில் குறிக்கிறது. திருக்குறளில் ஏழு என்பதை மையப்படுத்தும் எட்டுக் குறட்பாக்கள் உள்ளன. எழுமையும், எழுபிறப்பும் என்ற சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாடு திருக்குறளின் ஊழ் அதிகாரத்தில் ஊடுருவி இருப்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆசீவகத்தின் அணுக் கொள்கை அறிவியல் முன்னோட்டத்தின் முதற்படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் அணுவைப் பிளக்க முடியாது என்ற ஆசீவகத்தின் கொள்கையை 2600 ஆண்டுகளுக்குப் பின்னர் பிளந்தவர் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அறிதலையும், அறிவித்தலையும் உயிரின் தொழில்களாக ஆசீவகம் குறிப்பிடுகிறது. ‘எண்பொருளவாக செலச் சொல்லித் தான் பிறவாய் நுண்பொருள் காண்பதறிவு’ (குறள்-424) என்னும் திருக்குறள் ஆசீவகக் கருத்தோடு பெரிதும் ஒத்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசீவகம், தமிழ்நாட்டில் தோன்றி வடபுலம் வரை சென்ற அறிவியல் சமயம் என்று பேரா. க. நெடுஞ்செழியன் தனது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூலில் குறிப்பிடுகிறார் (புதிய கோடாங்கி, டிசம்பர் 2022, 9 -13).
திருக்குறளும் சைவமும்
சைவ சித்தாந்த சாத்திரங்களில் “பதி, பசும், பாசம்” என்னும் முப்பொருள் உண்மை பேசப்பட்டுள்ளது. முன் செய்வினை, பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் முதலியன பேசப்பட்டு உள்ளன. உயிர்கள் அடைய வேண்டிய முக்தியின்பம் பேசப்பட்டுள்ளது. வினையின் காரணமாகப் பிறப்புகள் ஏற்படுகின்றன. கடவுள் தத்துவம், இன்னும் பல செய்திகள் பேசப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் திருக்குறளில் காண முடிகிறது. எனவே, திருக்குறள் ஒரு சைவசித்தாந்த நூலே எனவும், இதில் பேசப்பட்ட கடவுள் சிவபெருமானே எனவும், திருவள்ளுவர் சைவரே எனவும் சைவப் பிரிவினரின் வாதமாக அமைகிறது (சைவமும் வைணவமும் 2017:15).
ஐம்பொறி அடக்கலைப் பற்றித் திருமூலரும், மூன்றாம், ஆறாம் சைவத் திருமுறைகளும் கூறுகின்றன. “ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு” என்னும் குறளின் வழி சைவ நூல்களில் உள்ள 36 தத்துவங்களையும் அதில் அடக்கி உள்ளதாகச் சைவப் பிரியர்கள் இன்புறுகின்றனர் (திருக்குறள் பரிமேலழகர் உரை 1967:533). மேலும் வினை தீர்த்தல், பிறப்பறுத்தல், பற்று அறுத்தல், திருவடி சரணடைதல், பிறவிப் பெருங்கடல் நீந்தல், பேதைமை நீங்கல், செருக்கறுத்தல் ஆகிய சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் திருக்குறளில் உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். திருமூலரின் அன்பே சிவம் என்ற கருத்து மிகவும் தலையானதாகக் கொள்ளப்படுகிறது. வேதத்தின் அந்தமான உபநிடதங்கள், தேவாரங்கள், வேதாந்த சூத்திரம், திருக்கோவையார், திருவாசகம், திருமூலர் என்று இவையெல்லாம் கலந்த ஒருவாசகமாக திருக்குறளைக் குறிப்பிடுவதிலும், அதுவும் ஔவையார் பேரில் அக்கருத்தை வழங்குவதிலும் பெருமையடைகின்றனர் (சைவமும் வைணவமும் 2017:12). இவையெல்லாம் திருக்குறளில் இருப்பதைச் சுட்டிக்காட்டித் திருக்குறள் சைவ வழி நூலே என்று குறிப்பிடுகின்றனர். அதே நேரம் சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையான திருமுறைகள், சித்தாந்த நூல்கள், சாத்திரங்கள் அனைத்தும் வேதத்தின் அந்தமான உபநிடதத்தின் தெளிவாகும் என்று தமிழின் மெய்யியல் கோட்பாடுகளை முழுக்க முழுக்க வட புலத்தின் வழி வந்தவையாகக் குறிப்பிட்டுப் பெருமிதம் கொள்கின்றனர் (சைவ சமயம் ஓர் அறிமுகம் 1979:17).
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் அறவாழி அந்தணன் என்று கூறப்பட்டிருப்பதைச் சுட்டியும், நிலையாமை, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களில் சிவாகமக் கருத்துகள் இருப்பதை சுட்டிக்காட்டியும், நாயனார் என்ற பெயரைச் சுட்டியும் திருவள்ளுவரைச் சைவர் எனக் கூறி அவருடைய உருவத்திற்கு சைவ அடையாளத்தைத் தீட்டச் செய்து திருக்குறள் சைவ வழிநூலே என்று கூறுகின்றனர் (திருவள்ளுவ நாயனார் வரலாறு 1926:51). பக்தி இலக்கிய காலத்திற்குப் பின்பான சைவத்தின் எழுச்சி, திருக்குறள் காலத்திலேயே இருந்ததாகக் கட்டமைக்கும் முயற்சி, திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகராலேயே ஏற்படுத்தப்பட்டு விட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
உலகத்தில் வாழ்வாங்கு வாழ்பவனே தெய்வமாகக் கருதப்படுவான் என்பதே வள்ளுவரின் தெய்வக் கோட்பாடு. இவ்வகையிலேயே வள்ளுவரைத் ‘தமிழ் இறைவனார்’ என்கிறார் பாரதிதாசன் (பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் 1994:v). முன்னோரைத் தென்புலத்தார் என்றும் நடுகல்லில் வாழ்பவர்களைத் தெய்வம் என்றும் கற்பிக்கும் பாங்கு திருவள்ளுவரிடம் காண முடிகிறது. இறை உணர்வை விடவும் மாந்தநேயமே வள்ளுவத்தில் மிஞ்சி நிற்கின்றது. முப்பால் என்பது அறம், பொருள், இன்பமே. வீடு என்பது வள்ளுவத்தின் பொருண்மை அல்ல. “அற முதலாய மும்முதற் பொருள்” என்கிறது தொல்காப்பியம் (செய்யுளியல் 101). சங்க இலக்கியங்களில் பெரும்பகுதியும் இதையே முன்மொழிகின்றன. ஆனாலும் திருவள்ளுவரைச் சைவராக நிறுவுவதில் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்றே கூற வேண்டும்.
திருக்குறளும் வைணவமும்
எப்படி ‘அ’ எழுத்துக்கெல்லாம் முதன்மையோ அதுபோலவே திருமால் உலகுக்கெல்லாம் முதன்மையானவர். அவனே ஆதிநாராயணன். அவன் தேவியோ ஆதிலட்சுமி. அவன் தொண்டனோ ஆதிசேஷன் (முதல் தொண்டன்). இப்படி எல்லாம் ஆதியாக, எல்லாவற்றுக்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்று வைணவப் பிரியர்கள் திருக்குறளைத் தங்கள் நூலாகக் குறிப்பிடுகின்றனர். முகுந்த மாலையில் வரும் ஸ்ரீவல்லபா (இலக்குமிக்குப் பிரியமானவன்) என்பதைத் தமிழ்ப் படுத்தினால் திருவல்லபா ஆகிறது. அதுவே திருவள்ளுவர். “எழுத்துக்களில் நான் அகரமாய் இருக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் கூறும் வாக்கியம் தான், திருக்குறளில் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று வள்ளுவரால் குறிப்பிடப் படுகிறது. ‘வாலறிவன்’ என்கிறது திருக்குறள். ‘சர்வக்ஞர்’ என்று கூறும் விஷ்ணு சகஸ்ரநாமம். ‘ஐந்தவித்தான்’ (இந்திரியங்களை வென்றவன்) என்கிறது திருக்குறள். ‘ஹிருக்ஷீகேசன்’ (இந்திரியங்களை வென்றவன்) எனபது திருமாலின் பெயர். ‘தனக்குவமை இல்லாதான்’ என்னும் திருக்குறள். ‘ஒப்பிலியப்பன்’ என்கிறது திருவாய்மொழி. ‘எண்குணத்தான்’ என்னும் திருக்குறள். ‘குணப்ரூத்’ எனபது சகஸ்ரநாமத்தில் வரும் திருநாமம். “அடியளந்தான் - திருமால்”. “உடம்போடு உயிரிடை நட்பு” / “உறங்குவது போலும் சாக்காடு” எனபது கீதையில் கண்ணன் கூறுவது. “தாமரைக்கண்ணான் - புண்டரிகாக்ஷன்” (சகஸ்ரநாமத்தில் வரும் திருநாமம்). “அறவாழி அந்தணன் (திருக்குறள்) - அறவனை யாழிப்படை அந்தணனை” (நம்மாழ்வார் திருவாய்மொழி). “பூமாதேவியின் பொறுமை” - வால்மீகியின் “க்ஷமயா ப்ருதிவீஸம:” என்று பல்வேறு வடபுலத்து இலக்கியங்களில் இருந்து சான்றுகளைக் காட்டி திருவள்ளுவர் வைணவர் என்று நிறுவுகின்றனர் வைணவப் பிரியர்கள் (திருவள்ளுவ நாயனார் வரலாறு 1926:50).
திருக்குறளும் வடபுலமும்
வடபுலம் என்பதில் ஆரியம், சமஸ்கிருதம், வேதம், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவை அடங்கும். ஆரியர் என்பதை இனமாகக் கொள்ளாமல் ஆடவரில் உயர்ந்தவர் என்ற பொருளில் புத்தர் வழங்குவார். ஆனால் திருவள்ளுவர் ஆரியரைப் போற்றவில்லை. மனுதர்மத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிர்ப்புக் காட்டுகிறார். நாம் இன்று வழங்கும் பொருளில் அந்தணர் அன்று குறிக்கப்படவில்லை. சிரமணர்களில் உயர்ந்த அறஹத்துகளே அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்நிலையில் மதிக்கப்பெற்றனர். திருவள்ளுவர் காலத்தில் வேள்விக் கொலை புரிந்துவந்த ஆரியர், சமூக மதிப்புக் கருதித் தங்களையும் அந்தணர் என்று சொல்லிக்கொண்டனர். அதனால் தான் அந்தணர் என்போர் அறவோர் என்று வள்ளுவர் விளக்கம் கொடுக்க நேர்ந்தது. இப்படி அகச்சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவற்றை எதிர்த்தழிக்கத் தொடங்கிய புறச்சமயமான வைதிகத்தை நேரடியாகவும், மறைபொருளாகவும் தோலுரித்துக் காட்டும் குறள்கள் நூல் முழுவதும் விரவியுள்ளன.
வடபுலத்தை முற்றாக எதிர்க்கவே தென்புலத்தார் என்கிறார் வள்ளுவர். தென்புலத்தார் என்பது முன்னோர் வழிபாட்டையும், தென்மதுரை, குமரிக்கண்டங்களில் கடல்கோளால் அழிந்தவர் நினைவையும் போற்றுவதற்கான வழிபாடு என்று பாவாணர் கூறுகிறார். தங்கள் புலன்கள் தென்பட சாதிக்கும் (ஐந்தவிக்கும்) சமண முனிவர்களையும், அறஹத்து களையும் குறிக்கும் சொல்தான் தென்புலத்தார் என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். ஆரியத்தையும், வடபுலத்தையும் பல்வேறு நிலைகளில் எதிர்க்கும் குறள்களை மேற்கூறிய இருவருமே பெரும் பட்டியல் இட்டுள்ளனர். வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் பசியால் வாடும் நிலையில் எப்பாவம் செய்தாயினும் அவர்களைக் காப்பாற்றுக என்று ஆரிய நூல்கள் அறம் உரைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் மறுத்து எத்துணை இடர்வந்தாலும் பாவகாரியம் எதுவும் செய்யக்கூடாது என்று திருவள்ளுவர் உரைப்பதாகத் திருக்குறளுக்கு வைதிகப் போர்வை போர்த்திய பரிமேலழகரே கூறுகிறார். (செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் - 656), குன்ற வருப விடல் (குறள் - 961).
உயர் பிறப்பாளர்களுக்கே மேலுலகம் என்று கூறி அவர்கள் வீடுபேறடைந்தால் அவர்களை மேலோர், உயர்ந்தோர், வானோர், தெய்வம், தேவர் என்று கூறும் வழக்கமிருக்க ‘தேவர் அனையர் கயவர்’ என்றும், ‘நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்’ என்றும், ‘மக்களே போல்வர் கயவர்’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவது கயவர்களைத் தேவர்களுக்கு ஒப்பிட்டு, மக்களிலும் தேவர்கள் தாழ்ந்தவர் என்ற கருத்தில் அமைந்ததே என்று புலவர் குழந்தை மதிப்பீடு செய்துள்ளார். திருக்குறளில் உரைகளில் பின்னர் சேர்க்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ நூலிலும் சில இடைச் செருகல்கள் போக பெரும்பாலான வெண்பாக்கள் வள்ளுவரின் வருண, வேத, வடபுல எதிர்ப்பினைச் சுட்டியே செல்கின்றன.
வடபுலத்து அரசுகள் தொடக்கக் காலங்களில் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் அறக் கொள்கைகளை ஏற்று அமைதி வழிப்பட்ட அதே காலத்தில், வைதிகத்தின் மனுஸ்மிருதிக் கொள்கை ஆரியர்வழி வர்ணாசிரமக் கொள்கையாக அரசுகளின் மீது திணிக்கப்பட்டது. இதில் அசோக மாமன்னனும் தத்தளித்திருந்த வேளையில்தான், நால்வருணம் சாராத அரசையும், அறவழியில் அரசு மற்றும் குடிகளை இணைக்கும் சமூக அமைப்பினைப் புத்தரின் போதனையில் இருந்து அசோகர் பெற்றார். பல்வேறுபட்ட மனிதர்கள், இனங்கள், சமயங்கள் சேர்ந்து வாழும் சமுதாயம், அடிப்படையில் அறநிலையில் அமைய வேண்டிய இன்றியமையாமையை அவர் புத்தரிடம் இருந்து பெற்றார். இதையொட்டி தமது அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொண்ட அசோகரின் அரசாங்கத்தில் ராஜகுரு, மத குருக்களுக்கு இடமில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் வேள்விகள் அசோகரால் தடைசெய்யப்பட்டன. அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் புத்தரின் போதனை, வைதிகத்தின் வேரை ஆட்டம் காண வைத்ததுடன் அவர்களின் கூட்டத்தைப் புலம் பெயரவும் வைத்தது.
வடபுலம் பெயர்ந்தால் தென்புலத்தைத் தவிர வேறு வசதியுள்ள புலமில்லை. இதனால் தமிழர்கள் மீதும், தமிழ் அரசுகள் மீதும் மிகப்பெரிய பண்பாட்டுத் திணிப்பும், போரும் நடை பெற்றபோது அவர்களுக்கு வடபுலத்தில் புத்தர் கிடைத்ததைப் போல் ஒரு தத்துவ வழிகாட்டி கிடைக்கவில்லை. வாழும் காலத்திலேயே கிரேக்க அறிஞர் சாக்ரடீசின் அருமை பெருமை உணர்ந்த, அவருடனேயே உடனிருந்த இளையோர் கூட்டம் போல் வள்ளுவருக்கு ஒரு கூட்டம் இருந்ததாகத் தகவல்கள் இல்லை. புத்தரைப் போன்றோ, மகாவீரரைப் போன்றோ சங்கங்கள் அமைத்துத் தன் கருத்தியலைப் பரப்பும் எண்ணமும் வள்ளுவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வள்ளுவர் சம காலத்திலும், அதற்கு முன்பும் சமயங்கள் நிறுவன மயமாக்கப்பட்டதைப் போன்ற ஒரு செயல்பாடும் வள்ளுவர் காலத்திலேயோ, அல்லது வள்ளுவராலேயோ நடந்ததாகவும் தெரியவில்லை.
ஆனால் சைனம், பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், சார்வாகம் போன்ற அறிவுசார் சமயங்களின் கோட்பாடுகளை அறிந்திருந்த வள்ளுவர் தமிழர்களுக்கு அரணாக இருந்தார். மனுஸ்மிருதி, புராணம், வருணம் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கிலேயே மதகுரு இல்லாத அரசன் – அமைச்சர் கொண்ட அரசியலைத் தத்துவக் கோட்பாடாகத் தந்தார். அரசன் அருள் உள்ளம் உடையவனாகவும், செங்கோல் செலுத்துபவ னாகவும் அறம்பிறழாமல் ‘ஐந்து சால்பு ஊன்றிய தூண்’ (குறள் – 983) போல ஆட்சிபுரியவேண்டும் என்ற வள்ளுவரின் அரசியல் கோட்பாடுதான் அன்றைய தமிழ் அரசுகளுக்குப் பெரும் அரணாக விளங்கியது. மனுநீதி வெறுக்கும் உழவுத் தொழிலைத் தலைமைத் தொழிலாக உயர்த்திப் பிடித்தவர் வள்ளுவர். வருணங்கள் நுழையாத பழந்தமிழ்ச் சமுதாயம் காதலை உயர்த்திப்பிடித்தது. அதை இலக்கியங்களில் பாடி வைத்தது. வைதிகத்தின் வழியாக வருணம் தமிழ்நாட்டில் நுழைந்த காலத்தில் அறமும், பொருளும் பாடித்தந்த வள்ளுவர், இன்பத்துப் பாலையும் பாடிவைத்து சமத்துவச் சமுதாயம் நிலைத்திருக்கும் வகை செய்தார்.
பௌத்தத்திற்கும், வைதிகத்திற்கும் இரண்டு முக்கியமான வேறுபாடுகளை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, பௌத்தத்தில் கூறப்படும் தம்மம் என்பது ஒழுக்கமே. அது கடவுளுக்கு நிகரானது. ஒழுக்கநெறி இல்லையென்றால் பௌத்தமே இல்லை. ஆனால் வைதிகம் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதல்ல. வைதிக தர்மம் என்பது சடங்கு, யாகம், பலி, பெண் போகப்பொருள் என்ற தன்மையைக் கொண்டது. இரண்டாவது வேறுபாடு சமத்துவம். பௌத்தம் நால்வருணத்தின் எதிரி. மனுதர்மம், நால்வருணம் ஆகியவற்றின் எதிர்ப்பை நீண்டகாலப் போராட்டமாகப் பௌத்தம் கைக்கொண்டது. ஆனால், வைதிகத்தில் ஒருவருக் கொருவர் சமம் இல்லை. ஆண்களுக்குள் சமம் இல்லை. ஆண் – பெண் சமம் இல்லை. பிறப்பினால் கடைநிலையில் உள்ளவர்களும், பெண்கள் அனைவரும் சன்னியாசம் பெறமுடியாது. கடவுளை அடைய முடியாது. மேலும் இதை மீறினால் அருவருக்கத்தக்க தண்டனைகள். இதுவே வேதத்தின் ஆணை.
பௌத்த சமயத்தின் நால்வருண எதிர்ப்பு மக்களிடம் செல்வாக்கடைந்த நிலையில் வைதிகத்தின் புதிய உத்தியாகக் கண்ணன் பகவானாகக் களம் இறக்கப்பட்டார். இதற்கு முன் வந்த சமயக் குரவர்கள் எல்லாம் மனிதரில் தெய்வ நிலை அடைந்தவர்களாகவும், இறைத் தூதுவர்களாகவும் இருக்க, கண்ணன் நானே கடவுள் என்றார். பசி, போர் ஆகியவற்றின் முன் சுற்றம், நட்பு, ஒழுக்கம், அறம் எதுவுமே சமமில்லை என்றார். யார், என்ன செய்தாலும் தானே செய்ததாகச் சொல்லிக் கொண்டார். இந்தப் புதிய உரை பகவத் கீதையாகப் பரவிய பின்னர் இதன் கவர்ச்சியில் மக்கள் மயங்கினர். வேதத்தின் நால்வருணம் என்ற கொடிய நஞ்சு பகவத் கீதையில் தேன் தடவிப் பரிமாறப்பட்டது.
மனிதர்கள் அடிப்படையில் மூன்று குணம் கொண்டவர்கள். மூர்க்க (ரஜோ) குணம், மந்த (தமோ) குணம், நல்ல (சாத்வீக) குணம் ஆகியவை. இவை இயற்கையில் (பிரகிருதி) அமைந்தவை. பிரபஞ்சத்தின் விதி இதுவே. அப்பிரபஞ்சமும் நானே என்று கண்ணனின் மொழியாக இந்தத் தேன் தடவிய பண்டத்தைக் கொடுத்து மனிதரில் வேற்றுமை உணர்வைத் தக்க வைத்துக் கொண்டது வைதீகம். அந்தத் தேன் என்பது வைதீகத்தின் அறிவுப் பொருளாகவோ, புழங்கு பொருளாகவோ என்றுமே இருந்ததில்லை. அது சாங்கியத்தில் இருந்து பெறப்பட்ட கோட்பாடே. சாங்கியவாதிகள் எண்ணியத்தில் நிலைபெற்றவர்கள். அறிவியல் விதிகளை அறிந்தவர்கள். அணுவின் உள்ளே நிகழ்வதை மெய்யியலாக வெளிப்படுத்தியவர்கள். ஒரு தனிமத்தின் மிகச்சிறிய அலகுப் பொருளின் கூறு தான் ஓர் அணு. ஒவ்வோர் அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர் மின்னிகளும் (எலக்ட்ரான்), எதிர்மின்னிகளும் (புரோட்டான்) இருக்கும். இவை மின்னூட்டம் உள்ளவை. இவை எண்ணிக்கையிலும், திறனிலும் சமமாக இருக்கும். இந்தச் சமநிலை தவறும் பட்சத்தில் அணுக்கருவின் சிதைவு ஏற்பட்டு, செயலூக்கம் பெற்றுப் பிற தனிமங்களை விஞ்சி நிற்கும். இது இன்றைய அறிவியல் விளக்கம். இதனை மறைபொருளாகக் கொண்ட சாங்கியத்தின் மெய்யியல் கோட்பாட்டைத் தான் வைதீகம் உட்கொண்டு நால் வருணத்தின் உட்கரு சிதையாமல் மாற்றிக் கண்ணனின் பெயரால் பகவத் கீதையாகப் பரிமாறியது. இது கடவுளின் பெயரால் மொழிந்ததெனக் கட்டமைப்பதற்காகக் கண்ணனை விஷ்ணுவின் அவதாரமாக ஆக்கி வைத்ததுடன், புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாகத் திரித்து விட்டார்கள். இது நேர் மின்னிகளையும், எதிர் மின்னிகளையும் இணைத்ததற்குச் சமம். அப்போதே சமநிலை தவறியிருக்க வேண்டும். ஆனால் புத்தரின் சாத்வீகம் இதைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதற்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை மீறி அடிப்படைச் சமநிலை தவறும் பட்சத்தில், நால்வருணக் கோட்பாடு, தன் கோட்டை கொத்தளங்களுடன் தரைமட்டமாகும்.
தொகுப்புரை
வள்ளுவர் வாழ்ந்த காலமும், வாழ்க்கை நிகழ்வுகளும் ஐயத்திற்கிடமின்றிக் கிடைத்திராத நிலையில், வள்ளுவரின் வாழ்க்கையாக நமக்குக் கிடைத்திருக்கும் வரலாறில், சான்றுகளின் அடிப்படையில் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியதே தற்போதைய நிலை.
சமண சமயத்தின் அறமும், பிற கோட்பாடுகளும் அதிகமாகப் பயின்று வருவது திருக்குறளில் தான். ஆகவே திருக்குறள், சைன சமய நூலே என்று அச்சமயத்தனர் கொண்டாடுகின்றனர். சமணம், பௌத்தம் போலவே ஆசீவகமும் வடபுலம் மட்டுமின்றித் தென்புலத்திலும் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்த ஒரு சமயம். ஆசீவகத்தின் கோட்பாடுகள் சங்க இலக்கியம் முதற்கொண்டு, கி.பி. 14ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் வரையும் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. திருக்குறளில் பயின்று வரும் அணுக் கொள்கையையும், ஏழு என்ற எண்ணின் ஆதிக்கத்தையும் வைத்து, திருக்குறள் ஆசீவக சமயத்தின் இலக்கியமே என்று அண்மைக்கால ஆசிவகம் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன.
திருக்குறள் மனுதர்மத்தின் வர்ணாசிரமக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆரியத்தையும், வடபுலத்தையும் பல்வேறு நிலைகளில் எதிர்க்கும் குறள்களை மேற்கோள் காட்டி, திருக்குறள் ஆரியத்திற்கும், வைதிகத்திற்கும் எதிரான தமிழ் கூறும் அறநூல் என்று தமிழறிஞர்கள் தங்களின் பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர். வடபுலப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கத்தான் வள்ளுவர் தமிழ் மக்களுக்கு அரணாக நின்று, அவர் காலத்து நன்னெறிகளைத் திரட்டித் திருக்குறளாகத் தந்தார் என்று கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை பூண்டு, எதிரிகளை அடையாளம் கொள்ளவேண்டிய தேவை விளங்கும்.
உலகின் அறக் கருத்துகள் எல்லாம் திரட்டிய ஒரு தொகுப்பாகத் திருக்குறள் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அறங்கூறும் குறள்களை மேற்கோள் காட்டி அறங்கூறும் சமயங்கள் பலவும் திருக்குறளைத் தத்தமது என்று சொந்தம் கொண்டாடி வருகின்றன. அவரவரின் எண்ணப்படி சொல்வதை எண்பிக்க, இருக்கின்ற ஒரே சான்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மட்டுமே. அதில் இருக்கும் சொல்லாட்சி, மொழிநடை, இடம்பெறும் பெயர்கள், உவமைகள், கதைகள், மேற்கோள், பழமொழி முதலானவற்றை வைத்துத் "திருவள்ளுவர் யார்?" என்று அறுதியிடும் முயற்சிகள் பன்னெடுங்காலமாக நிலவி வருகின்றன. தற்காலத்தில் உருவம், ஒருமை, ஒற்றுமை, மாந்தநேயம் ஆகிய பிம்பங்கள் சிதையுமளவில் கூட இவ்வேற்றுமைகள் உருவாக்கப் படுகின்றன. இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்தது திருக்குறளா, இத்தனை நூற்றாண்டுக் கால இடைவெளியா, எழுத்துருக்களின் வளர்ச்சி நிலையா, இடைச்செருகல்களா, உரை எழுதியோரின் உள்மன விகாரங்களா, அதிகார மாற்றங்களா, சமயச்சண்டைகளா என்று பன்னோக்கில் எழுந்து நிற்கும் வினாக்களுக்கு விடை காணும் முயற்சியில் இவ்வாய்வு பல முன்வரைவுகளைத் தொகுத்துள்ளது.
முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.
முனைவர் சிவ இளங்கோ
எண் 6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி
வெங்கட்ட நகர்
புதுச்சேரி 605011
இந்தியா
பேசி 9994078907
இமெயில் ilangosiva57@gmail.com
கருத்துகள்